புதன்கிழமை 14 நவம்பர் 2018

முழு அடைப்பு போராட்டம்: கர்நாடகத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

DIN | Published: 11th September 2018 09:41 AM

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் திங்கள்கிழமை (செப்.10) நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்தால், கர்நாடகத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தவிர  அத்தியாவசியப் பொருள்கள் மீதான விலை உயர்வு, டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு குறைந்து வருவதைத் தடுக்க தவறிய மத்திய பாஜக அரசைக் கண்டித்து, நாடு தழுவிய முழு அடைப்புப் போராட்டத்துக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி, இடதுசாரிகள் அழைப்பு விடுத்தன.
இந்த போராட்டத்துக்கு கர்நாடகத்தில் காங்கிரஸ்,  மஜத, இடதுசாரி கட்சிகள்,  கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு,  கர்நாடக விவசாயிகள் சங்கங்கள், அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் சங்கங்கள் உள்ளிட்ட ஏராளமான அமைப்புகள் ஆதரவு தெரிவித்திருந்தன.
போராட்டம்: முழு அடைப்புப் போராட்டம் திங்கள்கிழமை காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை கர்நாடகத்தின் அனைத்து மாவட்டங்களிலும்  நடைபெற்றது.  குறிப்பாக பெங்களூரு, தும்கூரு, ராமநகரம்,  மண்டியா, ஹாசன், தென் கன்னடம்,  சாமராஜ் நகர்,  மைசூரு, ஹுப்பள்ளி, பீதர், கலபுர்கி,  சிவமொக்கா,  ராய்ச்சூரு,  சிக்மகளூரு, பெல்லாரி, கோலார் உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்கள் முழுமையாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தன.
பெங்களூரில் ஆனந்த்ராவ் சதுக்கத்தில் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர்,  டவுன்ஹால் எதிரில் மஜத, சிபிஎம் கட்சியினர்,  மைசூரு வங்கி சதுக்கத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்தப் போராட்டத்தின்போது,  கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் தினேஷ் குண்டுராவ்,  பெட்ரோல், டீசல் விலையைக் கண்டித்து மாட்டுவண்டியில் பயணித்து போராட்டம் நடத்தினார்.  இதில், பெட்ரோல், டீசல் விலையைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. 
இயல்பு வாழ்க்கை முடக்கம்: முழு அடைப்பு காரணமாக மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அரசு,  தனியார் அலுவலகங்கள், தகவல் தொழில்நுட்ப அலுவலகங்கள்,  தொழிற்சாலைகள், அங்காடிகள், உணவகங்கள்,  அடுக்குமாடி வணிக வளாகங்கள் உள்ளிட்ட அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன.  வங்கிகள் உள்ளிட்ட மத்திய அரசு அலுவலகங்கள் வழக்கம் போல இயங்கின. மத்திய, மாநில அரசு அலுவலகங்களிலும் குறைந்த எண்ணிக்கையிலேயே ஊழியர்கள் வருகை தந்திருந்தனர்.
அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன.  அரசு மற்றும் தனியார் பேருந்துகள், வாடகைக் கார்கள், ஆட்டோக்கள், லாரிகள், தனியார் வாகனங்கள், வேன்கள் உள்ளிட்ட அனைத்து வகையான வாகனங்களும் இயக்கப்படவில்லை.  இதனால் சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.
திரையரங்குகள் மூடப்பட்டிருந்தன.  படப்பிடிப்புப் பணிகள் முழுமையாக ரத்துசெய்யப்பட்டிருந்தன.  பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டிருந்தன.  கெம்பே கெளடா பன்னாட்டு விமான நிலையத்துக்கு இயக்கப்பட்டு வரும் சொகுசுப் பேருந்துகள், வாடகைக் கார்கள் சேவையை நிறுத்தியிருந்தன.
பெங்களூரு, விதான செளதாவில் அரசு ஊழியர்கள் வராததால், வெறிச்சோடிக் காணப்பட்டது.  ரயில் சேவை வழக்கம்போல இயக்கப்பட்டது.  பெங்களூரு மெட்ரோ ரயில்கள் பயணிகள் இல்லாமல் இயக்கப்பட்டன.  இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முழுமையாக முடங்கியது. 
வன்முறை சம்பவங்கள்: உடுப்பியில் பன்னஞ்சி பகுதியில் பிரதமர் மோடிக்கு எதிராக முழக்கமிட்ட காங்கிரஸ் கட்சியினருக்கும், பாஜகவினருக்கும் இடையிலான வாக்குவாதம் முற்றி, கைகலப்பில் முடிந்தது.  இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டதில்,  பாஜக நகரத் தலைவர் பிரபாகர் பூஜாரி காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 
மங்களூரு,  தாவணகெரே,  ஹுப்பள்ளி,  கோலார்,  சிக்மகளூரு உள்ளிட்ட பல பகுதிகளில் தனியார் பேருந்துகள் மீது கல் வீசப்பட்டன.  மேலும்,  சில இடங்களில் கார்கள், இருசக்கர வாகனங்கள் மீதும் போராட்டக்காரர்கள் கல் வீசினர்.  கோலார்,  உடுப்பி,  மங்களூரு,  பாகல்கோட்,  பெலகாவி,  தென் கன்னடம், கோலார் மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சியினர் கட்டாயப்படுத்தி கடைகளை மூடினர்.  பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் சாலையில் டயர்களை கொளுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ், மஜத,  இடதுசாரி கட்சியினரை போலீஸார் கைதுசெய்து, பின்னர் விடுவித்தனர்.
பலத்த பாதுகாப்பு: பெங்களூரு, மைசூரு, மங்களூரு, பெல்லாரி, பீதர், கலபுர்கி, கோலார் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் உள்பட மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.  குறிப்பாக,  பாஜக ஆதரவு அதிகம் காணப்படும் கடலோர மாவட்டங்களான தென் கன்னடம், வட கன்னடம், உடுப்பி மாவட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. பெங்களூரில் மத்திய அரசு அலுவலகங்கள், வங்கிகள், ரயில் நிலையங்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள், அஞ்சலகங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது.
 

More from the section

பூப்பந்துப் போட்டி: இ.டி.வட்ட அணி வெற்றி
மக்களவைத் தேர்தல்: பெங்களூரு தெற்கு தொகுதியில் அனந்த்குமார் மனைவி போட்டி?
தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியின் 97-ஆவது ஆண்டுவிழா
விளையாட்டுகளை ஊக்குவிக்க நடவடிக்கை: துணை முதல்வர் ஜி.பரமேஸ்வர்
அனந்த்குமார் உடலுக்கு பிரதமர் மோடி மரியாதை