சனிக்கிழமை 17 நவம்பர் 2018

மேக்கேதாட்டு அணை விவகாரம்: பிரதமர் மோடியிடம் கர்நாடக அரசு முறையீடு

DIN | Published: 11th September 2018 09:42 AM

மேக்கேதாட்டு அணை பிரச்னையை சுமூகமாக தீர்க்க கர்நாடகம் மற்றும் தமிழக மாநிலங்களின் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யுமாறு பிரதமர் மோடியிடம் கர்நாடக அரசு முறையிட்டுள்ளது.
கர்நாடகத்தில் காவிரி ஆற்றுக்கு குறுக்கே கிருஷ்ணராஜர் அணை மற்றும் பிலிகுண்டுலு நீர் அளவை மையத்துக்கு இடைப்பட்ட பகுதியில் மேக்கேதாட்டு என்ற இடத்தில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு திட்டமிட்டு, அதற்கான திட்டவரைவு அறிக்கையை தயாரித்துள்ளது.
இந்த அறிக்கையை மத்திய அரசிடம் ஏற்கெனவே அளித்திருந்த கர்நாடக அரசு, அண்மையில் இத்திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கக் கோரி மத்திய நீர் ஆணையத்தில் சாத்தியக்கூறு அறிக்கையையும் அளித்துள்ளது. மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதற்கு ஆரம்பத்தில் இருந்தே ஆட்சேபம் தெரிவித்து வரும் தமிழக அரசு, அதற்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று மத்திய அரசுக்கு ஏற்கெனவே கோரிக்கை விடுத்துள்ளது.
இதனிடையே, தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அண்மையில் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில், மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதற்கு அனுமதி கோரி மத்திய நீர் ஆணையத்தில் கர்நாடக அரசு அளித்துள்ள சாத்தியக்கூறு அறிக்கையை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும், இந்த விவகாரத்தில் தாங்கள் உடனடியாக தலையிட வேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டிருந்தார். 
இதைத் தொடர்ந்து, புது தில்லியில் திங்கள்கிழமை கர்நாடக முதல்வர் குமாரசாமி, நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார், முன்னாள் பிரதமர் எச்.டி.தேவெ கெளடா, வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.வி.தேஷ்பாண்டே உள்ளிட்டோர் அடங்கிய கர்நாடக அரசுக் குழுவினர் பிரதமர் மோடியை சந்தித்து, மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தலையிடுமாறு கோரிகை மனு அளித்துள்ளனர். மேலும், ரூ.5,912 கோடியிலான மேக்கேதாட்டு அணை திட்டம் தொடர்பாக தமிழக அரசு எழுப்பியிருக்கும் ஆட்சேபணைகள் குறித்து விவாதித்து சுமூகத் தீர்வுகாண்பதற்காக தமிழகம் மற்றும் கர்நாடக அரசுகளின் கலந்தாலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யுமாறு பிரதமர் மோடியை கர்நாடக அரசுக் குழு கேட்டுக்கொண்டது. 
இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் கர்நாடக நீர்வளத் துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் கூறியது: மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடர்பான பிரச்னையைத் தீர்த்துக்கொள்ள கர்நாடகம் மற்றும் தமிழக முதல்வர்களின் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யுமாறு பிரதமர் மோடியை கேட்டுக்கொண்டிருக்கிறோம். தமிழகத்துடன் நல்லுறவை வைத்துக்கொள்ள கர்நாடக அரசு விரும்புகிறது. தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கும், அவர்களின் சந்தேகங்களை போக்குவதற்கும் கர்நாடக அரசு தயாராக உள்ளது.
மேக்கேதாட்டு அணை தொடர்பான சாத்தியக்கூறு அறிக்கைக்கு ஒப்புதல்பெற தன்னிச்சையாக செயல்படுவதாக தமிழக அரசு கூறும் புகாரில் உண்மையில்லை. காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் எந்த உத்தரவையும் கர்நாடக மீறவில்லை. 
மேக்கேதாட்டு அணை கட்டுவதால் காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்துக்கு அளிக்கப்படும் நீரின் அளவில் எவ்வித குறைவும் ஏற்படாது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி ஆக.31-ஆம் தேதி வரை காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் தர வேண்டும். 
ஆனால், இதற்கு மாறாக கர்நாடகம் 314.40 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்துக்கு வழங்கியுள்ளது என்றார் அவர்.
 

More from the section

சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு
இஸ்ரேல் நாட்டு விவசாய முறையை பின்பற்ற வேண்டும்: ஆளுநர் வஜுபாய் வாலா


கோலார் தங்கவயலில் தொடர் மின்வெட்டு: மக்கள் அவதி

பெங்களூரு தமிழ்ச் சங்கத் தேர்தல்: கர்நாடக உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை


வீடு புகுந்து திருட்டு:  இளைஞர் கைது