18 நவம்பர் 2018

86 வட்டங்கள் வறட்சியால் பாதிப்பு: அமைச்சர் தேஷ்பாண்டே

DIN | Published: 12th September 2018 08:24 AM

கர்நாடகத்தில் 86 வட்டங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த மாநில வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.வி.தேஷ்பாண்டே தெரிவித்தார்.
பெங்களூரு விதான செளதாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவை துணைக் குழுக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியது: மாநிலத்தில் தென்மேற்குப் பருவமழை ஒருசில பகுதிகளில் பெய்து வரும் நிலையில், 86 வட்டங்கள் வறட்சியால் சிக்கித் தவிக்கிறது. இதனால் சுமார் 8 ஆயிரம் கோடி மதிப்பிலான பயிர்கள் சேதமடைந்துள்ளன. வருவாய், வேளாண், தோட்டக்கலை, பட்டு வளர்ச்சி உள்ளிட்ட துறைகளின் சார்பில் மாநில அளவில் ஆய்வு செய்து, பயிர் சேத விவரங்கள் கண்டறிந்துள்ளோம். 
வறட்சியால் பாதிக்கப்பட்ட வட்டங்களில் செப்டம்பர் மாதத்திலும் மழை குறைவாக மழை பெய்து வரும் நிலையில், வரும் காலங்களிலும் மழை பெய்வதற்கான சாத்தியக் கூறுகள் மிகவும் குறைவாகவே உள்ளது. எனவே வறட்சியால் பாதிக்கப்பட்ட வட்டங்களில் குடிநீர், கால்நடை தீவனங்களுக்கு முன்னுரிமை அளிக்க திட்டமிட்டுள்ளோம்.
ஹொசப்பேட்டை, சென்னப்பட்டணா, கனகபுரா, பங்காருப்பேட்டை, கோலார், மாலூர், முள்பாகிலு, சீனிவாஸ்புரா, பாகேப்பள்ளி, சிக்பள்ளாபூர், சிந்தாமணி ஆகிய வட்டங்கள் உள்பட  தும்கூரு, சித்ரதுர்கா, தாவணகெரே சாம்ராஜ்நகர், மண்டியா, பல்லாரி, கொப்பள், ராய்ச்சூரு, கலபுர்கி, யாதகிரி, பீதர், பெலகாவி, பாகல்கோட்டை, விஜயபுரா, கதக், ஹாவேரி, தார்வாட், ஹாசன் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள ஒரு சில வட்டங்களும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன.
தென்மேற்குப் பருவமழைக்கு முன்பு 74.69 லட்சம் ஹெக்டேரில் விதைப்பு செய்ய திட்டமிட்டிருந்தோம். ஆனால், 62.88 லட்சம் ஹெக்டேரில் மட்டுமே விதைகள் நடவு செய்ய முடிந்தது. அதில் 15 லட்சம் ஹெக்டேரில் விளைந்த பயிர்கள் காய்ந்துள்ளன. 
திங்கள்கிழமை பிரதமரிடம் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகள் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடகு மாவட்டத்தில் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உதவுவதாக பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். உயிரிழந்தவர்களின் பட்டியலை விரைவில் பிரதமருக்கு அனுப்பிவைப்போம் என்றார்.

More from the section

"குழந்தைகளின் செவித் திறனை சோதிப்பது அவசியம்'
வாக்களிக்க ஊக்குவிக்க வேண்டும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சஞ்சீவ்குமார்
வங்கி தேர்வுக்கு இலவச பயிற்சி
அசையா சொத்துப் பதிவுக்கு இணையதள சேவை: முதல்வர் தொடக்கிவைப்பு
பிரச்னைகளில் சிக்கித் தவிக்கும் பெங்களூரு தமிழ்ச் சங்கம்!