கர்நாடக காங்கிரஸ் உள்கட்சி விவகாரம்: ராகுல் காந்தி தலைமையில் இன்று ஆலோசனை

கர்நாடக காங்கிரஸில் ஏற்பட்டுள்ள உள்கட்சி பிரச்னையால் மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் பல்வேறு

கர்நாடக காங்கிரஸில் ஏற்பட்டுள்ள உள்கட்சி பிரச்னையால் மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளதை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் தில்லியில் புதன்கிழமை காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெறுகிறது.
முதல்வர் குமாரசாமி தலைமையில் கர்நாடகத்தில் மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆட்சிக்கு வந்து 4 மாதங்களே ஆகியுள்ள நிலையில், கூட்டணி அரசை அசைத்து பார்க்கும் வகையில் பெலகாவி மாவட்ட காங்கிரஸ் கட்சியில் ரமேஷ் மற்றும் சதீஷ் ஜார்கிஹோளி சகோதரர்கள் மற்றும் லட்சுமி ஹெப்பாள்கர் அணிகளுக்கு இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு, அது மோதலாக வெடித்தது. 
இதனால் வெறுப்படைந்த ஜார்கிஹோளி சகோதரர்கள், காங்கிரஸ் கட்சிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார்கள். அமைச்சர் டி.கே.சிவக்குமாரின் ஆதரவில் லட்சுமி ஹெப்பாள்கரை கட்டுப்படுத்தத் தவறினால் தனக்கு ஆதரவாக உள்ள 14 எம்எல்ஏக்களுடன் பாஜகவில் இணையப் போவதாக ஜார்கிஹோளி சகோதரர்கள் சூசகமாக தெரிவித்தனர். இது கர்நாடக அரசியலில் புயலை கிளப்பியது. 
காங்கிரஸில் ஏற்பட்டுள்ள குழப்பத்தை பயன்படுத்தி காங்கிரஸ் மற்றும் மஜத எம்எல்ஏக்களை பாஜகவுக்கு இழுக்க தாமரை ஊடறுப்பு திட்டத்தை அக்கட்சி செயல்படுத்த முயன்றது. இதற்காக முன்னாள் அமைச்சர் சி.பி.யோகேஸ்வர் மூலம் பணமுதலைகளை இறக்கியதாகக் கூறப்படுகிறது. இதை காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பலர் பகிரங்கமாகவே வெளிப்படுத்தினர். 
முதல்வர் குமாரசாமியும் இதே குற்றச்சாட்டை பாஜக மீது சுமத்தியிருந்தார். இந்நிலையில், பாஜகவின் அரசியல் வியூகத்தை முறியடிக்கவும், பெலகாவி மாவட்ட காங்கிரஸில் எழுந்துள்ள கருத்துமோதல்களை சமன்படுத்தவும், கூட்டணி ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளவும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளரும், கட்சியின் மாநில பொறுப்பாளருமான கே.சி.வேணுகோபால் தலைமையில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனாலும் பலன் கிடைக்காததால் முதல்வர் குமாரசாமி மற்றும் ஐரோப்பா சுற்றுப்பயணத்தில் இருந்து திரும்பிய முன்னாள் முதல்வர் சித்தராமையா இருவரும் சமரசமுயற்சிகளில் தனித்தனியே ஈடுபட்டனர். 
இது ஓரளவுக்கு நல்ல பலனை தந்திருந்தாலும், பிரச்னைக்கு முற்றுப்புள்ளிவைக்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து, இப் பிரச்னையில் நேரடியாக இறங்க அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ராகுல் காந்தி தலையிட முடிவு செய்துள்ளார். 
கர்நாடகத்தில் நடந்துவரும் மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் ஏற்பட்ட குழப்பத்தை தீர்க்க தில்லியில் புதன்கிழமை கர்நாடக காங்கிரஸ் முன்னணித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்துக்கு ராகுல் காந்தி ஏற்பாடு செய்திருக்கிறார். இக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மக்களவை காங்கிரஸ் குழுத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் முதல்வர் சித்தராமையா, துணைமுதல்வர் ஜி.பரமேஸ்வர், மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ், செயல்தலைவர் ஈஸ்வர்கண்ட்ரே, அமைச்சர் டி.கே.சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவிருக்கிறார்கள். 
இதற்காக அனைத்து தலைவர்களும் பெங்களூரிலிருந்து தில்லிக்கு செவ்வாய்க்கிழமை புறப்பட்டிருக்கிறார்கள். பெலகாவி மாவட்ட காங்கிரஸ் கட்சியில் எழுந்துள்ள பிரச்னை தவிர, இம்மாத இறுதியில் நடக்கவிருக்கும் அமைச்சரவை விரிவாக்கத்தின்போது யாருக்கு வாய்ப்பளிப்பது, வாரியங்கள், கழகங்களின் தலைவர்களாக யாரை நியமிப்பது, அடுத்த மாதம் சட்டமேலவையின் 3 இடங்களுக்கு நடக்கும் இடைத் தேர்தலில் யாருக்கு வாய்ப்பளிப்பது என்பது குறித்தும் விவாதிக்கப்படவிருக்கிறது. 
மேலும் மக்களவைத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள், கூட்டணி கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு, வேட்பாளர் பட்டியல் குறித்தும் ஆலோசனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, கர்நாடகத்தில் நிகழ்ந்துவந்த அரசியல் பிரச்னை, தில்லிக்கு இடம் பெயர்ந்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com