கூட்டணி அரசில் உருவான குழப்பத்துக்கு பாஜகவே காரணம்: மஜத

காங்கிரஸ்-மஜத கூட்டணி அரசில் உருவாகியுள்ள குழப்பத்துக்கு பாஜகவே காரணம் என மதச் சார்பற்ற ஜனதா தள மாநிலத் தலைவர் எச்.விஸ்வநாத் தெரிவித்தார்.

காங்கிரஸ்-மஜத கூட்டணி அரசில் உருவாகியுள்ள குழப்பத்துக்கு பாஜகவே காரணம் என மதச் சார்பற்ற ஜனதா தள மாநிலத் தலைவர் எச்.விஸ்வநாத் தெரிவித்தார்.
இதுகுறித்து பெங்களூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசில் ஏற்பட்டுள்ள திடீர் குழப்பத்துக்கு பாஜகவே காரணம். பாஜக தலைவர்களின் தேவையில்லாத அரசியல் நடவடிக்கைகள் மற்றும் பதவியைக் கைப்பற்ற வேண்டும் என்ற ஆர்வம் காரணமாக கூட்டணி ஆட்சியில் தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். 
பாஜகவின் முயற்சி ஒருபோதும் பலிக்காது. மாநிலத்தின் ஆட்சியைக் கைப்பற்ற பாஜக முனைந்துள்ளது. கூட்டணியை ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்பது பாஜகவின் திட்டம் பகல் கனவாகத்தான் முடியும். கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் மஜதவால் எந்த பிரச்னையும் இல்லை. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருசில எம்எல்ஏக்கள் தெரிவித்தது அவர்களின் தனிப்பட்ட  கருத்துகளாகும். 
மஜதவில் கருத்து வேறுபாடுகள் இல்லை. காங்கிரஸ் கட்சியில் உருவாகியுள்ள கருத்துவேறுபாடுகளை கூட்டணி அரசின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் சித்தராமையா, துணைமுதல்வர் ஜி.பரமேஸ்வர், மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் ஆகியோர் சரிசெய்துவிடுவார்கள்.
குடகு மாவட்டத்தில் இயற்கை பேரிடர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க பாஜக தலைவர்கள் யாரும் அக்கறை செலுத்தவில்லை. மக்கள் பிரச்னைகளைத் தீர்ப்பதைவிட அதிகாரத்தைக் கைப்பற்ற பாஜக அதிக அக்கறை காட்டுகிறது. பாஜக தலைவர்களின் நடவடிக்கையே அதை வெளிப்படுத்துகிறது. இப்போதும் காலம் கடந்துவிடவில்லை. குடகு மாவட்டத்தை மறுசீரமைக்க மத்திய அரசிடம் இருந்து நிதி ஆதாரத்தை பெற்றுத்தர பாஜக முன்வர வேண்டும்.
எதிர்க்கட்சியாக பாஜக ஆக்கப்பூர்வமாக செயல்படவிலை. தாமரை ஊடறுப்புத் திட்டத்தின் வாயிலாக காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்களை விலை கொடுத்து வாங்க பாஜக முயற்சிப்பது அரசியலமைப்புச் சட்டத்தை கேலிக்கூத்தாக்குவதாகும். மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு அடுத்த 5 ஆண்டுகாலத்துக்கும் ஆட்சி நடத்தும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com