முதல்வர் குமாரசாமியிடம் பேசியது என்ன? முன்னாள் அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி விளக்கம்

முதல்வர் குமாரசாமியுடனான சந்திப்பின் போது மஜத- காங்கிரஸ் கூட்டணி அரசில் துணை முதல்வர் பதவியை

முதல்வர் குமாரசாமியுடனான சந்திப்பின் போது மஜத- காங்கிரஸ் கூட்டணி அரசில் துணை முதல்வர் பதவியை  கேட்கவில்லை; பெல்லாரி மாவட்டத்துக்கு பழங்குடியின சமுதாயத்தைச் சேர்ந்தவருக்கு அமைச்சர் பதவி வழங்குமாறு கோரிக்கை விடுத்தோம் என்றார் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி.
காங்கிரஸ் கட்சிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ள உள்ளாட்சி அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோளி, அவரது சகோதரும், காங்கிரஸ் முன்னாள் அமைச்சருமான சதீஷ் ஜார்கிஹோளி இருவரும் பெங்களூரில் உள்ள நட்சத்திர விடுதியில் செவ்வாய்க்கிழமை முதல்வர் குமாரசாமியைச் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின்போது, பாஜகவின் ஆசை வார்த்தைக்கு இணங்கி 14 காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் பாஜகவில் இணைவதாக வெளியான செய்தி குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டணி ஆட்சியைக் கவிழ்க்கும் எந்த முயற்சியிலும் ஈடுபடவேண்டாம் என்று ஜார்கிஹோளி சகோதரர்களை முதல்வர் குமாரசாமி கேட்டுக்கொண்டார்.
இந்த சந்திப்புக்குப் பிறகு, சதீஷ் ஜார்கிஹோளி செய்தியாளர்களிடம் கூறியது: 
முதல்வர் குமாரசாமியைச் சந்தித்து பேசியுள்ளோம். இந்த சந்திப்பின் போது, துணை முதல்வர் பதவியை வழங்குமாறு முதல்வர் குமாரசாமியிடம் கேட்கவில்லை. ஆனால், பெல்லாரி மாவட்டத்துக்கு பழங்குடியினர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அமைச்சர் பதவி வழங்குமாறு முதல்வர் குமாரசாமிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளோம். இதுதவிர, பெலகாவி மாவட்டம் தொடர்பான அரசியல் குறித்தும் அலசினோம். 
எதிர்காலத்தில் இதுபோன்ற சூழல் உருவாகாமல் தவிர்ப்பது குறித்து விவாதித்தோம். எனவே, முதல்வர் குமாரசாமியைச் சந்தித்துள்ளதன் மூலம் இப்பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது. பெலகாவியில் நடந்த ஒருசில சம்பவங்கள்தான் கூட்டணி ஆட்சியை அச்சுறுத்தும் நிலைக்கு தள்ள காரணமாக அமைந்துவிட்டதை குமாரசாமியின் கவனத்துக்கு கொண்டுவந்தேன். பெலகாவி மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் அதிகாரிகளின் பணியிட மாற்றங்களின் போது தன்னிடம் யோசனை கேட்குமாறு கேட்டுக் கொண்டேன். வேறு எந்த கோரிக்கையையும் நாங்கள் முதல்வர் குமாரசாமியிடம் முன்வைக்கவில்லை. ஆனால், எங்கள் பிரச்னையை தீர்க்குமாறு கேட்டுக் கொண்டுள்ளொம். அவற்றை நிறைவேற்றித் தருவதாக முதல்வர் குமாரசாமி உறுதி அளித்துள்ளர் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com