ஸ்டெர்லைட்  விவகாரம்:  தமிழக நலனுக்கு எதிரான நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும்

ஸ்டெர் லைட் விவகாரத்தில் தமிழக நலனுக்கு எதிரான நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும் என

ஸ்டெர் லைட் விவகாரத்தில் தமிழக நலனுக்கு எதிரான நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் கேட்டுக் கொண்டார்.
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவைச் சந்தித்து, தமிழக அரசியல் நிலைமை, கட்சி நடவடிக்கைகள் குறித்து பேசிய பிறகு செய்தியாளர்களிடம் டி.டி.வி. தினகரன் கூறியது:
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் தொடர்பான வழக்கு விசாரணை அண்மையில் முடிந்துள்ளது.  விரைவில் நல்ல தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கிறோம்.  சசிகலாவுக்கு பெங்களூரில் நிலவும் சீதோஷ்ண மாற்றம் தொடர்பான சில பாதிப்புகள் இருந்தன. தற்போது அவர் நலமாக உள்ளார். அவரது உடல்நிலை குறித்து வரும் வதந்திகள் தவறானவை.
தூத்துக்குடியில் சுவாசிக்க நல்ல காற்று வேண்டும்,  சுகாதாரம் வேண்டும் என்று போராடிய மக்களை சுட்டு தள்ளியது காவல் துறை.  உயிரிழந்தவர்கள் யாரும் தீவிரவாதிகள் கிடையாது.  தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க எடுக்கப்படும் முயற்சி தவறானது.  இந்தத் திட்டத்தை  மத்திய அரசு கைவிட வேண்டும். காற்று மாசு சீர்கேடு அடைவதால்தான் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதில் அரசியல் உள்நோக்கம் கிடையாது. 
தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கைப் பராமரிக்க வேண்டிய காவல் துறையினரால்தான் பிரச்னை உருவாகிறது.  ஸ்டெர்லைட் போன்ற சம்பவங்கள் இதற்கு உதாரணம்.  இதில் உளவுத் துறை முற்றிலுமாக செயல் இழந்துள்ளது. இந்தியாவில் எங்கேயும் கேள்விப்படாத வகையில் குட்கா முறைகேடு விவகாரத்தில் காவல் துறை தலைவர் வீட்டிலே சோதனை நடைபெற்றது.  இவை அனைத்தும் தவறான நிகழ்வாகத்தான் நடந்து கொண்டிருக்கிறது.
வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளராக தம்பிதுரை களமிறங்கும் வாய்ப்பு உள்ளது.  கடந்த இரண்டு மாதங்களாக வரும் மக்களவைத் தேர்தலை நோக்கி அமமுக பயணித்துக் கொண்டிருக்கிறது.  
தமிழகம் முழுவதும் 2 கோடி பொதுமக்களை கட்சியில் உறுப்பினராகச் சேர்க்க வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருகிறோம். 
அக்.30-ஆம் தேதிக்குள் உறுப்பினர்களை கட்சியில் சேர்க்கும் பணி நிறைவடைந்து, அனைவருக்கும் அட்டைகள் வழங்கப்படும்.  திருவாரூர், திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் அமமுக நிச்சயம் வெற்றி பெறும்.
தமிழகத்தில்தான் 69 சதவீத இட ஒதுக்கீடு உள்ளது.  இதன்மூலம் சமூகநீதி பாதுகாக்கப்பட்டது.  34 ஆண்டுகளாக பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் படித்து நல்ல நிலையை அடைந்து வருகின்றனர்.  கல்லூரியில் படித்து மருத்துவர்களான பலர் தற்போது வெளிநாட்டில் வேலை செய்து வருகின்றனர்.  இதை ஒடுக்க வேண்டும் என்ற நோக்கில் குறுக்கு வழியில் நீட் என்ற ஆயுதத்தை மத்திய அரசு பயன்படுத்தி வருகிறது என்றார். 
 சசிகலாவைச் சந்திக்க தினகரனுடன்  விவேக்,  எம்.ராமச்சந்திரன்,  சசிகலாவின் நேர்முக உதவியாளர் கார்த்திகேயன், சசிகலாவின் வழக்குரைஞர் அசோகன் ஆகியோர் சென்றனர்.  இந்த சந்திப்பின்போது, தமிழகத்தின் அரசியல் நிலைமை, கட்சியின் நடவடிக்கைகள் குறித்து தீவிர ஆலோசனை நடத்தப்பட்டது.  டி.டி.வி.தினகரனை தொடர்ந்து,  நடிகரும் திருவாடானை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான கருணாஸ் சசிகலாவை சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com