அமைச்சரவையில் யாருக்கு வாய்ப்பு? காங்கிரஸ் செயல் தலைவர்  ஈஸ்வர் கண்ட்ரே

அமைச்சரவையில் யாருக்கு வாய்ப்பளிப்பது என்பதை கட்சி மேலிடத் தலைவர்கள்தான் முடிவு செய்வார்கள் என

அமைச்சரவையில் யாருக்கு வாய்ப்பளிப்பது என்பதை கட்சி மேலிடத் தலைவர்கள்தான் முடிவு செய்வார்கள் என கர்நாடக காங்கிரஸ் செயல் தலைவர் ஈஸ்வர் கண்ட்ரே தெரிவித்தார்.
இதுகுறித்து வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: மாநிலத்தில் காங்கிரஸ்- மஜத கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. கூட்டணி அரசை கவிழ்த்து, மீண்டும் ஆட்சியைப் பிடிக்க பாஜக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. பதவி ஆசையைக்காட்டி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை பாஜகவுக்கு இழுக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆனால், அவர்களின் ஆசை வார்த்தைக்கு மயங்கி எம்.எல்.ஏ.க்கள் யாரும் பாஜகவில் இணைய மாட்டார்கள். காங்கிரஸில் அதிருப்தி அடைந்துள்ள எம்.எல்.ஏ.க்கள் சிலர் மும்பையில் உள்ள சொகுசு விடுதியில் தங்கியுள்ளதாகக் கூறப்படுவதில் உண்மையில்லை. ஜனநாயகத்தை படுகொலை செய்து, பின்கதவு வழியாக ஆட்சியைப் பிடிக்க முயலும் பாஜகவுக்கு, மக்களவைத் தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் கற்பிப்பார்கள்.
காங்கிரஸ் கட்சியில் எந்த பிளவுமில்லை. அதிருப்தி அடைந்துள்ள எம்.எல்.ஏ.க்கள் ஒரு சிலருக்கு அமைச்சராகும் ஆசை உள்ளதை மறுக்க முடியாது. அதற்காக ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சிக்கு யாரும் துணைபோக மாட்டார்கள். அமைச்சரவை விரிவாக்கம் குறித்து கட்சியின் மேலிடத் தலைவர்கள் முடிவு செய்வார்கள்.
மேலும் மத்தியில் ஆளும் பாஜக அரசு விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பச்சைப் பயறு உள்ளிட்ட பருப்புகளின் விலை வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில், ஆதரவு விலையை மத்திய அரசு அறிவிக்க வேண்டும். குவிண்டால் ரூ. 6,975 என்ற விலையில் 1 லட்சம் டன் பச்சைப் பயறுகளை விவசாயிகளிடமிருந்து வாங்க உள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது. இதற்கு மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com