எதிர்க்கட்சிகளின் கலகத்தை எதிர்கொள்ளுமா கூட்டணி அரசு?

கர்நாடகத்தில் நிகழ்ந்துவரும் அரசியல் கலகங்கள் மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

கர்நாடகத்தில் நிகழ்ந்துவரும் அரசியல் கலகங்கள் மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சிகளை கூட்டணி அரசு எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது என்பதே அரசியல் வட்டாரத்தில் தற்போது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வர் குமாரசாமி தலைமையிலான மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு கடந்த மே 23-ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டது. ஆட்சிப் பொறுப்புக்கு வந்து 122 நாள்கள் நிறைவடைந்துள்ள நிலையில், ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள போராடவேண்டிய நிலை முதல்வர் குமாரசாமிக்கு வந்துள்ளது. 
அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, வயதை காரணம் காட்டி கட்சி தன்னை ஓரங்கட்டலாம் என்று கருதும் எடியூரப்பா, அதற்குள் முதல்வர் பதவியை கைப்பற்ற தீவிரமாக முயற்சித்து வருகிறார். மக்களவைத் தேர்தலில் 28-இல் 25 இடங்களைக் கைப்பற்ற இலக்கு நிர்ணயித்திருக்கும் பாஜக, மஜத-காங்கிரஸ் கூட்டணி நீடித்தால் இது சாத்தியமாகாது என்பதை அறிந்துள்ளது. 
அதன்காரணமாகவே, நவம்பர் மாதத்துக்குள் கூட்டணியை உடைக்குமாறு எடியூரப்பாவுக்கு பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா வழிகாட்டுதல் வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்காகவே, காங்கிரஸ்- மஜத கூட்டணியில் ஏதாவது கலகம் ஏற்படுமா? என்று பாஜக காத்துக் கொண்டிருக்கிறது. 
இந்தசூழலில், பெலகாவி மாவட்ட காங்கிரஸ் கட்சியில் அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோளி, அவரது சகோதரரும், முன்னாள் அமைச்சருமான சதீஷ் ஜார்கிஹோளி இருவரும் இணைந்து பெலகாவி மாவட்ட காங்கிரஸ் மற்றும் ஆட்சி நிர்வாகத்தில் அமைச்சர் டி.கே.சிவக்குமாரின் தலையீட்டை எதிர்த்தும், லட்சுமி ஹெப்பாள்கரின் ஆதிக்கத்தை எதிர்த்தும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக போர்க்கொடித் தூக்கினர்.
தங்களுக்கு 14 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாகவும், கோரிக்கையை நிறைவேற்றாவிடில் கர்நாடக அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்று ஜார்கிஹோளி சகோதரர்கள் கூறியது, கூட்டணி ஆட்சியை கவிழ்க்கும் நிலைக்கு தள்ளியது. 
இதனிடையே, ஜார்கிஹோளி சகோதரர்களை முதல்வர் குமாரசாமி, முன்னாள் முதல்வர் சித்தராமையா, காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோர் சமாதானப்படுத்தி, ஒருசில வாக்குறுதிகளைக் கொடுத்ததன் விளைவாக அப்பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது. 
இதனிடையே,  பண உதவியுடன் கூட்டணி ஆட்சியைக் கவிழ்க்க திரைமறைவு வேலைகளில் ஈடுபடுவதாகவும், மஜத எம்எல்ஏக்களை விலைபேசி வருவதாகவும் பாஜகவுக்கு எதிராக முதல்வர் குமாரசாமி பகிரங்கமாக குற்றம்சாட்டினார். ஆட்சிக் கவிழ்ப்புக்கு பாஜகவும் தேதி குறித்துவிட்டது. இந்நிலையில், காங்கிரஸ், மஜத தலைவர்களின் முயற்சியால் அது தடுத்து நிறுத்தப்பட்டது. 
ஆட்சி கவிழ்ப்பு முயற்சி நடப்பதால், அதிகாரிகள் மெத்தனமாக நடந்து கொள்வதாக முதல்வர் குமாரசாமி ஏற்கெனவே கருத்து தெரிவித்திருந்தார். அதிகாரிகளின் மெத்தனம் ஆட்சி நிர்வாகத்தை வெகுவாக பாதித்துவிட்டதால், மக்களிடையே அரசு மீது அதிருப்தி ஏற்பட தொடங்கியது. இதைத் தாங்கிக் கொள்ள முடியாத முதல்வர் குமாரசாமி, பாஜகவின் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க தீவிரம்காட்டத் தொடங்கினார்.
இதனிடையே, ஹாசன் மாவட்டத்தின் சென்னராயப்பட்டணாவில் வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் குமாரசாமி,"கூட்டணி அரசை செயல்படவிடாமல் தடுத்துவரும் பாஜகவுக்கு எதிராக மக்கள் கலகம் செய்ய இந்த புண்ணிய பூமியில் இருந்து அழைப்புவிடுக்கிறேன்' என்று கேட்டுக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து, பெங்களூரில் உள்ள பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பாவின் வீட்டை வியாழக்கிழமை முற்றுகையிட்ட காங்கிரஸ், மஜத தொண்டர்கள், அவரது ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியை கண்டித்து முழக்கமிட்டனர். இதை சற்றும் எதிர்பார்க்காத பாஜகவினர், முதல்வர் குமாரசாமியின் பேச்சால் கலக்கமடைந்துள்ளனர். 
முதல்வர் குமாரசாமியின் பேச்சுக்கு அவர் மீது தேச துரோக வழக்குத் தொடரவேண்டும் என்று வலியுறுத்திய கையோடு, கர்நாடக டிஜிபி நீலமணி ராஜுவிடம் புகார் அளித்துள்ளது. மேலும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் முதல்வர் குமாரசாமியின் பேச்சை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
முதல்வராக தொடரும் தகுதியை குமாரசாமி இழந்துவிட்டார், அவரது ஆட்சியைக் கலைக்க வேண்டுமென்று ஆளுநர் வஜுபாய் வாலாவிடமும் பாஜக தலைவர்கள் புகார் அளித்துள்ளனர். முதல்வர் குமாரசாமியிடம் இருந்து ஆட்சியைப் பறித்துக்கொள்ள பாஜகவும், பாஜகவிடம் இருந்து ஆட்சியைப் பாதுகாத்துக்கொள்ள மஜதவும் போராடி வருகின்றன.
மஜத மற்றும் காங்கிரஸ் கூட்டணியால் அண்மையில் நடந்துமுடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் எதிர்பார்த்த வெற்றியை ஈட்ட முடியாமல் பாஜக தவித்து வருகிறது. சட்ட மேலவையில் காலியாக இருக்கும் இடங்களுக்கு நடக்கும் தேர்தலிலும் மஜத-காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெறும் நிலை உள்ளது.
இதேநிலை நீடித்தால், மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்காது என்ற அச்சம் அக்கட்சி தலைவர்களை வாட்டிவதைத்து வருகிறது. அதற்காக ஏதாவது காரணத்தை காட்டி மஜத-காங்கிரஸ் கூட்டணியை உடைக்க பாஜக தீவிரம் காட்டிவருகிறது. ஹவாலா முறைகேட்டை காரணம் காட்டி, அமலாக்கத் துறையின் மூலம் காய்களை நகர்த்தி கூட்டணி ஆட்சி அமைய முக்கிய காரணமாக இருந்த அமைச்சர் டி.கே.சிவக்குமாரை கைது செய்துவிட்டால், கூட்டணி ஆட்சி கலைந்துவிடும் என்று பாஜக நினைத்தது. ஆனால், அதை செயல்படுத்த முடியவில்லை. இந்நிலையில், முதல்வர் குமாரசாமியின் "கலக' வார்த்தையை பிடித்துக்கொண்டு ஆட்சிக் கவிழ்ப்புக்கு சட்ட ரீதியான போராட்டத்தில் ஈடுபட பாஜக முடிவுசெய்துள்ளது. மக்களவைத் தேர்தல் முடியும் வரை கூட்டணி ஆட்சிக்கு எந்தவித பாதகமும் வந்துவிடக் கூடாது என்று கர்நாடக காங்கிரஸ் தலைவர்களுக்கு கண்டிப்பான உத்தரவை அளித்துள்ள அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, கர்நாடகத்தில் மஜத-காங்கிரஸ் கூட்டணி தொடர்வதை பெரிதும் விரும்புகிறார். 
மக்களவைத் தேர்தலில் இருகட்சிகளும் கூட்டணி அமைத்துபோட்டியிடுவதாக அறிவித்துள்ளது. எனவே, குறைந்தபட்சம் அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் முடியும் வரையாவது கூட்டணியையும் ஆட்சியையும் தக்கவைத்துக் கொள்ள காங்கிரஸ் விரும்புகிறது. இதன்காரணமாகவே, மஜத மற்றும் பாஜக இடையிலான பதவிச் சண்டையில் தலையிடாமல் பட்டும் படாமல் காங்கிரஸ் அரசியல் நடத்திவருகிறது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். பதவி சண்டையில் மக்கள் நலன் பாதிக்கப்படுவதுதான் சமூகஆர்வலர்களின் கவலையாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com