கலகத்தில் ஈடுபட மக்களைத் தூண்டியதாக முதல்வர் குமாரசாமிக்கு எதிராக ஆளுநர், டி.ஜி.பி.யிடம் பாஜக புகார்

பாஜகவுக்கு எதிராக கலகத்தில் ஈடுபடுமாறு மக்களுக்கு அழைப்பு விடுத்த முதல்வர் குமாரசாமி மீது

பாஜகவுக்கு எதிராக கலகத்தில் ஈடுபடுமாறு மக்களுக்கு அழைப்பு விடுத்த முதல்வர் குமாரசாமி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கர்நாடக ஆளுநர், டி.ஜி.பி.யிடம் அந்த மாநில பாஜக புகார் அளித்துள்ளது.
கர்நாடகத்தில் மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைக் கலைக்க பாஜக தொடர்ந்து முயற்சித்து வருவதால், ஆத்திரமடைந்துள்ள முதல்வர் குமாரசாமி,  ஹாசன் மாவட்டம் சென்னராயப்பட்டணாவில் செப்.20-ஆம் தேதி கூட்டத்தில் பேசிய போது, " கூட்டணி அரசை செயல்படவிடாமல் தடுத்துவரும் பாஜகவுக்கு எதிராக மக்கள் கலகம் செய்ய இந்த புண்ணிய பூமியில் இருந்து அழைப்புவிடுக்கிறேன்' என்றார்.
இந்த நிலையில்,  பாஜகவுக்கு எதிராக கலகத்தில் ஈடுபடுமாறு மக்களைத் தூண்டிவிடுவதால்,  முதல்வர் குமாரசாமி மீது தேசத் துரோக வழக்குத் தொடர வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது.
டி.ஜி.பி.யிடம் புகார்:  இதனிடையே, எதிர்க்கட்சித் துணைத் தலைவர் கோவிந்த் கார்ஜோள், பாஜக மாநில பொதுச் செயலாளர் ஷோபா கரந்தலஜே தலைமையிலான பாஜகவினர் பெங்களூரில் வெள்ளிக்கிழமை கர்நாடக டி.ஜி.பி. நீலமணி ராஜூவைச் சந்தித்து முதல்வர் குமாரசாமிக்கு எதிராக புகார் மனு அளித்தனர். 
அதில்,  ஆட்சியைக் கவிழ்க்க முயற்சித்தால் மக்கள் கலகத்தில் ஈடுபட வேண்டும் என்று முதல்வர் குமாரசாமி தூண்டியிருக்கிறார்.  மேலும்,  எதிர்க்கட்சித் தலைவர் எடியூரப்பாவின் வீட்டை மஜத மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தினர். அப்போது, எடியூரப்பாவைப் பாதுகாக்க போலீஸார் வரவில்லை.  முதல்வர் குமாரசாமி மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கேட்டுக் கொண்டுள்ளனர்.
போராட்டம்: பெங்களூரு, மைசூரு,  மங்களூரு, பெல்லாரி, பெலகாவி, சிவமொக்கா, சிக்கமகளூரு, உடுப்பி, கார்வார் உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு இடங்களில் முதல்வர் குமாரசாமியைக் கண்டித்து பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  பெங்களூரில் உள்ள மைசூரு வங்கி சதுக்கத்தில் முன்னாள் துணை முதல்வர் ஆர்.அசோக் தலைமையில் பாஜக தொண்டர்கள் போராட்டம் நடத்தினர். 
ஆளுநரிடம் புகார்:  பெங்களூரு, ஆளுநர் மாளிகையில் வெள்ளிக்கிழமை ஆளுநர் வஜுபாய் வாலாவைச் சந்தித்த மத்திய அமைச்சர் சதானந்த கெளடா தலைமையிலான பாஜகவினர்,  முதல்வர் குமாரசாமிக்கு எதிராக புகார் மனு அளித்தனர்.  அதில் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக முதல்வர் செயல்பட்டுவருவதால்,  இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 121, 121ஏ, 122, 123, 124ஏ-இன்கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர்,  எதிர்க்கட்சி துணைத் தலைவர் கோவிந்த் கார்ஜோள், முன்னாள் துணை முதல்வர் ஆர்.அசோக், எம்.பி.க்கள் பி.சி.மோகன், ஷோபா கரந்தலஜே, எம்.எல்.ஏ.க்கள் அரவிந்த் லிம்பாவளி, சி.எம்.உதாசி, சுரேஷ்குமார், வி.சோமண்ணா, எம்.பி.ரேணுகாச்சார்யா உள்ளிட்ட  பலர் உடனிருந்தனர்.
இதைத் தொடர்ந்து,  மத்திய அமைச்சர் சதானந்த கெளடா, செய்தியாளர்களிடம் கூறியது: 
அரசியலமைப்புச் சட்டத்துக்கு உள்பட்டு யார் மீதும் பகைமை உணர்வு இல்லாமல் ஆட்சி நடத்துவேன் என்று பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட முதல்வர் குமாரசாமி, அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராகச் செயல்பட்டு வருகிறார். மக்களிடையே கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசிய முதல்வர் குமாரசாமி மீது குற்றவியல் ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.  புகாரைப் பரிசீலித்து தகுந்த நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் உறுதி அளித்துள்ளார் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com