காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் யாரும் பா.ஜ.க.வுக்கு செல்லமாட்டார்கள்: தினேஷ் குண்டுராவ்

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் யாரும் பாஜகவுக்கு செல்லமாட்டார்கள் என காங்கிரஸ் மாநிலத் தலைவர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார்.


காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் யாரும் பாஜகவுக்கு செல்லமாட்டார்கள் என காங்கிரஸ் மாநிலத் தலைவர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார்.
இதுகுறித்து பெங்களூரில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கட்சியின் தொடர்பில் இருக்கிறார்கள். எம்.டி.பி.நாகராஜ், சுதாகர், நாகேஷ் போன்ற எம்.எல்.ஏ.க்களுடன் நான் பேசினேன். அவர்கள் யாரும் கட்சியில் இருந்து விலகமாட்டார்கள். இதுபோன்ற பிரசாரம் அரசியல் உள்நோக்கத்துடன் செய்யப்படுகிறது.
மக்களிடையே தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தவும், மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு நெருக்கடியில் உள்ளது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தவும் இதுபோன்ற வதந்திகள் பரப்பப்படுகின்றன.
பாஜக மாநிலத் தலைவர் கனவு உலகத்தில் இருந்து வருகிறார். முதல்வர் பதவியை பிடித்துவிட வேண்டுமென்ற துடிப்பில் சட்டவிரோதமான, அறநெறிக்கு உள்படாத செயல்களில் எடியூரப்பா ஈடுபட்டு வருகிறார். எடியூரப்பா மற்றும் பாஜகவை சுற்றி சில தீயசக்திகள் உள்ளன. அவர்கள் எடியூரப்பாவின் மனதை கெடுத்து, தவறாக வழி நடத்தியுள்ளனர்.
ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் பாஜக ஈடுபடுவதால், கர்நாடகத்தின் மானம், மரியாதை காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கூட்டணி அரசை கவிழ்க்க பாஜக தொடர்ந்து முயற்சிப்பது சரியல்ல. மும்பை, சென்னைக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் போய்விட்டதாக கூறப்படுவது சுத்த பொய்யாகும்.
பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை (செப். 23) காங்கிரஸ் கட்சியின் மாநில நிர்வாகிகளின் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் பங்கேற்க கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் கே.சி.வேணுகோபால் பெங்களூருக்கு வருகிறார். இதை தவிர அவரது வருகையில் வேறு முக்கியத்துவம் எதுவுமில்லை. அக்.2-ஆம் தேதி முதல் புதிய பிரசார திட்டங்களை செயல்படுத்தவிருக்கிறோம். அது குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
இதைத் தொடர்ந்து, செப். 25-ஆம் தேதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறுகிறது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் எங்களுடன் இருக்கிறார்கள். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் யாரும் பாஜகவுக்கு செல்லமாட்டார்கள். கூட்டணி அரசு 100 சதவீதம் பாதுகாப்பாக உள்ளது. இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். மக்களவை தேர்தலில் மஜத-காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெறும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com