ஜனநாயகம் காணாமல் போய்விட்டது

நமது நாட்டில் தத்துவரீதியான ஜனநாயகம் காணாமல் போய்விட்டது என கன்னட இலக்கியவாதி பரகூர் ராமசந்திரப்பா தெரிவித்தார்.


நமது நாட்டில் தத்துவரீதியான ஜனநாயகம் காணாமல் போய்விட்டது என கன்னட இலக்கியவாதி பரகூர் ராமசந்திரப்பா தெரிவித்தார்.
பெங்களூரில் சனிக்கிழமை விகிதாச்சார தேர்தல் முறை-இந்தியாவுக்கான மாற்றுமுறை மாநில அளவிலான கருத்தரங்கில் பங்கேற்று அவர் பேசியது: உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா என்று மார்தட்டிக் கொள்கிறோம். கடந்த 70 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் ஜனநாயகத்தின் மாண்புகள் கொஞ்சம் கொஞ்சமாக சீரழிக்கப்பட்டுவிட்டன.
உண்மையான, தத்துவரீதியான, கொள்கை ரீதியான ஜனநாயகம் நமதுநாட்டில் இல்லை. பணம் கொடுத்து மக்களை விலைபேசும் ஜனநாயக அமைப்பாக தேர்தல் மாறிவிட்டது. தற்போதைய தேர்தல் முறையில் காணப்படும் குறைபாடுகளை அரசியல்வாதிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். இதற்கு முடிவுகட்ட வேண்டுமானால், விகிதாச்சார அடிப்படையிலான தேர்தல் முறை தான் இந்தியாவுக்கு சரியானதாக இருக்கும். அது தான் உண்மையான ஜனநாயகத்தின் பிரதிபலிப்பாக அமையும்.
மதம், மதசார்பின்மை, ஜனநாயகம் போன்றவற்றுக்கு தவறான கற்பிதங்களை உருவாக்கி, மக்களை குழப்புவதில் அரசியல்வாதிகள் வெற்றிபெற்றிருக்கிறார்கள். கருத்து வேறுபாடு என்ற களத்தை உருவாக்கி, அதன் மூலம் மோதல்களை கட்டமைத்து வருகிறார்கள். தற்போதைய தேர்தல்முறை ஜாதி, மதத்துக்கு விலைபோகும், அடிபணியும் நிலை உள்ளது. இதற்கு கடிவாளம் போடவேண்டிய காலக்கட்டம் வந்துவிட்டது.
விகிதாச்சார தேர்தல் முறையை செம்மையாக செயல்படுத்துவது குறித்து நமது நாட்டில் விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டும். அப்போதுதான் குறைபாடு இல்லாத மாற்று தேர்தல் முறையை நம்மால் கொண்டுவர முடியும் என்றார் அவர்.
மூத்த வழக்குரைஞர் ரவிவர்ம குமார் பேசுகையில், இந்தியாவில் தற்போது நடைமுறையில் இருக்கும் தேர்தல் முறையை சீர்திருத்த வேண்டும் என்று 1990-ஆம் ஆண்டிலேயே சட்ட ஆணையம் பரிந்துரைத்திருந்தது. ஆனால், அந்த பரிந்துரை விவாதிக்கப்படவுமில்லை, அமலுக்கு வரவும் இல்லை என்றார் அவர். நிகழ்ச்சிக்கு உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி எம்.என்.வெங்கடாசலையா தலைமை வகித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com