செவ்வாய் கிரக வட்டப் பாதையில் மங்கள்யான் அடைந்து இன்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு

செவ்வாய் கிரகத்தின் வட்டப் பாதையில் மங்கள்யான் விண்கலம் நிலை நிறுத்தப்பட்டு திங்கள்கிழமையுடன் (செப்.24) 4 ஆண்டுகள் நிறைவடைந்தன.

செவ்வாய் கிரகத்தின் வட்டப் பாதையில் மங்கள்யான் விண்கலம் நிலை நிறுத்தப்பட்டு திங்கள்கிழமையுடன் (செப்.24) 4 ஆண்டுகள் நிறைவடைந்தன.
விண்வெளி ஆராய்ச்சியை மேற்கொள்வதற்காக 1969-ஆம் ஆண்டு மத்திய அரசால் நிறுவப்பட்டதுதான் இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ). அது நிறுவப்பட்டது முதல் 100-க்கும் மேற்பட்ட விண்கலங்களை விண்ணில் செலுத்தி, இந்திய தகவல் தொடர்பு, வானிலை ஆய்வு, கனிம வள ஆய்வில் பெரும் சாதனைகளை நிகழ்த்திக் காட்டியுள்ளது. பூமிப் பந்தின் ஒரே துணைக் கோளாக விளங்கும் சந்திரனுக்கு ஆய்வு விண்கலத்தை அனுப்ப வேண்டுமென்பது இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் நீண்டகால கனவாக இருந்து வந்தது. அந்த கனவு 2008-ஆம் ஆண்டு அக்.22-ஆம் தேதி நிறைவேறியது. ஆம், சந்திரயான்-1 என்ற விண்கலத்தை முதல் முயற்சியிலேயே விண்ணில் செலுத்தி சாதனை படைத்த இஸ்ரோ, அந்த விண்கலத்தின் உதவியால் சந்திரனில் நீர்படிமங்கள் இருப்பது அறிவியல் உலகிற்கு ஆதாரங்களுடன் எடுத்துக்காட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து,  உலக நாடுகளின் கிரக குடியேற்றத்தின் இலக்காகத் திகழ்ந்துவரும் செவ்வாய் கிரகத்துக்கு விண்கலனை அனுப்புவதற்காக "மங்கள்யான்' என்ற கனவுத் திட்டத்தை இஸ்ரோ வடிவமைத்தது. உலக அளவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த மங்கள்யான் விண்கலம், 2013-ஆம் ஆண்டு நவம்பர் 5-ஆம் தேதி விண்ணுக்கு செலுத்தப்பட்டது. மங்கள்யான் விண்கலத்தின் வெற்றியின் மூலம் செவ்வாய் கிரகத்துக்கு ஆய்வு விண்கலம் அனுப்பிய ஐரோப்பிய, அமெரிக்க, ரஷிய நாடுகளின் வரிசையில் இந்தியாவும் சேர்ந்து, உலகளவில் புதிய வரலாறு படைத்தது. மேலும், உலக அளவில் முதல் முயற்சியில் செவ்வாய் கிரகத்தை அடைந்த ஒரே நாடு என்ற பெருமையும் இந்தியாவுக்கு கிடைத்தது. ஆசிய அளவில் இந்த முயற்சியில் வென்ற முதல் நாடும் இந்தியாதான். 13.4 கிலோ எடை கொண்ட மங்கள்யான் ஆய்வு விண்கலம், விண்ணில் செலுத்தப்பட்டு 298 நாள்கள் கடந்த பிறகு, 2014-ஆம் ஆண்டு செப்.24-ஆம் தேதி செவ்வாய்கிரக வட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டு, உலக வரலாற்றில் இந்தியா மீண்டும் சாதனை படைத்தது. 6 மாதங்களுக்கு ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட மங்கள்யான் விண்கலம், 4 ஆண்டுகள் கடந்தும் ஆய்வுப் பணியைத் தொய்வின்றி தொடர்ந்துள்ளது இஸ்ரோவின் பெரும் சாதனையாகக் கருதப்படுகிறது. 
பூமி கிரகத்தில் இருந்து மற்றொரு கிரகத்துக்கு (செவ்வாய்) இந்தியா அனுப்பிய முதல் விண்கலம் மங்கள்யான். கிரகங்களுக்கு இடையே செலுத்தப்படும் விண்கலத்தை வடிவமைத்து, திட்டம், கண்காணித்து, நிர்வகித்து, இயக்கவல்ல தொழில்நுட்பத் திறன் இந்தியா வாய்க்கப் பெற்றுள்ளதை உலகிற்கு பறைசாற்றவே மங்கள்யான் விண்கலத்தை இஸ்ரோ செவ்வாய்கிரகத்துக்கு அனுப்பி வைத்தது. மங்கள்யான் விண்கலத்தில் வைக்கப்பட்டுள்ள 5 ஆய்வுக் கருவிகள், செவ்வாய்கிரகம் குறித்த அறிவியல்ரீதியான புரிதலை தனது ஆய்வு மூலம் வழங்கி வருகிறது. செவ்வாய்க்கிரகத்தின் வட்டப் பாதையில் 2014, செப்.24-ஆம் தேதி நிலை நிறுத்தப்பட்டதும், அடுத்த நாளே (செப்.25) மங்கள்யான் அனுப்பியிருந்த செவ்வாய்கிரகத்தின் புகைப்படம் இஸ்ரோ அறிவியலாளர்களை மட்டுமல்லாது, உலக அறிவியல் சமூகத்தையே மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியது. மங்கள்யான், ஒரு விண்கலம் மட்டுமல்ல, அது இந்தியர்களின் அறிவியல் ஆளுமையின் உச்சம் என்பதை உலகிற்கு பறைசாற்றியுள்ளது. இதைத்தொடர்ந்து, 2020-ஆம் ஆண்டு மங்கள்யான்-2 விண்கலத்தை செவ்வாய்கிரகத்துக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
இந்திய விண்வெளி ஆய்வில் பெரும் சாதனையாகக் கருதப்படும் சந்திரயான்-1, மங்கள்யான்-1 விண்கலத் திட்டப் பணிகளில் பணியாற்றிய விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, தனது நினைவுகளை பெருமிதத்துடன் குறிப்பிடுகிறார். அவர் கூறியது: இந்திய வரலாற்றில், குறிப்பாக இந்திய விண்வெளி வரலாற்றில் மறக்க முடியாத நாள் செப்.24 ஆகும். இந்த நாளில்தான் மங்கள்யான் விண்கலம், செவ்வாய்கிரகத்தின் வட்டப் பாதையில் வெற்றிகரமாக நுழைந்து, ஆய்வுப் பணியைத் தொடங்கியது. செவ்வாய்கிரகத்துக்கு முதல் முயற்சியில் விண்கலத்தை செலுத்தி சாதனை படைத்தது இந்தியாதான். தொழில்நுட்பரீதியாக மிகவும் வெற்றிகரமான திட்டமாகும் இது. அதனால் தான் 6 மாதங்களுக்குப் பிறகு மங்கள்யான் சிறப்பாகச் செயல்பாட்டில் உள்ளது. மங்கள்யான் விண்கலத்தின் உள்கட்டமைப்பால், செவ்வாய்கிரகம் சூரியனை சுற்றும் காலத்தில் பூமிப் பார்வையில் இருந்து மறைந்த போதும், அது பயன்பாடு முழுமையாக இருந்தது. மங்கள்யான் வெற்றி இந்திய இளைஞர்களிடையே ஆராய்ச்சி ஆர்வத்தைப் பெருக்கியது.  
இந்த விண்கலம் செவ்வாய்கிரகத்தை அடைந்து 4 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடுவதற்கு முழுமுதற்காரணம் அதற்காக 2012-ஆம் ஆண்டு முதல் உழைத்துவரும் விஞ்ஞானிகள்தான். மங்கள்யான் விண்கலத்தின் வெற்றியால் இஸ்ரோவின் செயற்கைக்கோள் தயாரிப்பு, வடிவமைப்பின் அணுகுமுறையை மாற்றியமைத்தது. அதன்காரணமாகவே, ஆண்டுக்கு 3-4 விண்கலங்களை செலுத்தி வந்த இஸ்ரோ தற்போது மாதம் 1-2 விண்கலங்களை விண்ணில் செலுத்தும் நிலைக்கு உயர்ந்துள்ளது. 
சிறப்பாகவும், விரைவாகவும், மலிவாகவும் விண்கலங்களை தயாரிப்பதற்கான முன்னோடியாக மங்கள்யான் திகழ்கிறது. 2015, ஜூலை மாதத்தில் இருந்து 2018, ஜூலை மாதம் வரையில் அதாவது 36 மாதங்களில் 30 விண்கலங்களை இஸ்ரோ தயாரித்து, விண்ணுக்கு அனுப்பி சாதனை படைத்துள்ளது. செவ்வாய்கிரகத்துக்கு செல்வதைத் தாண்டி, அறிவியல் உலகில் மங்கள்யான் விண்கலம் புதிய அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது, நாம் எதிர்பார்க்காதது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com