மக்களவை தேர்தல்: கர்நாடக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் தலைவர்கள் ஆலோசனை

மக்களவைத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து கர்நாடக காங்கிரஸ் மாநில, மாவட்ட அணிகளின் 

மக்களவைத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து கர்நாடக காங்கிரஸ் மாநில, மாவட்ட அணிகளின் நிர்வாகிகளுடன் அக் கட்சியின் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.
பெங்களூரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் ஞாயிற்றுக்கிழமை கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மாநில, மாவட்ட அணிகளின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அக் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் கே.சி.வேணுகோபால் தலைமையில் நடைபெற்றது.  இக் கூட்டத்தில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் தினேஷ் குண்டுராவ், செயல் தலைவர் ஈஸ்வர் கண்ட்ரே,  மேலிடப் பார்வையாளர்கள் மாணிக்கம் தாகூர்,  விஷ்ணுநாத்,  மதுயக்ஷி கெளடா,  ஷாக்கே சைலஜாநாத், யஷ்மதி தாக்கூர் உள்ளிட்ட ஏராளமானோர்
கலந்துகொண்டனர். 
    இக் கூட்டத்தில்,  மஜத-காங்கிரஸ் கூட்டணியை உடைக்கவும்,  அரசைக் கவிழ்க்கவும் பாஜக மேற்கொண்டுள்ள முயற்சியை முறியடிக்க அடிமட்டத்தில் இரு கட்சிகளின் தொண்டர்களும் ஒற்றுமையாக இருப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.  கட்சியின் நலன் கருதி எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டியது கட்டாயமாகுமென்று கட்சியின் முன்னணியினர் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.  அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்தது.  அதற்காக கட்சியை அடிமட்டத்தில் இருந்து பலப்படுத்த வேண்டியது அவசியம். 
    எனவே, மக்களவைத் தேர்தலை மனதில் கொண்டு அக்.2-ஆம் தேதி முதல் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்துவது குறித்தும் இக் கூட்டத்தில் அலசப்பட்டது. வாக்குச்சாவடி அளவிலான தொண்டர் பலத்தைப் பலப்படுத்தி, அவர்களுக்கு அடையாள அட்டை வழங்குவது குறித்து கூட்டத்தில் பேசப்பட்டது.  ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் ஈடுபடாத கட்சி நிர்வாகிகளை உடனடியாக மாற்றி,  புதியவர்களை நியமிப்பது பற்றியும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.  கட்சிக்கு அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்களை சேர்ப்பது தொடர்பாகவும் ஆராயப்பட்டது. 
மத்தியில் ஆட்சி நடத்திவரும் பா.ஜ.க. கூட்டணி அரசின் தோல்விகளை மக்களிடம் கொண்டு செல்ல மாநில அளவில் பல்வேறு போராட்டங்களை நடத்துவதற்கு கட்சித் தொண்டர்கள் தயாராக இருக்கவும் கூட்டத்தில் அழைப்பு விடுக்கப்பட்டது.  மக்களவைத் தேர்தலில் மஜதவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதால் ஏற்படும் சாதக, பாதகங்கள், வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள், வேட்பாளர்கள் குறித்தும் விரிவான ஆலோசனை நடத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com