மத்திய அரசு அலுவலகங்களில் மும்மொழித் திட்டம்: கன்னட வளர்ச்சி ஆணையம் அறிவுரை

கர்நாடகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் மும்மொழித் திட்டம் அமல்படுத்த வேண்டும் என்று

கர்நாடகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் மும்மொழித் திட்டம் அமல்படுத்த வேண்டும் என்று கன்னட வளர்ச்சி ஆணையத் தலைவர் எஸ்.ஜி.சித்தராமையா அறிவுறுத்தியுள்ளார்.
பெங்களூரு கோரமங்களாவில் உள்ள மண்டல கடவுச்சீட்டு அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கன்னட ஆட்சி மொழி அமலாக்க ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்று அவர் பேசியது: 
மத்திய அரசு அலுவலகங்கள், மண்டல அலுவலகங்களில் ஆட்சி மொழிக் கொள்கையின்படி கன்னடம், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மும்மொழி திட்டத்தை தீவிரமாக அமல்படுத்த வேண்டும். அதிலும் உள்ளூர் மொழியான கன்னடத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டியது அவசியமாகும். 1995-ஆம் ஆண்டில் மத்திய உள்துறை வெளியிட்ட சுற்றறிக்கையில், 'சி' பிரிவு மாநிலங்களில் செயல்படும் மத்திய அரசு அலுவலகங்களில் மும்மொழி திட்டத்தை அமல்படுத்த அறிவுறுத்தியுள்ளது. 
ஆனாலும், இதை மத்திய அரசு அலுவலகங்கள் தீவிரமாக அமல்படுத்தவில்லை. மத்திய அரசு அலுவலகங்களில்  ஹிந்தி, ஆங்கிலத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இது சரியான அணுகுமுறை அல்ல. ஒருசில மத்திய அரசு அலுவலகங்கள், ஹிந்தி மட்டுமே ஆட்சிமொழி என்கிற முறையில் செயல்பட்டுவருகின்றன. 
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அங்கீகாரம் பெற்றுள்ள 22 மொழிகளும் ஆட்சிமொழிகள்தான். 
மண்டல கடவுச்சீட்டு அலுவலகத்தின் இணையதளம், சேவை மையங்களின் கடவுச்சீட்டு விண்ணப்பங்கள், அலுவலகக் கடிதங்களின் தலைப்பு, முத்திரைகளில் கன்னடம் இல்லாதது சரியல்ல. 
பெயர்ப்பலகைகள், அறிவிப்புப் பலகைகள், உள்ளூர் விளம்பரங்கள், கடிதங்களின் தலைப்புகள், முத்திரைகளில் கன்னட மொழியைப் பயன்படுத்த வேண்டும். இதை உடனடியாக அமலுக்கு கொண்டுவர வேண்டும். 
உள்ளூர் மொழியான கன்னடத்தில் தகவல்தொடர்புகள் அமைந்தால் அது எளிதில் மக்களை சென்றடையும். மேலும் கன்னடமொழியைக் காப்பாற்றும், வளர்க்கும் கடமை மாநிலத்தில் செயல்படும் அனைத்து மத்திய, மாநில அரசு அலுவலகங்களின் கடமையாகும். 
பொதுமக்கள் வந்துபோகும் அலுவலகம் என்பதால் மண்டல கடவுச்சீட்டு அலுவலகத்தில் கன்னட மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவது உள்ளூர் மக்களின் நம்பிக்கையை அதிகமாக்கும். அலுவலகத்தின் கணினியிலும் கன்னட மொழிக்கான மென்பொருளைப் பயன்படுத்த வேண்டும். 
மேலும் 'சி' மற்றும்'டி'பிரிவு ஊழியர்களை வேலைக்கு சேர்க்கும் போது உள்ளூர் மக்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றார்.
இதற்குப் பதிலளித்த மண்டல கடவுச்சீட்டு அதிகாரி பரத்குமார் குத்தாட்டி,"கன்னடமொழியை ஆட்சி மொழியாக அமல்படுத்துவது தொடர்பாக, எனது அதிகாரத்துக்குள்பட்ட நடவடிக்கைகளை உடனடியாக எடுப்பேன். மேலும், கன்னட வளர்ச்சி ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, ஒருசில உத்தரவுகளை பெற மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்படும்' என்றார். 
இந்த கூட்டத்தில் எழுத்தாளர் சந்திரசேகர் பாட்டீல், கன்னட வளர்ச்சி ஆணையச்செயலாளர் முரளிதர், ஆணைய உறுப்பினர்கள் பிரபாகர் பாட்டீல், கிரீஷ்பாட்டீல், கன்னட கணினி பரிஷத்தின் செயலாளர் ஜே.நரசிம்மு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com