பெங்களூரு

ஒருநாளுக்கு முன்பாகவே சட்டப்பேரவைக் கூட்டம் நிறைவு

DIN

ஒருநாளுக்கு முன்பாகவே கர்நாடக சட்டப்பேரவைக் கூட்டம் நிறைவடைந்துள்ளது.
மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு பதவியேற்றபிறகு, 15-ஆவது கர்நாடக சட்டப்பேரவையின் 3-ஆவது கூட்டம் பிப்.6-ஆம் தேதி தொடங்கியது.  இந்த ஆண்டின் முதல்கூட்டம் என்பதால்,  மரபுப்படி முதல்நாளான பிப்.6-ஆம் தேதி ஆளுநர் வஜுபாய்வாலா, கூட்டுக் கூட்டத்தில் உரை நிகழ்த்தினார். அப்போது, மஜத-பாஜக கூட்டணி அரசு பெரும்பான்மை பலத்தை இழந்துவிட்டதால்,  அரசின் பொய்மூட்டைகளை படிக்காதீர்கள் என்று வலியுறுத்தி பாஜக எம்எல்ஏக்கள் தர்னா போராட்டம் நடத்தினர்.  இதனால், ஆளுநர் தனது உரையை பாதியிலேயே முடித்துக் கொண்டார். இதை தொடர்ந்து, மறுநாள் நடந்த கூட்டத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் கொண்டுவரப்பட்டு, விவாதம் தொடங்கப்பட்டது.  மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு பெரும்பான்மை பலம் இல்லாததால், ஒருநிமிடம்கூட இந்த அரசு தொடரக் கூடாது என்று வலியுறுத்தி பாஜக எம்எல்ஏக்கள், சட்டப்பேரவையில் 2-ஆவது நாளாக தர்னா போராட்டத்தை தொடங்கினர்.  இதனால் அன்றைய கூட்டம் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
இதனிடையே, மஜத, காங்கிரஸ் எம்எல்ஏக்களை பாஜகவுக்கு இழுக்கும் குதிரைபேரத்தில் பாஜகவினர் ஈடுபட்டிருப்பது கர்நாடக அரசியலில் சூடாக விவாதிக்கப்பட்டுவந்தது. பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக, மஜத எம்எல்ஏ நாகன கெளடாவின் மகன் சரண்கெளடாவிடம் பாஜக மாநிலத்தலைவர் எடியூரப்பாபேரம் பேசியதுதொடர்பான உரையாடல் ஒலிப்பதிவை முதல்வர் குமாரசாமி வெளியிட்டார்.  இது கர்நாடக அரசியலில் புதிய புயலை கிளப்பியது. இதனிடையே, 2019-20-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை முதல்வர் குமாரசாமி தாக்கல் செய்தார்.  பட்ஜெட் புத்தகத்தை அளிக்கவில்லை என்ற காரணத்தைக் கூறி, பாஜக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.  அதன்பிறகு அவை பிப்.11-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதன்பிறகு பிப்.11-ஆம் தேதி மீண்டும் நடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தில், 'எம்எல்ஏக்களின் ராஜிநாமா கடிதங்களை உடனடியாக ஏற்பதற்கு ரூ.50கோடி பேரம் பேசப்பட்டுள்ளதாக' உரையாடல் ஒலிப்பதிவில் பேசப்பட்டுள்ளதை முன்வைத்து பேரவைத்தலைவர் ரமேஷ்குமார் உரிமைமீறல் பிரச்னை கொண்டுவந்தார்.  இதன் முடிவில், இந்த விவகாரத்தை சிறப்புப் புலனாய்வுக் குழு(எஸ்ஐடி)விசாரணை நடத்த கர்நாடக அரசுக்கு பேரவைத் தலைவர் ரமேஷ்குமார் ஆலோசனை வழங்கினார்.  இதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து தர்னா போராட்டம் நடத்தியதை தொடர்ந்து,  அன்றைய அவை நாள்முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.  பிப்.12-ஆம் தேதியும் பாஜகவினர் தர்னா போராட்டத்தை தொடர்ந்ததால், அவை ஒத்திவைக்கப்பட்டது.
பிப்.13-ஆம் தேதியும் பாஜக எம்எல்ஏக்கள் தர்னா போராட்டத்தை தொடர்ந்த நிலையில்,  சில சட்டமசோதாக்களை அரசு நிறைவேற்றிக்கொண்டது.  மதியம், பாஜக எம்எல்ஏ பிரீத்தம் கெளடா வீட்டின் மீது மஜதவினர் கல்வீசி தாக்கிய சம்பவம் தொடர்பாக பாஜக எம்எல்ஏக்கள் தர்னா போராட்டத்தில் குதித்தனர்.  இதை தொடர்ந்து, அவை நாள்முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. பிரீத்தம் கெளடா பிரச்னையை முன்வைத்து பாஜக எம்எல்ஏக்கள் வியாழக்கிழமையும் தர்னா போராட்டம் நடத்தினர்.  கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என்று பாஜக உறுதிபடத் தெரிவித்துவிட்டதால்,  பிப்.15-ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்த சட்டப்பேரவைக்கூட்டத்தை வியாழக்கிழமையே நிறைவுசெய்ய அரசு  முடிவுசெய்தது.  அதன்படி, பாஜக எம்எல்ஏக்களின் தர்னா போராட்டம், கூச்சல் குழப்பங்களுக்கு இடையே நிதி மசோதா, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் உள்ளிட்ட சட்ட மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றி, பேரவைத்தலைவர் ரமேஷ்குமார் அவையை காலவரையின்றி ஒத்திவைத்தார்.  ஏற்கெனவே திட்டமிட்டிருந்ததற்கு மாறாக, ஒருநாளுக்கு முன்பாகவே அவை ஒத்திவைக்கப்பட்டது, மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
8 நாள்கள் நடத்த திட்டமிட்டிருந்த சட்டப்பேரவைக் கூட்டம்
7 நாள்கள் மட்டுமே நடைபெற்றது. 7 நாள்களில் மொத்தம் 15 மணிநேரம் 10 நிமிடங்கள் மட்டுமே அவை செயல்பட்டுள்ளது.  இதில் 3 மணி நேரம் பட்ஜெட் உரை வாசிக்கப்பட்டது அடக்கம்.  இதன்படி, அவை நாளொன்றுக்கு இரண்டரை மணிநேரம் மட்டுமே செயலாற்றியுள்ளது. இது பொதுமக்களின் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

SCROLL FOR NEXT