அதிருப்தி எம்எல்ஏக்கள் பதவிநீக்க விவகாரம்: பேரவைத் தலைவரின் முடிவுக்குக் கட்டுப்படுவோம்: சித்தராமையா

அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பதவிநீக்க விவகாரம் தொடர்பாக பேரவைத் தலைவரின் முடிவுக்குக் கட்டுப்படுவோம்

அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பதவிநீக்க விவகாரம் தொடர்பாக பேரவைத் தலைவரின் முடிவுக்குக் கட்டுப்படுவோம் என்று முன்னாள் முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
இது குறித்து விஜயபுராவில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:  காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 4 அதிருப்தி எம்எல்ஏக்களான ரமேஷ் ஜார்கிஹோளி, பி.நாகேந்திரா, உமேஷ் ஜாதவ், மகேஷ் குமட்டஹள்ளி ஆகியோரை  பதவிநீக்கம் செய்யக் கோரி பேரவைத் தலைவர் ரமேஷ்குமாரிடம் கடிதம் கொடுத்திருக்கிறோம்.  இந்த கடிதத்தை திரும்பப்பெறும் எண்ணம் காங்கிரசிடம் இல்லை.  இந்த விவகாரத்தில்பேரவைத் தலைவர் எடுக்கும் முடிவுக்கு காங்கிரஸ் முழுமையாகக் கட்டுப்படும்.  மேலும் இந்த விவகாரத்தில் முடிவெடுக்கும்படி பேரவைத் தலைவரை நாங்கள் நிர்பந்திக்கவும் மாட்டோம்,  தலையிடவும் மாட்டோம்.  எனவே, இந்த விவகாரத்தில் பேரவைத் தலைவரின் முடிவே இறுதியானது. 
ஆட்சியைக் கவிழ்க்க பாஜக தலைவர்கள் குதிரைபேரத்தில் ஈடுபடவில்லை என்றால், உரையாடல் ஒலிப்பதிவு விவகாரத்தை சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு அளிப்பதை பாஜகவினர் ஏன் எதிர்க்கிறார்கள்?  சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்துவிட்டால்,  பாஜக தலைவர்கள் அனைவரும் சிறைக்குச் செல்ல நேரிடும்.  அதனால்தான், சிறப்புப் புலனாய்வுக் குழுவை பாஜகவினர் எதிர்க்கிறார்கள். பாஜகவினருக்கு அரசியலமைப்புச் சட்டம் மற்றும் நீதித்துறையின் மீது நம்பிக்கையில்லை.
குதிரைபேரத்தில் ஈடுபட்ட பாஜகவினரின் உரையாடல் ஒலிப்பதிவு விவகாரத்தை நீதிபதியிடம் ஒப்படைத்தால்,  உண்மையை மட்டும் கண்டறியும் அதிகாரம் இருக்கும்.  நீதிபதிக்கு புலனாய்வு செய்யும் அதிகாரம் இருக்காது. இந்த விவகாரம் தொடர்பாக முழுமையாக விசாரிப்பதற்காக சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் ஒப்படைக்க வேண்டும்.  இந்த முடிவில் இருந்து பின்வாங்கமாட்டேன்.  மேலும், சிறப்புப் புலனாய்வுக் குழு அமைப்பது தொடர்பாக முதல்வர் குமாரசாமிதான் முடிவெடுக்க வேண்டும்.
மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை காங்கிரஸ் இன்னும் முடிவு
செய்யவில்லை. 
ஒரு மாத காலத்தில் மஜதவுடன் தொகுதி பங்கீடு குறித்து முடிவுசெய்வோம். தேர்தல் தொடர்பாக இரு கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தை இதுவரை நடத்தவில்லை என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com