சமூக அமைதியை சீர்குலைப்பதை சகித்துக்கொள்ள மாட்டோம்: அமைச்சர் எம்.பி.பாட்டீல்

சமூக அமைதியை சீர்குலைப்பதை சகித்துக்கொள்ள மாட்டோம் என்று உள்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் தெரிவித்தார்.

சமூக அமைதியை சீர்குலைப்பதை சகித்துக்கொள்ள மாட்டோம் என்று உள்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் தெரிவித்தார்.
இது குறித்து விஜயபுராவில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:  சமூகத்தில் நிலவும் அமைதியை சீர்குலைப்பதை அரசால் சகித்துக்கொள்ள முடியாது.  பேராசிரியர் கே.எஸ்.பகவான் அல்லது மத்திய அமைச்சர் அனந்த்குமார் ஹெக்டே அல்லது பசனகெளடா பாட்டீல் உள்ளிட்ட யாராக இருந்தாலும், அமைதிக்கு பங்கம் விளைவிக்க நினைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.  ஹிந்து, முஸ்லிம்கள் உள்ளிட்ட பல்வேறு மதங்களை சேர்ந்தோரின் உணர்வுகளைப் பாதிக்கும் வகையில் பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.  
மற்றவர்களின் உணர்வுகளைப் புண்படுத்தும்படி பேசினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.  சட்டம், ஒழுங்கைப் பாதுகாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். சமுதாயத்தில் நிலவும் நல்லிணக்கத்தைப் பாழ்படுத்தும் முயற்சியை ஏற்க முடியாது.  அனைவருக்கும் கருத்து சுதந்திரம் இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. அதை நானும் மதிக்கிறேன்.  ஆனால்,  மற்ற மதத்தவர்களின் உணர்வுகளைப் புண்படுத்தும்படி பேசுவதை தவிர்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன். 
உடுப்பியில் இருந்து காணாமல் போன மீனவர்கள் இன்னும் மீட்கப்படவில்லை.  மீனவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.  காணாமல் போன மீனவர்கள் இலங்கையில் உள்ளதாகவும்,  அவர்களின் செல்லிடப்பேசி செயல்பட்டு வருவதாக சமூக வலைதளங்களில் பரவும் செய்தியில் உண்மையில்லை. 
பயங்கரவாதிகளை ஒழிப்பதற்கு பிரதமர் மோடி எடுக்கும் நடவடிக்கையை அனைத்துக் கட்சிகளும் ஆதரிக்கின்றன.  இந்த விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும்.  பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக அறிவிப்பது ராஜதந்திர நடவடிக்கை.  மேலும்,  பன்னாட்டு அளவில் பாகிஸ்தானை தனிமைப்படுத்துவது அவசியமாகும். 
பாகிஸ்தானை ஆதரித்து முகநூலில் பதிவிட்டிருந்த இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர்.  அந்த இளைஞரின் கணினி உள்ளிட்ட மின்னணுப் பொருள்களைப் பறிமுதல் செய்து போலீஸார் சோதனையிட்டு வருகிறார்கள். மாற்றுக் கட்சியினரை பாஜகவுக்கு இழுக்க அக் கட்சியினர் மேற்கொண்ட முயற்சியின் பதிவு செய்யப்பட்ட ஒலிப்பதிவுத் துணுக்கு விவகாரம் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணைக்கு ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com