பெங்களூரில் இன்று விமான தொழில் கண்காட்சி தொடக்கம்

பெங்களூரில் புதன்கிழமை (பிப்.20) முதல் 5 நாள்களுக்கான விமான தொழில் கண்காட்சி நடைபெறுகிறது. 

பெங்களூரில் புதன்கிழமை (பிப்.20) முதல் 5 நாள்களுக்கான விமான தொழில் கண்காட்சி நடைபெறுகிறது. 
இக் கண்காட்சியை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடக்கி வைக்கிறார்.
மத்திய ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பின் மேற்பார்வையில் நடைபெறும் இந்த கண்காட்சியில் 75-க்கும் அதிமான விமானங்களின் தொழில்நுட்பங்கள் காட்சிப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், விமான தொழிலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், புதிய கண்டுபிடிப்புகள், விமானவியல் தொழில் நுட்பங்கள் இடம்பெற உள்ளன. 
இந்தியாவில் முப்படைக்கும் தேவையான விமானங்கள், ஆளில்லா விமானங்கள், ஏவுகணைகள், ஹெலிகாப்டர்கள், ரேடார்கள், தொலை உணர்வு தொழில்நுட்பங்கள், கண்காணிப்பு முறை கருவிகள், விமான மின்னணுவியல், போரியல், உந்துவிசை கருவிகளும் இக் கண்கட்சியில் இடம்பெற உள்ளன.
மேலும் 5 நாள்களுக்கு வானத்தில் விமானங்களில் சாகசங்கள் நடைபெற உள்ளன. 
போர் விமானங்களின் சிமுலேட்டர்கள் இடம்பெற்றுள்ளன. கண்காட்சியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த விமான நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. பொதுமக்கள், முக்கிய பிரமுகர்கள் பிப். 23, 24-ஆம் தேதிகளில் கண்காட்சியைக் காண அனுமதிக்கப்படுகின்றனர். 
இதற்கு கட்டணம் ரூ. 2,700 ஆகும். விமான சாகசங்களைக் காண கட்டணம் ரூ. 650 ஆகும். மேலும் விவரங்களை w‌w‌w.​a‌e‌r‌o‌i‌n‌d‌i​a.‌i‌n என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

வானில் பலூன் பறக்கத் தடை
விமான தொழில் கண்காட்சி நடைபெறுவதையொட்டி பலூன், டிரோன் உள்ளிட்டவை பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகரக் காவல் ஆணையர் சுனில்குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெங்களூரில் பிப். 20-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை விமான தொழில் கண்காட்சி தொடங்கி நடைபெற உள்ளது. இதையொட்டி, பிப். 22-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை வானில் பலூன், டிரோன் உள்ளிட்டவைகள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துமீறி பறந்தால், சுட்டு வீழ்த்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com