மக்களவைத் தேர்தல்: மஜதவுக்கு அதிக தொகுதிகளை காங்கிரஸ் ஒதுக்க வேண்டும்: குமாரசாமி

மக்களவைத் தேர்தல் தொகுதிப் பங்கீட்டில் மஜதவுக்கு அதிக தொகுதிகளை காங்கிரஸ் ஒதுக்க வேண்டும் என்றார் கர்நாடக முதல்வர் குமாரசாமி.

மக்களவைத் தேர்தல் தொகுதிப் பங்கீட்டில் மஜதவுக்கு அதிக தொகுதிகளை காங்கிரஸ் ஒதுக்க வேண்டும் என்றார் கர்நாடக முதல்வர் குமாரசாமி.
மைசூரில் அண்மையில் கட்டடம் இடிந்து விழுந்த தேவராஜா சந்தையை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியது: வரும் மக்களவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு குறித்து சில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக மஜதவுக்கு அதிகபட்சமாக 7 தொகுதிகளுக்கும் மேல் ஒதுக்கீடு செய்ய முடியாது என்று கூறி வருகின்றனர்.
மக்களவைத் தேர்தல் தொகுதிப் பங்கீட்டில் காங்கிரஸிடம் நாங்கள் யாசகம் கோரவில்லை. எங்கள் கட்சியின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு அதிக தொகுதிகளைக் கேட்பது எங்கள் உரிமை. காங்கிரஸ் கட்சியினரும் எங்களின் கெளரவத்துக்கு குறை வராமல் தொகுதிகளை ஒதுக்குவது குறித்து ஆலோசிக்க வேண்டும். என்றாலும், தேர்தல் நெருங்கும்போது, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் மஜத தேசியத் தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவெ கெளடா பேச்சு வார்த்தை நடத்தி உடன்பாடு காண்பார் என நம்புகிறேன்.
மேலும் கர்நாடகத்தில் மஜத-காங்கிரஸ் கூட்டணியில் சிறந்து ஆட்சியை வழங்கி வருவதை எனது கடமையாக கொண்டுள்ளேன். மைசூருரில் உள்ள பாரம்பரிய கட்டடங்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும். சிதிலமடைந்துள்ள பாரம்பரிய கட்டடங்களை புனரமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
பேட்டியின் போது அமைச்சர்கள் ஜி.டி.தேவெ கெளடா, சா.ரா.கோவிந்த், மேயர் புஷ்பலதா, முன்னாள் மேயர் ரவிக்குமார், எம்.எல்.ஏ. நாகேந்திரா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com