பெங்களூரு

தொழில்நுட்பக் குவி மையமாக பெங்களூரு உருவெடுக்கும்: முதல்வர் குமாரசாமி

DIN

அடுத்தத்தலைமுறை தொழில்நுட்பக் குவி மையமாக பெங்களூரு உருவெடுக்கும் என்று முதல்வர் குமாரசாமி தெரிவித்தார்.
பெங்களூரு எலஹங்காவில் உள்ள விமானப் படை நிலையத்தில் புதன்கிழமை 12-ஆவது பன்னாட்டு இந்திய விமானத் தொழில் கண்காட்சியில் பங்கேற்று அவர் பேசியது: பன்னாட்டு விமானத்தொழில் மற்றும் ராணுவத் தொழில் வணிக வாய்ப்புகளை அள்ளித்தரும் களமாக பன்னாட்டு விமானத் தொழில் கண்காட்சி முக்கியத்துவம் பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
இக்கண்காட்சியின் வழியே உலக அளவிலான விமானம் மற்றும் ராண்வத் தொழிலின் வணிக மற்றும் தொழில்நுட்ப வாய்ப்புகள் இந்தியாவில் பாய்ந்தோடும் நம்பிக்கை உள்ளது. இந்தியாவின் பொருளாதார 
வளர்ச்சியில் கர்நாடகத்தின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். 
2018-19-ஆம் ஆண்டில் கர்நாடகத்தின் மொத்த மாநில உற்பத்திப்பொருள் ரூ.12 டிரில்லியனாக இருந்தது. இந்தகாலக்கட்டத்தில் மாநிலத்தின் பொருளாதாரம் 9.6 சதவீதமாக வளர்ச்சிகாணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதமான சுற்றுச்சூழல், திறன் வாய்ந்த உழைக்கும்படை, நுண்ணிய தொழில்நுட்ப அறிவாற்றல், தீவிரமான புத்தாக்கம், தோழமையான வணிகக் கொள்கைகள் போன்றவற்றால் கர்நாடம் தொழில் துறையினரின் குவிமையமாக மாறியுள்ளது. 
வணிகம் செய்வதற்கான நல்லசூழலை உருவாக்கி, அதன் வழியே நடுத்தர மற்றும் பின்தங்கிய வகுப்பினருக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதே எனது அரசின் நோக்கமாகும். கர்நாடகத்தின் பொருளாதாரத்தை சீர்த்திருத்த சில நல்ல திருத்தங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. 
தொழில் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெருக்க சுமுகமான பொருளாதாரச்சூழலை கர்நாடகத்தில் உருவாக்கியுள்ளோம். தொடர்ந்து 3-ஆவது ஆண்டாக தொழில் முதலீடுகளை ஈர்க்கும் மாநிலங்களின் வரிசையில் கர்நாடகம் முதலிடத்தில் உள்ளது. 
வணிக சீர்த்திருத்த செயல்திட்டத்தின் நோக்கங்களை 98 சதவீதம் நிறைவேற்றி தொழில்முதலீடுகளுக்கு சாதகமாக செயல்பட்டுள்ளோம். உற்பத்தியை பெருக்கவும், வணிகப் போட்டியை ஊக்குவிக்கவும் எதிர்கால, நவீன மற்றும் எண்ம தொழில்நுட்பத்தில் கர்நாடகம் நம்பிக்கை கொண்டுள்ளது. 
கர்நாடகம், அதில் குறிப்பாக பெங்களூரு அடுத்தத்தலைமுறை தொழில்நுட்பத்தின் குவிமையமாக உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அண்மையில் உலகின் முதல் எண்ம மாநகரமாக பெங்களூரு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் அதிநவீன தொழில் மாநிலமாக உருவெடுத்துள்ள கர்நாடகம், விமானம் மற்றும் ராணுவத் தொழிலில் தன்னிகரின்றி விளங்குகிறது. 
இந்தியாவின் முதல் விமானத் தொழில் சிறப்பு பொருளாதார மண்டலம் பெலகாவியில் செயல்படுவதோடு, உலக மையமாக உருவாகும் நம்பிக்கை உள்ளது. ஆசியாவின் முன்னணி பராமரிப்பு, பழுதுநீக்குவதல், சீரமைப்பு மையமாக விளங்கும் கர்நாடகத்தில் பெங்களூரு, மைசூரில் விமானங்களை முழுமையாக பராமரிக்கும் மையங்கள் உள்ளன. 
மங்களூரில் விமானத் தொழில் மையத்தை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. டஸ்சால்ட் சிஸ்டம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து விமானத் தொழில் சீர்மிகுமையம் அமைக்கப்படும். பெங்களூரு தேவனஹள்ளியில் அமைக்கப்படும் விமானத் தொழில் பூங்கா, விமானம் மற்றும் ராணுவத் தொழில் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்.
விமானத் தொழிலுக்கு ஏற்ற மாநிலமாக கர்நாடகம் விளங்குகிறது. அடுத்த 5 நாள்களில் வணிக முதலீடுகள் தொடர்பான 50 கலந்தாய்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT