திருவள்ளுவர் பூங்கா பெயர் சூட்டல்: மேயர் கங்காம்பிகே

திருவள்ளுவர் சிலை அமைந்திருக்கும் பூங்காவுக்கு அவரது பெயரே சூட்டப்படும் என்று பெங்களூரு மாநகராட்சி மேயர் கங்காம்பிகே தெரிவித்தார்.

திருவள்ளுவர் சிலை அமைந்திருக்கும் பூங்காவுக்கு அவரது பெயரே சூட்டப்படும் என்று பெங்களூரு மாநகராட்சி மேயர் கங்காம்பிகே தெரிவித்தார்.
உலகக்கவி திருவள்ளுவர் பிறந்த நாள் விழாக் குழு சார்பில் பெங்களூரில் அல்சூர் ஏரி எதிரே நா.நீலகண்டன சதுக்கத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை அருகே ஞாயிற்றுக்கிழமை திருவள்ளுவர் நாள் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பெங்களூரு மாநகராட்சி மேயர் கங்காம்பிகே, முன்னாள் மேயர் ஆர்.சம்பத்ராஜ், எம்எல்ஏக்கள் என்.ஏ.ஹாரீஸ், ரோஷன் பெய்க், விழாக்குழு தலைவரும், காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் மற்றும் தொழிலாளர் பிரிவுத் தலைவருமான எஸ்.எஸ்.பிரகாசம், பெங்களூரு தமிழ்ச் சங்கத் தலைவர் தி.கோ.தாமோதரன், வட்டார காங்கிரஸ் தலைவர் ராஜேந்திரன், நிர்வாகி நந்தகுமார், மாமன்ற உறுப்பினர் சம்பத்ராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
திருவள்ளுவருக்கு மரியாதை: திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய மாநகராட்சி மேயர் கங்காம்பிகே, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: திருவள்ளுவர், உலகநோக்கோடு சிந்தித்த பெரும்புலவர். தமிழகத்துக்கு மட்டுமல்ல உலக மக்கள் அனைவருக்கும் நன்னெறிகளை போதித்தவர் திருவள்ளுவர். உயர்ந்த சிந்தனைகளைத் தந்த திருவள்ளுவருக்கு கன்னடர்கள் மற்றும் கர்நாடகமக்கள் சார்பில் மரியாதை செலுத்தியிருக்கிறேன். 
திருவள்ளுவரின் பிறந்த நாளை எங்கெங்கும் கொண்டாட வேண்டும். திருவள்ளுவர் சிலை அமைந்திருக்கும் பூங்காவுக்கு அவரது பெயரையே சூட்டவேண்டுமென்ற கோரிக்கையை பெங்களூரு தமிழ்ச் சங்கம் முன்வைத்துள்ளது. அந்த கோரிக்கை மீது தகுந்த நடவடிக்கை எடுத்து திருவள்ளுவர் பூங்கா என்று பெயர்ச்சூட்டப்படும்.  
மேலும் திருவள்ளுவர் விழாவை மாநகராட்சி சார்பில் நடத்த வேண்டும் என்றும் பெங்களூரு தமிழ்ச் சங்கம் கோரியுள்ளது. இது மாநில அரசின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 
முன்னாள் மேயர் ஆர்.சம்பத்ராஜ், எம்எல்ஏக்கள் என்.ஏ.ஹாரீஸ், ரோஷன்பெய்க், விழாக் குழுத் தலைவர் எஸ்.எஸ்.பிரகாசம், பெங்களூரு தமிழ்ச் சங்கத் தலைவர் தி.கோ.தாமோதரன் உள்ளிட்ட ஏராளமானோர் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் பேசிய ரோஷன் பெய்க் கூறுகையில்,"திருவள்ளுவர், மனிதசமுதாயம் பயன்படத்தக்க புரட்சிகரமான கருத்துக்களை திருக்குறள் வாயிலாக கூறியுள்ளார். இன்றைய நவீன தொழில்நுட்பகாலத்தில் திருக்குறளின் பொருள்பொதிந்த குறள்களை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கவேண்டியுள்ளது. திருக்குறளை இந்தியாவின் அனைத்து மொழிபேசும் மக்களிடமும் கொண்டுசேர்க்க இணையதளத்தை பயன்படுத்த வேண்டும். 
இதற்கான முயற்சியை பெங்களூரு தமிழ்ச் சங்கம் எடுத்தால், அதற்கான முழுசெலவையும் நானே ஏற்கிறேன். திருவள்ளுவரின் தத்துவங்களை இளைஞர்களிடம் கொண்டு செல்ல சமூகவலைத்தளங்களையும் முழுமையாக பயன்படுத்த வேண்டும்' என்றார்.
என்.ஏ.ஹாரீஸ் பேசுகையில்,"மனிதகுலத்திற்கு வாழ்வியல் தத்துவங்களை தனது திருக்குறள் வாயிலாக வாரி வழங்கியவர் திருவள்ளுவர். ஒருவன் நல்லவனாக வாழ வழிகாட்டக்கூடிய காலப்பேழை திருக்குறள். எந்த மொழியினராக இருந்தாலும் நல்லவனாக வாழும் வழியை திருக்குறளில் படித்தறிய வேண்டும்' என்றார்.
முன்னதாக, இசையமைப்பாளர் பலராமன் இசையமைத்துள்ள திருக்குறள் கன்னடப்பாடல் தொகுப்பை எம்எல்ஏ ஹாரீஸ் வெளியிட, சங்கத் தலைவர் தி.கோ.தாமோதரன் பெற்றுக் கொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com