பெங்களூரு

பெங்களூரு தமிழ்ச் சங்கத்தில் பொங்கல் விழா

DIN

பெங்களூரு தமிழ்ச் சங்கத்தில் பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாட்டப்பட்டது. 
பெங்களூரு தமிழ்ச் சங்கம் சார்பில் பெங்களூரில் புதன்கிழமை பொங்கல், திருவள்ளுவர் நாள் விழா கொண்டாடப்பட்டது. சங்க இசை வகுப்பு மாணவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடி நிகழ்ச்சியை தொடக்கினர். இதைத் தொடர்ந்து, இசை வகுப்பு மாணவர்கள் வாய்ப்பாட்டு தவிர வீணை உள்ளிட்ட இசைக் கருவிகளை இசைத்து இன்னிசை வழங்கினர். 
சங்கத் தலைவர் தி.கோ.தாமோதரன் தலைமையில் நடந்த விழாவில் முன்னாள் மேயர் ஆர்.சம்பத் ராஜ், செய்தி மற்றும் விளம்பர வாரிய முன்னாள் தலைவர் ரகு தேவராஜ், சங்கத் துணைத் தலைவர் கோ.தாமோதரன், செயலாளர் இராமசுப்ரமணியன், துணைச் செயலாளர்கள் அமுதபாண்டியன், சுந்தரவேலு, செயற்குழு உறுப்பினர்கள் ராமசந்திரன், கருணாநிதி, மணிகண்டன், பாரி, சுந்தரேசன், கார்த்திகாயினி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.பிரகாசம், மாமன்ற உறுப்பினர் மமதா, முன்னாள் மாமன்ற உறுப்பினர் சரவணா, வேலுபிரபாகரன், வெண்ணிலா, காங்கிரஸ் இளைஞர் அணித்தலைவர் அப்துல்வகாப், கோபிசந்த், காங்கிரஸ் வட்டார காங்கிரஸ் தலைவர் ராஜேந்திரன், அமுதா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டார்கள். 
நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து சங்கத் தலைவர் தி.கோ.தாமோதரன் பேசுகையில்,"ஆதிபகவலன் எனப்படும் சூரியனை அடிப்படையாகக் கொண்டு தமிழர்களின் நாள்காட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, தை முதல்நாள்தான் தமிழ்ப் புத்தாண்டாகும். தற்போது நடைமுறையில் உள்ள 60 ஆண்டுகால சுழற்சிமுறை ஆண்டு கணக்கு நடைமுறை சாத்தியமில்லாதது. 
எனவே, 1921-ஆம் ஆண்டு மறைமலையடிகள் தலைமையில் கூடிய தமிழ்ச்சான்றோர்கள், அறிஞர்கள், கிறிஸ்துவுக்கு முன் 31 ஆண்டுகள் முன்னவர் திருவள்ளுவர் என்பதை வரலாற்றுரீதியாக உறுதி செய்தனர். திருவள்ளுவரின் பிறந்தநாளை அடிப்படையாக கொண்டு திருவள்ளுவர் தொடர்ஆண்டுமுறையை அமல்படுத்த தீர்மானம் நிறைவேற்றி, தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு தினமாக அறிவித்தனர். இதை தமிழர்கள் கடைப்பிடிக்க வேண்டும்' என்றார்.
இதைத் தொடர்ந்து பேசிய வாரிய முன்னாள் தலைவர் ரகுதேவராஜ், "பெங்களூரு தமிழ்ச் சங்கத்தலைவர், நிலம் கேட்டு அமைச்சர் கே.ஜே.ஜார்ஜிடம் மனுக் கொடுத்திருந்தார். அதன்மீது நடவடிக்கை எடுத்த சித்தராமையா தலைமையிலான அரசு, 2 ஏக்கர் நிலத்தை தமிழ்ச் சங்கத்துக்கு ஒதுக்கியது.
இந்தநிலம் அடையாளப்படுத்தப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு கிழக்கு வட்டம், பிதரஹள்ளி ஒன்றியம், ஹதூர் கிராமத்தில் சர்வே எண்-74-இல் உள்ள 2 ஏக்கர் நிலம் பெங்களூரு  தமிழ்ச் சங்கத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். 
இதற்காக முயற்சி எடுத்த முன்னாள் முதல்வர் சித்தராமையா, அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ் ஆகியோருக்கு தமிழர்கள் நன்றி கடன்பட்டுள்ளனர்' என்றார். தொடர்ந்து பேசிய முன்னாள் மேயர் ஆர்.சம்பத்ராஜ், "அரசு ஒதுக்கியுள்ள 2 ஏக்கர் நிலத்தில் கட்டடம் கட்டுவதற்கு தேவையான உதவிகளை செய்ய தயாராக இருக்கிறேன்' என்றார்.
இதைத் தொடர்ந்து, சென்னையை சேர்ந்த மாற்று ஊடக மையக் கலைஞர்களால் பறையாட்டம், கரகாட்டம், சிலம்பாட்டம், சக்கைக்குச்சி ஆட்டம், ஒயிலாட்டம், களியலாட்டம், வேடராட்டம் நடைபெற்றது. பெங்களூரு தமிழ்ச் சங்க நடனப் பள்ளி மாணவர்களின் நாட்டிய நிகழ்ச்சி, தீம்தரிகிட நாட்டுப்புறக்கலைஞர்களின் நாட்டுப்புறக்கலைநிகழ்ச்சி, காமராசர் உயர்நிலைப் பள்ளி, புனித அல்போன்ஸ் பள்ளி, சங்கீதா நடனப்பள்ளி மாணவர்களின் தைப்பொங்கல் நடனம், ஒயிலாட்டம், கரகாட்டம், மீனவர் நடனம், பரதநாட்டியம், கோலாட்டம் போன்ற இசை மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 64 வயது ரமணியம்மா, சோனியா, ரேவதி ஆகியோரின் நாட்டுப்புற நடனம் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது.
தமிழ்ச் சங்க ஆண்டுவிழாப் போட்டியில் வெற்றிபெற்ற தமிழ் மாணவர்களுக்கு 350 பரிசுகள் அளிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து நூல் வெளியீடும் கவியரங்கமும் நடைபெற்றது. கவிஞர் ராஜேந்திரபாபு தலைமையில் நடந்த கவியரங்கத்தில் 45 கவிஞர்கள் கவிபாடினர். உழவூட்டும் பொங்கலும், உணர்வூட்டும் தமிழும் என்ற தலைப்பிலான நூலை சங்கத் தலைவர் தி.கோ.தாமோதரன் வெளியிட, செயலாளர் இராமசுப்ரமணியன் பெற்றுக் கொண்டார். 
முன்னதாக, பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் முன்வாசலில் சங்கத்தலைவர்.தி.கோ.தமோதரன் தலைமையில் இராமசுப்பிரமணியன், அமுத பாண்டியன், பேராசிரியர்கள் பொன்.க.சுப்பிரமணியன், கோவிந்தராசன் மற்றும் மகளிரால் பொங்கல் பொங்க வைத்து, அனைவருக்கும் பரிமாறப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT