பாஜக எம்.எல்.ஏ.க்களை சிறை வைத்துள்ளது ஏன்? குமாரசாமி கேள்வி

ஹரியாணா மாநிலத்தில் உள்ள குரு கிராமத்தில் கர்நாடகத்தை சேர்ந்த பாஜக எம்எல்ஏக்களை அக்கட்சி அடைத்து வைத்துள்ளது ஏன் என குமாரசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

ஹரியாணா மாநிலத்தில் உள்ள குரு கிராமத்தில் கர்நாடகத்தை சேர்ந்த பாஜக எம்எல்ஏக்களை அக்கட்சி அடைத்து வைத்துள்ளது ஏன் என குமாரசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: 
ஒருசிலர் ஊடகங்களை தவறாகப் பயன்படுத்திக் கொண்டு ஜன.15-ஆம் தேதி சங்கிராந்தி பண்டிகையின் போது ஏதோ புரட்சி செய்யப் போவதாக நினைத்தனர். ஆனால், புரட்சி செய்வதாக நினைத்துக் கொண்டு மருட்சியில் மூழ்கியுள்ளனர். பாஜகவின் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. எனது அரசு கவிழாது என்று ஆரம்பத்தில் இருந்தே கூறிவருகிறேன். பாஜக எம்எல்ஏக்களை இழுக்க நான் எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. ஆனால், பாஜக எம்எல்ஏக்களை இழுக்க நான் முயற்சிப்பதாக எடியூரப்பா தொடர்ந்து குற்றம்சாட்டிவருகிறார். எனது அரசை வீழ்த்த அனைத்து வகையான தந்திரங்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள். 
கர்நாடக மாநிலம் வறட்சியில் வாடிக் கொண்டிருக்கும் போது ஆங்கிலப் புத்தாண்டை கொண்டாட எனது குடும்பத்தினருடன் வெளிநாடு சென்றிருந்ததை பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா விமர்சித்திருந்தார். இப்போதும், ஹரியாணா மாநிலம், குருகிராமத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் பாஜக எம்எல்ஏக்கள் தங்கியிருப்பது எதனால்? விவசாயிகள் மீது அக்கறை கொண்ட ஒரேதலைவர் தான் என்பது போல ஆத்திரத்தோடு கருத்து தெரிவித்திருந்த எடியூரப்பாவும் அவரது சகாக்களும் குருகிராமத்தில் கர்நாடக வறட்சி நிலை குறித்து ஆய்வு நடத்தி வருகிறார்களா என்ன? கர்நாடகத்தில் வறட்சி இல்லாமல் ஆகிவிட்டதா? 
தனது கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்களை கட்டுப்பாட்டோடு வைத்துக்கொள்ள இயலாத எடியூரப்பா, அதற்காக காங்கிரஸையும், மஜதவையும் சாடுவது ஆச்சரியமளிக்கிறது. பாஜக தனது எம்எல்ஏக்களை குரு
கிராமத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் அடைத்துவைத்துள்ளது. அப்படியானால், எடியூரப்பாவுக்கும் அவர்களது எம்எல்ஏக்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுகிறதா? காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்களை யாரும் நட்சத்திர விடுதியில் அடைத்து வைக்கவில்லை. எங்கள் கட்சி எம்எல்ஏக்களை சுதந்திரமாக செயல்பட அனுமதித்துள்ளோம். 
காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்களை இழுக்க எல்லா முயற்சிகளை மேற்கொண்டுவிட்டு, கடைசியில் எங்களை (மஜத,காங்கிரஸ்) தூற்றுகிறது பாஜக. பாஜகவினர் கூறுவதை எல்லாம் மக்கள் ஏற்றுக் கொள்வார்களா என்ன? பாஜகவினர் மக்களை தவறாக புரிந்து கொண்டுள்ளனர். பாஜகவினருக்கு மக்கள் தகுந்த நேரத்தில் பதிலடி கொடுப்பார்கள் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com