மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க முயற்சிக்கவில்லை

கர்நாடகத்தில் மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைக் கவிழ்க்க முயற்சிக்கவில்லை என்று பாஜக மாநிலத் தலைவர் பி.எஸ்.எடியூரப்பா தெரிவித்தார்.

கர்நாடகத்தில் மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைக் கவிழ்க்க முயற்சிக்கவில்லை என்று பாஜக மாநிலத் தலைவர் பி.எஸ்.எடியூரப்பா தெரிவித்தார்.
பெங்களூரு டாலர்ஸ் காலனியில் உள்ள தனது இல்லத்தில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:  அண்மையில் தில்லிக்கு பாஜக எம்.எல்.ஏ.க்களை அழைத்துச் சென்று,  மக்களவைத் தேர்தல் குறித்து விவாதித்தோம்.  இதை காங்கிரஸ், மஜத கட்சியினர் விமர்சித்துள்ளனர்.  எங்கள் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்களை எங்குவேண்டுமானாலும் அழைத்துச் செல்ல எங்களுக்கு உரிமை உள்ளது.  இதனை அவர்கள் விமர்சிக்க வேண்டிய அவசியமில்லை. 
ஆனால், காங்கிரஸ், மஜத கட்சியினர் தங்கள் கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை பாஜகவில் இணைக்க தில்லிக்கு அழைத்துச் சென்றுள்ளதாக பொய்யான குற்றச்சாட்டைக் கூறி வருகின்றனர்.  காங்கிரஸ், மஜத கட்சியினர் முதலில் தங்கள் உள்கட்சி பிரச்னையைத் தீர்த்துக் கொள்ள வேண்டும்.  அதைவிடுத்து தங்கள் கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏக்களை இழுக்க பாஜக முயற்சி செய்வதாக குற்றம் சுமத்துவதை நிறுத்த வேண்டும். 
மகாராஷ்டிர மாநிலத்தின் ஆளுநராக எஸ்.எம்.கிருஷ்ணா இருந்த போது,  காங்கிரஸார் ஜனநாயகத்தை படுகொலை செய்ததை மக்கள் அறிவார்கள்.  எனவே, ஜனநாயகம் குறித்து பேசுவதற்கு அவர்களுக்கு உரிமையில்லை.  கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சியைக் கவிழ்க்க பாஜக முயற்சிக்கவில்லை.  ஆனால், முன்னாள் முதல்வர் சித்தராமையா,  ஆட்சியைக் கவிழ்க்க நாங்கள் முயற்சி செய்வதாகக் கூறி வருகிறார். 
 சித்தராமையாவுக்கு ஏற்கெனவே சாமுண்டீஸ்வரி தொகுதி மக்கள் தகுந்த பாடம் புகட்டியுள்ளனர்.  என்றாலும், அவர் இன்னும் பாடம் கற்காமல் குற்றச்சாட்டுகளைக் கூறி வருகிறார்.  மாநிலத்தில் கடுமையான வறட்சி நிலவி வருகிறது.  அதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் காங்கிரஸ்,  மஜத கட்சியினர் பாஜக மீது குற்றம் சுமத்துவதிலேயே கவனத்தைச் செலுத்தி வருகின்றனர் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com