5 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் இளைஞர் சாவு; மீட்புப் பணிகள் தீவிரம்

கர்நாடக மாநிலம், தார்வாட்டில் 5 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் இளைஞர் உயிரிழந்தார்.  மேலும்,  பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

கர்நாடக மாநிலம், தார்வாட்டில் 5 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் இளைஞர் உயிரிழந்தார்.  மேலும்,  பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
தார்வாட் குமரேஸ்வர நகரில் 5 மாடிக் கட்டடப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது,  செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் திடீரென கட்டடம் சரிந்து விழுந்தது.  இதில் கீழ் மாடியிலிருந்த கடைகள், ஹோட்டல்கள் உள்பட கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்த பலர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். 
இதையடுத்து, அங்கிருந்த பொதுமக்கள், தீயணைப்பு படையினர் உதவியுடன் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.  அப்போது, இறந்த நிலையில் சலீம் மகந்தர் (28) என்பவரின் சடலத்தையும், காயமடைந்த 22-க்கும் மேற்பட்டவர்களும் மீட்கப்பட்டனர்.  இடிபாடுகளுக்கிடையே மேலும் பலர் சிக்கி இருக்கக்கூடும் என அஞ்சப்படுவதால்,  தேர்தலையொட்டி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த எல்லைப் பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டு,  மீட்டுப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 
 மீட்டுப் பணி இரவு முழுவதும் நடைபெற்று புதன்கிழமையும் தொடரும் எனக் கருதப்படுவதால்,  அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பெங்களூரிலிருந்து டிஜிபி ரவிகாந்த் கெளடா தலைமையில் தீயணைப்புப் படையினரும் சிறப்பு விமான மூலம் தார்வாட்டுக்குச் சென்றுள்ளனர்.
சம்பவ இடத்தை மாவட்ட ஆட்சியர் தீபா சோழன்,  காவல் ஆணையர் நாகராஜ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பார்வையிட்டு,  மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர்.  கட்டட இடிபாடு குறித்த விவரங்களை தலைமைச் செயலாளரிடம் கேட்டறிந்த முதல்வர் குமாரசாமி,  மீட்புப் பணிகளுக்கு தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com