மக்களவைத் தேர்தல்: மத்திய பெங்களூரு தொகுதியில்நடிகர் பிரகாஷ்ராஜ் வேட்புமனு தாக்கல்

மக்களவைத் தேர்தலில் மத்திய பெங்களூரு தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும்

மக்களவைத் தேர்தலில் மத்திய பெங்களூரு தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் நடிகர் பிரகாஷ்ராஜ் வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.
தமிழ், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட பன்மொழிகளில் நடித்து புகழ்பெற்ற நடிகர் பிரகாஷ்ராஜ், பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ் கொலை செய்யப்பட்ட பிறகு தீவிர அரசியலில் ஈடுபடத் தொடங்கினார்.  பிரதமர் மோடி தலைமையிலான பாஜகவை கடுமையாக விமர்சித்து வந்த பிரகாஷ் ராஜுக்கு கர்நாடகத்தில் பாஜகவினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர். 
தேர்தல் அரசியலில் ஈடுபட மாட்டேன் எனக் கூறிவந்த பிரகாஷ்ராஜ்,  திடீரென மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்திருந்தார். மதவாத சிந்தனைகள் அதிகமாகக் காணப்படும் அவரது சொந்த கடலோர கர்நாடகப் பகுதியை சேர்ந்த மக்களவைத் தொகுதிகளில் பிரகாஷ்ராஜ் போட்டியிடுவார் என்று
எதிர்பார்க்கப்பட்டது. 
இந்நிலையில்,  தமிழர்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், பிற்படுத்தப்பட்டோர் அதிகமாக வசிக்கும் மத்திய பெங்களூரு தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.  இது பாஜகவினரின் கேலி,  கிண்டலுக்கு உள்ளானது.  மத்திய பெங்களூரு தொகுதியில் பிறந்து,  கல்வி பயின்று, நாடகத்தில் இணைந்து,  திரையில் நுழைந்து பிரபலமானதால் இத் தொகுதியில் போட்டியிடுவதாக  பிரகாஷ்ராஜ் விளக்கம் அளித்துள்ளார். 
கடந்த 3 மாதங்களாகவே மத்திய பெங்களூரு தொகுதியில் தங்கியிருந்து,  சூறாவளிப் பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்து ஆதரவு திரட்டிவரும் நடிகர் பிரகாஷ்ராஜ், அத்தொகுதியில் இருந்து சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தார். 
குறிப்பாக தமிழர்களின் ஆதரவை எதிர்பார்த்து தேர்தலில் பிரசாரம் செய்துவரும் பிரகாஷ்ராஜ்,  வேட்புமனு தாக்கல் செய்த பிறகு,செய்தியாளர்களிடம் கூறுகையில்,"பாஜக, காங்கிரஸ் போன்ற தேசியக் கட்சிகள் மக்களை தோல்வியடைய செய்துவிட்டன.  எனவே, நான் மக்களின் குரலாக இருக்க விரும்புகிறேன். இந்த போராட்டத்தில் நான் வெற்றிபெறுவேன் என நம்பிக்கை உள்ளது என்றார்.
வேட்புமனு தாக்கல் செய்து வெளியே வந்த பிரகாஷ்ராஜின் காரை சூழ்ந்த பாஜகவினர்,   பிரதமர் மோடிவாழ்க என்று முழக்கமிட்டனர்.  இதை பொருள்படுத்தாத பிரகாஷ்ராஜ் அங்கிருந்து காரில் ஏறி விரைந்து சென்றுவிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com