தும்கூரு மக்களவைத் தொகுதியில் எச்.டி.தேவெ கௌடா, காங்கிரஸ் அதிருப்தி வேட்பாளர் இருவரும் போட்டி

மஜத தேசியத் தலைவரும், முன்னாள் பிரதமருமான எச்.டி.தேவெ கெளடா தும்கூரு மக்களவைத் தொகுதியில் போட்டியிட முடிவுசெய்துள்ளார்.


மஜத தேசியத் தலைவரும், முன்னாள் பிரதமருமான எச்.டி.தேவெ கெளடா தும்கூரு மக்களவைத் தொகுதியில் போட்டியிட முடிவுசெய்துள்ளார். இதனிடையே, இவரை எதிர்த்து கூட்டணி கட்சியான காங்கிரஸின் அதிருப்தி வேட்பாளரும், தற்போதைய எம்.பி.யுமான முத்தனுமே கெளடாவும் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமரும், மஜத தேசியத் தலைவருமான எச்.டி.தேவெ கெளடா, கடந்த பல ஆண்டுகளாகவே ஹாசன் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வந்தார்.  இம்முறை நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று அத் தொகுதியை தனது பெயரன் பிரஜ்வலுக்கு விட்டுக்கொடுத்து விட்டார்.
கர்நாடகத்தில் காங்கிரஸும், மஜதவும் கூட்டணி அமைத்து போட்டியிடும் நிலையில்,  20 தொகுதிகளில் காங்கிரஸும், 8 தொகுதிகளில் மஜதவும் போட்டியிட உள்ளன. இதனிடையே,  மஜதவுக்கு ஒதுக்கிய 8 தொகுதிகளில் வட பெங்களூரு அல்லது தும்கூரு தொகுதியில் தேவெ கெளடா போட்டியிட வேண்டுமென்ற மஜதவினர் வலியுறுத்தி வந்தனர்.  இதற்கு இணங்காமல் இருந்த தேவெ கெளடா,  கட்சியினர் நெருக்கடிக்கு அடிபணிந்து தேர்தலில் போட்டியிடுவது என்று முடிவெடுத்துள்ளதோடு,  தும்கூரு தொகுதியில் போட்டியிடவும் திட்டமிட்டுள்ளார்.  இத் தகவலை தேவெ கெளடா உறுதிப்படுத்தினார்.  மேலும், மார்ச் 25-ஆம் தேதி தும்கூரில் வேட்புமனு தாக்கல் செய்யப்போவதாகவும் தேவெ கெளடா தெரிவித்தார்.
இதனிடையே,  தும்கூரு தொகுதியின் காங்கிரஸ் எம்.பி. முத்தனுமே கெளடா, தனக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு அளிக்காததற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்திருந்தார். தேவெ கெளடா போட்டியிடாத நிலையில்,  இத் தொகுதியை தான் போட்டியிடுவதற்கு வசதியாக காங்கிரஸுக்கு விட்டுத்தர வேண்டுமென்று முத்தனுமே கெளடா தெரிவித்திருந்தார்.  இதனிடையே, தும்கூரில் தேவெ கெளடா போட்டியிடுவது என்று முடிவானதும், தனது நிலைப்பாட்டை முத்தனுமே கெளடா மாற்றிக்கொண்டுள்ளார்.
தும்கூரில் சனிக்கிழமை தனது ஆதரவாளர்களுடன் நீண்டநேரம் ஆலோசனை நடத்திய முத்தனுமே கெளடா, ஆதரவாளர்களின் அறிவுறுத்தலின் பேரில்,  தும்கூரு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக தான் போட்டியிடப் போவதாகவும், அதற்கான வேட்புமனுவை திங்கள்கிழமை (மார்ச் 25) தாக்கல் செய்யப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.  தனக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்காதது சரியல்ல என்று வாதிட்டுள்ள முத்தனுமே கெளடா,  நாடாளுமன்றத்தில் சிறப்பான விவாதங்களில் பங்கேற்ற தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
தும்கூரு தொகுதியை காங்கிரஸ் தக்கவைக்காமல் மஜதவுக்கு விட்டுக்கொடுத்தது அந்த மாவட்ட காங்கிரஸ் தொண்டர்களிடையே கடும் அதிருப்திக்கு காரணமாக அமைந்துள்ளது. இது கூட்டணி கட்சிகளிடையே கருத்து முரண்பாடுகளுக்கு வழிவகுத்துள்ளது.  தும்கூரு தொகுதியில் இருந்து பாஜக வேட்பாளராக ஜி.எஸ்.பசவராஜ் போட்டியிடுவதற்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com