சென்னை

அடையாறு, கூவம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் விவகாரம்: பசுமைத் தீர்ப்பாய உத்தரவுக்கு இடைக்காலத் தடை

DIN


அடையாறு, கூவம் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பான விவகாரத்தில், தமிழக பொதுப் பணித் துறைக்கு ரூ.2 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடைவிதித்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கூவம் உள்ளிட்ட நதிகளின் கரையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி, சமூக ஆர்வலர் ஜவஹர்லால் சண்முகம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தொடர்ந்த வழக்கு கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை விசாரித்த பசுமைத் தீர்ப்பாயம், 2017-18 -ஆம் ஆண்டின் பருவமழை தொடங்குவதற்கு முன்பாக அடையாறு, கூவம் மற்றும் பக்கிங்ஹாம் உள்ளிட்ட கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், சுத்தப்படுத்தும் பணிகளை மேற்கொள்ளவும் தமிழக அரசு மற்றும் பொதுப்பணித் துறைக்கு உத்தரவிட்டது.
நீதிபதிகள் கண்டனம்: இந்த நிலையில், இவ்வழக்கு பசுமைத் தீர்ப்பாயத்தில் விசாரணைக்கு வந்தபோது, ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் இருப்பதற்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். 
மேலும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கணக்கெடுக்கப்பட்டுள்ள 26 ஆயிரத்து 300 ஆக்கிரமிப்புகளில் 408 ஆக்கிரமிப்புகள் மட்டுமே அகற்றப்பட்டுள்ளதாக தெரிவித்த நீதிபதிகள், ஆக்கிரமிப்புகளை அகற்றாத தமிழக பொதுப்பணித் துறைக்கு ரூ.2 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டது. 
மேலும், இந்தத் தொகையை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்குச் செலுத்த வேண்டும் எனவும் தீர்ப்பாயம் தெரிவித்திருந்தது.
உயர்நீதிமன்றத்தில் வழக்கு: தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி, தமிழக பொதுப்பணித் துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில் அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர் பி.ஹெச்.அரவிந்த் பாண்டியன் ஆஜராகி, இந்த வழக்கில் போதுமான ஆவணங்களைத் தாக்கல் செய்யவில்லை; ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை என்பதற்காக தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அதிகபட்சமாக ரூ.2 கோடி அபராதம் விதித்திருப்பது தவறானது. 
நீதிமன்ற வழக்குகளின் காரணமாகவே ஆக்கிரமிப்புகளை முழுமையாகவே அகற்ற முடியவில்லை. இதுதொடர்பான அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய தயராக உள்ளோம் எனத் தெரிவித்தார். 
இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழக பொதுப்பணித் துறைக்கு ரூ.2 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர். 
மேலும், இந்த மனு தொடர்பாக மனுதாரர் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 4 வாரத்துக்கு ஒத்திவைத்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

சுனைனா, நவீன் சந்திராவின் இன்ஸ்பெக்டர் ரிஷி!

இதுதான் எனது சிறந்த ஓவர்; மனம் திறந்த ஆவேஷ் கான்!

விவசாய கண்காணிப்புத் துறையில் வேலை: 30-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

அலைமகள்.. சாய் தன்ஷிகா!

SCROLL FOR NEXT