பெரியார் சிலை அவமதிப்பு: வழக்குரைஞர் கைது- சாலை மறியல் போராட்டம்

சென்னை அண்ணாசாலையில் பெரியார் சிலை மீது காலணி வீசியதாக வழக்குரைஞர் கைது செய்யப்பட்டார். இச் சம்பவத்தைக் கண்டித்து


சென்னை அண்ணாசாலையில் பெரியார் சிலை மீது காலணி வீசியதாக வழக்குரைஞர் கைது செய்யப்பட்டார். இச் சம்பவத்தைக் கண்டித்து விடுதலை சிறுத்தைக் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தந்தை பெரியாரின் 140-ஆவது பிறந்தநாளையொட்டி, சென்னை அண்ணா சாலை சிம்சன் சிக்னல் அருகே உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்காக அரசியல் கட்சியினர் திங்கள்கிழமை காலை திரண்டனர். பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்துவதற்காக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் திரண்டிருந்தபோது, அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு நபர் திடீரென தான் அணிந்திருந்த காலணியைக் கழற்றி பெரியார் சிலை மீது வீசியுள்ளார்.
இதைப் பார்த்த அரசியல் கட்சியினர் அதிர்ச்சியடைந்தனர். உடனே அவர்கள், அந்த நபரை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர் அங்கிருந்து தப்பியோடினார். அரசியல் கட்சியினர் அவரை விரட்டிப் பிடித்து தாக்கினர். அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸார், அந்த நபரை பாதுகாப்பாக மீட்க முயன்றனர்.
ஆனால் அரசியல் கட்சியினர், போலீஸாரை மீட்க விடாமல் தடுத்தனர். இதனால் போலீஸாருக்கும், அரசியல் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சிறு போராட்டத்துக்கு பின்னரே போலீஸார், அந்த நபரை மீட்டு, ரோந்து வாகனத்தில் ஏற்றினர்.
இதன் பின்னரும், அரசியல் கட்சியினர் அந்த வாகனத்தை வெளியே எடுக்க முடியாதபடி முற்றுகையிட்டனர். சுமார் அரைமணி நேர போராட்டத்துக்கு பின்னரே, அந்த நபரை அங்கிருந்து போலீஸார் அழைத்துச் சென்றனர்.
சாலை மறியல்: இதையடுத்து பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் சம்பவத்தை அறிந்து, சம்பந்தப்பட்ட நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி அங்கு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அண்ணா சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போலீஸார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். 
வழக்குரைஞர் கைது: பெரியார் சிலை மீது காலணி வீசியதாக பிடிபட்ட நபரிடம், சிந்தாதிரிப்பேட்டை போலீஸார் விசாரணை செய்தனர். இதில் அவர், வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள புதுப்பூங்குளம் பகுதியைச் சேர்ந்த த.ஜெகதீசன் (33) என்பதும், வழக்குரைஞரான அவர் ஈக்காட்டுதாங்கலில் தங்கியிருந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞராகப் பணிபுரிவதும், பாரதிய ஜனதா கட்சியின் வழக்குரைஞர் அணியில் இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஜெகதீசனை கைது செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com