திருவான்மியூர் பாம்பன் சுவாமி நினைவிடம்: அறநிலையத் துறையிடம் ஒப்படைக்க உத்தரவு

சென்னை திருவான்மியூரில் உள்ள பாம்பன் சுவாமிகள் நினைவிடத்தை தமிழக இந்து சமய அறநிலையத் துறையிடம் 3 நாள்களுக்குள் ஒப்படைக்க மகா தேஜோ மண்டல
திருவான்மியூர் பாம்பன் சுவாமி நினைவிடம்: அறநிலையத் துறையிடம் ஒப்படைக்க உத்தரவு

சென்னை திருவான்மியூரில் உள்ள பாம்பன் சுவாமிகள் நினைவிடத்தை தமிழக இந்து சமய அறநிலையத் துறையிடம் 3 நாள்களுக்குள் ஒப்படைக்க மகா தேஜோ மண்டல சபாவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் மகா தேஜோ மண்டல சபா அமைப்பின் செயலாளர் எம்.ஜெயராமன் தாக்கல் செய்த மனுவில், கடந்த 1850-ஆம் ஆண்டு ராமேசுவரத்தில் ஸ்ரீ பாம்பன் குமரகுருதாசர் பிறந்தார். முருகப் பெருமான் குறித்து பாம்பன் சுவாமிகள் 6,666 தமிழ் பாடல்களைப் பாடியுள்ளார். சென்னை ஜார்ஜ் டவுன் பகுதியில் வசித்து வந்த அவர், கடந்த 1929-ஆம் ஆண்டு மே 30-ஆம் தேதி மறைந்தார். அவரது உடல் திருவான்மியூரில் அடக்கம் செய்யப்பட்டது.
அவரது நினைவிடத்துக்காக எங்களது சபா 3.02 ஏக்கர் நிலத்தை விலைக்கு வாங்கியது. இந்த நினைவிடத்தில் கடந்த 1940-ஆம் ஆண்டு முதல் குரு பூஜை, சித்ரா பெளர்ணமி பூஜை, அருணகிரிநாதர் பூஜை என பல்வேறு வழிபாடுகளை செய்து வந்தோம். இந்த நிலையில் கடந்த 1984-ஆம் ஆண்டு சுவாமியின் நினைவிடம் இந்து சமய அறநிலையத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த முடிவு அப்போதைய சபாவின் செயலர் டி.டி.குப்புசாமி தன்னிச்சையாக எடுத்தது.
இதையடுத்து எங்களது சபாவின் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உரிமையியல் நீதிமன்றம், சபாவுக்கு சாதகமாகத் தீர்ப்பு வழங்கியது. இந்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றமும் உறுதி செய்து உத்தரவிட்டது. ஆனால், இதுவரை பாம்பன் சுவாமி நினைவிடத்தை இந்து சமய அறநிலையத் துறை எங்களிடம் ஒப்படைக்கவில்லை. எனவே, நினைவிடத்தை எங்களிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, பாம்பன் சுவாமி நினைவிடத்தை மகா தேஜோ மண்டல சபாவிடம் ஒப்படைக்க இந்து சமய அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டார்.
மேல் முறையீட்டு மனு தாக்கல்: இந்த உத்தரவை எதிர்த்து இந்து சமய அறநிலையத் துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கு நீதிபதிகள் ஹூலுவாடி ஜி.ரமேஷ் மற்றும் கே.கல்யாணசுந்தரம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து, பாம்பன் சுவாமி நினைவிடத்தை இந்து சமய அறநிலையத் துறையிடம் 3 நாள்களுக்குள் ஒப்படைக்க உத்தரவிட்டனர். ஒப்படைக்கத் தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட சபா நிர்வாகிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com