சென்னை

மலேசியாவிலிருந்து கப்பலில் இறக்குமதி மணல்; எண்ணூர் துறைமுகத்தை நாளை வந்தடைகிறது: கட்டுமானத் தொழில் மீண்டும் சூடுபிடிக்கும்

முகவை க.சிவக்குமார்


மலேசியாவிலிருந்து தனியார் நிறுவனம் மூலம் இறக்குமதி மணலை ஏற்றி வரும் எம்.வி. அவ்ரலியா என்ற சரக்குக் கப்பல் சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகத்தை வெள்ளிக்கிழமை வந்தடைகிறது.
இந்த மணல் தமிழக பொதுப் பணித் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு நேரடியாக பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது. இதையடுத்து முடங்கிக் கிடக்கும் கட்டுமானத் தொழில் மீண்டும் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் நிலவும் மணல் தட்டுப்பாட்டையடுத்து வெளிநாட்டிலிருந்து மணல் இறக்குமதி செய்ய சில தனியார் நிறுவனங்கள் முயற்சி மேற்கொண்டன. இந்நிலையில் புதுக்கோட்டையைச் சேர்ந்த ஆர்.எம். ராமையா எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனம் கடந்த ஆண்டு அக்டோபரில் மலேசிய நாட்டிலிருந்து சுமார் 55 ஆயிரம் மெட்ரிக் டன் மணலை கப்பல் மூலம் கொண்டு வந்து தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் வழியாக இறக்குமதி செய்தது. பின்னர் லாரிகள் மூலம் விற்பனைக்கு எடுத்துச் செல்ல முயன்றபோது பொதுப்பணித் துறை அதிகாரிகள் தடுத்தனர். மேலும் மணலை இறக்குமதி செய்து தனியார் நிறுவனங்கள் விற்பனை செய்ய தமிழக அரசு தடை விதித்தது. இதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில் தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளை உடனடியாக மூட உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
இதுகுறித்த வழக்கு நடைபெற்று வந்த நிலையில் இறக்குமதி செய்யப்பட்ட மணலை டன் ஒன்றுக்கு ரூ. 2,050-க்கு தமிழக அரசு பெற்றுக் கொள்வதென உச்ச நீதிமன்ற விசாரணையின்போது முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து கடந்த ஓராண்டாக நீடித்து வந்த இப்பிரச்னை முடிவுக்கு வந்தது. 
எண்ணூர் துறைமுகம் வரும் மணல் கப்பல்: இதையடுத்து பொதுப்பணித் துறை சார்பில் வெளிநாட்டு மணலை இறக்குமதி செய்து வழங்க ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டது. இதில் 10-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்றன. இதில் இரண்டு நிறுவனங்கள் மட்டும் இறுதியாகத் தேர்வு செய்யப்பட்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இவற்றில் தேர்வு செய்யப்பட்ட தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் மதன்பூரைச் சேர்ந்த இன்ரிதம் எனர்ஜி பிரைவேட் லிமிடெட்' நிறுவனம் மலேசியாவிலிருந்து மணலை இறக்குமதி செய்கிறது.
மலேசியாவின் பஹாங் மாநிலம் பீகான் துறைமுகத்திலிருந்து 56,750 மெட்ரிக் டன் ஆற்று மணலை ஏற்றிய எம்.வி.அவ்ரலியா என்ற கப்பல் வெள்ளிக்கிழமை (செப்.21) எண்ணூர் காமராஜர் துறைமுகத்தை வந்தடைகிறது. இத்துறைமுகத்தில் அமைந்துள்ள செட்டிநாடு பல்சரக்கு முனையத்தில் முதல் முறையாக மணல் இறக்குமதி செய்யப்பட உள்ளது. பின்னர் ஓரிடத்தில் சேமித்து வைக்கவும் தேவையான அனைத்து வசதிகளை செட்டிநாடு முனையம் மற்றும் துறைமுக அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். 
நேரடியாக விற்க முடிவு: இதுகுறித்து எண்ணூர் காமராஜர் துறைமுக வட்டாரத்தில் தெரிவித்ததாவது:
எண்ணூர் துறைமுகம் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகள் காரணமாக முதல் முறையாக மணல் கப்பல் சென்னைக்கு வருகை தர உள்ளது. கப்பலில் கொண்டு வரப்படும் மணல் அடுத்த இரண்டு அல்லது மூன்று தினங்களில் முழுமையாக இறக்கப்படவுள்ளது. அதைத் தொடர்ந்து இன்ரிதம் நிறுவனம் தமிழக அரசின் பொதுப்பணித் துறையிடம் மணலை ஒப்படைக்க உள்ளது.
வலைதளத்தில் பதிவு: இதைத் தொடர்ந்து பொதுப்பணித் துறை வலைதளத்தில் யார் வேண்டுமானாலும் தங்களுக்குத் தேவையான மணல் தேவை குறித்து பதிவு செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்படுகிறது. மேலும் மணலை நேரடியாக வாடிக்கையாளர்களின் இடங்களுக்கே கொண்டுச் சென்று விநியோகம் செய்ய லாரிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளன. மணல் தேவைக்காக தனியார் முகவர்கள் யாரையும் தொடர்பு கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. விலை, விற்பனை செய்யப்படும் முறை குறித்த விபரங்கள் அனைத்தும் இன்னும் ஓரிரு நாள்களில் தமிழக பொதுப்பணித்துறை மூலம் அறிவிக்கப்படும் எனவும், தமிழகத்தின் மணல் தேவைக்கு ஏற்ப தொடர்ந்து மணல் இறக்குமதி செய்ய வாய்ப்புள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மணல் தட்டுப்பாட்டை நீக்க தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக தற்போது வெளிநாட்டில் இருந்து மணல் கொண்டு வரப்படும் நிலையில், முடங்கியுள்ள கட்டுமானப் பணிகள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எண்ணூர் காமராஜர் துறைமுகத்துக்கு மலேசியாவிலிருந்து மணல் ஏற்றி வரும் மலேசிய எம்.வி.அவரலியா சரக்கு கப்பல்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டெபிட் காா்ட் கட்டணங்களை உயா்த்திய பாரத ஸ்டேட் வங்கி

தஞ்சாவூா் பாஜக வேட்பாளா் மீது 32 வழக்குகள் நிலுவை

கா்நாடகத்தில் வேட்புமனு தாக்கல் தொடக்கம் : முதல்நாளில் 29 மனுக்கள் தாக்கல்

அதிமுகவால் தூக்கத்தை தொலைத்த ஸ்டாலின், உதயநிதி -இபிஎஸ் பிரசாரம்

2024 மக்களவைத் தோ்தல் மற்றொரு விடுதலைப் போராட்டம்: கனிமொழி எம்.பி.

SCROLL FOR NEXT