மூட்டுமாற்று அறுவை சிகிச்சைக்குப் பின் 12 மணி நேரத்தில் வீடு திரும்பிய மூதாட்டி

சென்னை குரோம்பேட்டை பார்வதி மருத்துவமனையில் 60 வயது பெண்ணுக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு 12 மணி நேரத்தில் அவர் வீடு திரும்பியுள்ளார்.

சென்னை குரோம்பேட்டை பார்வதி மருத்துவமனையில் 60 வயது பெண்ணுக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு 12 மணி நேரத்தில் அவர் வீடு திரும்பியுள்ளார்.
 மருத்துவமனையின் எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை மருத்துவர் எம். வெற்றிகுமார் தலைமையிலான மருத்துவக் குழுவினர், யூனிகான்ட்லேயர் மூட்டு ஆர்த்தோபிளாஸ்ட்டி என்ற முறையில் இந்த அறுவை சிகிச்சையை செய்து சாதனை படைத்துள்ளனர்.
 இது குறித்து மருத்துவர் எஸ்.முத்துகுமார் கூறியது: பொழிச்சலூரைச் சேர்ந்தவர் லீலா சங்கர் (60). இடது கால் மூட்டில் கடுமையான வலி ஏற்பட்டு நடக்க முடியாத நிலையில் அவர் பார்வதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு முழுமையான பரிசோதனைகள் மேற்கொண்டபோது கீல்வாத பாதிப்பு இருப்பது தெரிய வந்தது.
 இதையடுத்து மூட்டின் ஒரு பகுதியில் அறுவை சிகிச்சை செய்வதன் மூலம் அவரது மூட்டுவலி பிரச்னைக்குத் தீர்வு காண முடிவு செய்யப்பட்டது.
 இங்குள்ள மருத்துவமனைகளில் மூட்டு அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்களை நான்கு முதல் ஐந்து நாள்களுக்கு மருத்துவமனையில் தங்க வைக்கப்பட்டு மருத்துவக் கண்காணிப்பில் வைத்திருப்பது வழக்கம். ஆனால் லீலா சங்கரைப் பொருத்தவரை, காலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இரவு அவர் வீடு திரும்பும் வகையில் சிறப்பான வகையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்றார்.
 அறுவை சிகிச்சை மருத்துவர் எம்.வெற்றிக்குமார் கூறுகையில், அமெரிக்காவில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்பவர்கள் காலையில் புறநோயாளிகளாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சைக்குப் பின் மாலையில் வீடு திரும்பி விடலாம். அந்த முறையைப் பின்பற்றி லீலா சங்கருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
 மயக்கவியல் மருத்துவர், இயன்முறை மருத்துவர் உள்ளிட்ட மருத்துவக் குழுவினரின் ஒத்துழைப்புடன் காலை 5 மணிக்கு அறுவை சிகிச்சைக்கு அழைத்து வரப்பட்ட லீலா சங்கர், சிகிச்சைக்குப் பின் நலமுடன் இரவு 8 மணிக்கு நடந்து சென்று காரில் ஏறி வீடு திரும்பினார் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com