தனியார் மருத்துவமனைகளின் மின் கட்டணம்: அரசு பதிலளிக்க உத்தரவு

தனியார் மருத்துவமனைகளுக்கான மின் கட்டணத்தைக் குறைத்து பிற மாநிலங்களில் உள்ளதைப்போல் சிறப்புக் கட்டணத்தை நிர்ணயிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு

தனியார் மருத்துவமனைகளுக்கான மின் கட்டணத்தைக் குறைத்து பிற மாநிலங்களில் உள்ளதைப்போல் சிறப்புக் கட்டணத்தை நிர்ணயிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு தமிழக அரசு இரண்டு வார காலத்துக்குள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 சென்னை உயர்நீதிமன்றத்தில் தனியார் மருத்துவமனைகள் சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தமிழகத்தில் வர்த்தக நிறுவனங்களுக்கு மின் கட்டணம் விதிக்கப்படுவதைப் போன்றே மருத்துவ சேவை வழங்கும் தனியார் மருத்துவமனைகளுக்கும் மின் கட்டணம் விதிக்கப்படுகிறது. எனவே, இந்த மின் கட்டணத்தைக் குறைத்து, சிறப்புக் கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி டி.ராஜா முன் விசாரணைக்கு வந்தது.
 அப்போது, மனுதாரர் தரப்பில் தனியார் மருத்துவமனைகளில் தரமான மருத்துவ சிகிச்சை வழங்கும் பொருட்டு பல்வேறு மருத்துவ உபகரணங்கள் பயன்படுத்துவதால் அதிக அளவிலான மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது.
 தொழிற்சாலைகள், திரையரங்குகள், உணவகங்களுக்கு விதிக்கப்படும் வர்த்தகப் பயன்பாட்டுக் கட்டணமே தனியார் மருத்துவமனைகளுக்கும் விதிக்கப்படுகிறது. இதன் காரணமாக தனியார் மருத்துவமனைகள் நோயாளிகளுக்கான சிகிச்சை கட்டணத்தை அதிகரிக்க நேரிடுகிறது.
 கர்நாடகம், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களில் தனியார் மருத்துவமனைகளுக்கு வர்த்தகப் பயன்பாட்டுக் கட்டணம் விதிக்கப்படுவதில்லை. அதற்குப் பதிலாக சிறப்புக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என வாதிடப்பட்டது.
 இதைக் கேட்ட நீதிபதி டி.ராஜா இந்த மனு தொடர்பாக தமிழக அரசு, மின்சார வாரியம், மின்கட்டண ஒழுங்குமுறை ஆணையம் ஆகியவை இரண்டு வார காலத்துக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com