அஞ்சல்துறையின் பிரத்யேக பார்சல் மையம் சென்னையில் இன்று அறிமுகம்

பார்சல் சந்தையை மேம்படுத்தும் வகையில், இந்திய அஞ்சல் துறை சார்பில், பிரத்யேக பார்சல் மையம் சென்னையில் அறிமுகப்படுத்தப்படுகிறது.
அஞ்சல்துறையின் பிரத்யேக பார்சல் மையம் சென்னையில் இன்று அறிமுகம்

பார்சல் சந்தையை மேம்படுத்தும் வகையில், இந்திய அஞ்சல் துறை சார்பில், பிரத்யேக பார்சல் மையம் சென்னையில் அறிமுகப்படுத்தப்படுகிறது.  முன்பு, சோதனை அடிப்படையில் இயங்கிய இந்த மையம் திங்கள்கிழமை முதல் முழுமையாக செயல்படவுள்ளது. இங்கு பதிவு பார்சல், வர்த்தக பார்சல், விரைவு பார்சல் என்று தினமும் வெவ்வேறு பிரிவுகளில் 10 ஆயிரம் பார்சல்கள் கையாளப்படவுள்ளன.
உலகில் மாறிவரும் சூழலுக்கு ஏற்ப மறுகட்டமைப்பு மற்றும் மறுசீரமைப்பு செய்வதில் இந்திய அஞ்சல் துறை தீவிர முயற்சி எடுத்துள்ளது. இதற்காக, தகவல் தொழில்நுட்ப நவீனமயமாக்கல் திட்டத்தை அமல்படுத்தி வருகிறது. இதன்மூலமாக, அஞ்சல்துறைகளில் வெவ்வேறு பிரிவுகளில் வர்த்தகத்தை மேம்படுத்த இந்திய அஞ்சல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில்,  ஒரு பகுதியாக பார்சல் சந்தையை மேம்படுத்த தீவிர கவனம் செலுத்தப்படுகிறது. 
இந்திய அஞ்சல்துறை சார்பில், பார்சல் இயக்குநரகம் தில்லியில் கடந்த ஆண்டு அக்டோபரில் தொடங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து,  பார்சல் நெட்வொர்க் தேர்வுமுறை திட்டத்தின்கீழ், பார்சல் வர்த்தகத்துக்காக பிரத்யேக பார்சல் மையம் ஏற்படுத்தப்பட்டன. இதன்படி, நாடு முழுவதும் 57 முக்கிய பார்சல் மையங்களும், 133 துணை பார்சல் மையங்களும் அமைக்கப்பட்டன.   தமிழகத்தில், சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர் ஆகிய 4 இடங்களில் பிரத்யேக பார்சல் மையங்களும், 15 துணை பார்சல் மையங்களும் அமைக்கப்பட்டன. 
இந்நிலையில், இந்திய அஞ்சல்துறை சார்பில், சென்னை ஈக்காட்டுதாங்கலில் முக்கிய பார்சல் மையம் திங்கள்கிழமை அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த மையம் இதற்கு முன்பு, சோதனை அடிப்படையில் இயங்கி வந்தது. இந்த மையம்  திங்கள்கிழமை முதல் முழு நேரமாக செயல்படவுள்ளது. 7,700 சதுர அடி நிலப்பரப்பளவில் கட்டப்பட்ட இந்த முக்கிய மையத்தில் பதிவு பார்சல், வணிக பார்சல், விரைவு பார்சல் உள்பட பல்வேறு பார்சல்கள் என்று நாள்தோறும் 10,000 பார்சல்களை அனுப்ப வசதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பார்சல் எடுத்து செல்ல  வசதியாக விமான  நிலையத்தை எளிதில் அடையும் விதமாக, அமைக்கப்பட்டுள்ளது.  இதுதவிர, சாலை மார்க்கமாக எடுத்துச் செல்லவும்  வசதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக அஞ்சல்துறை அதிகாரி ஒருவர் கூறியது: 
உலக அளவில் இணையதள வர்த்தகம் மிகப்பெரிய அளவில் வளர்ந்து வருகிறது. இதை பயன்படுத்தி பார்சல் சந்தையை வளர்க்க இந்திய அஞ்சல்துறை தனிகவனம் செலுத்தி வருகிறது. 
பார்சல் சந்தைக்காக தனி மென்பொருள் உருவாக்கப்பட்டு, இதன் மூலம் பார்சல் பதிவு செய்வது, அனுப்பி வைப்பது, குறிப்பிட்ட இடத்தில் பார்சலை விரைவாக சேர்ப்பது போன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. மேலும், பதிவு செய்து அனுப்பி வைக்கப்பட்ட பார்சல் எந்த இடத்தில் சென்றுகொண்டு இருக்கிறது என்பதையும் கண்டறிய முடியும். இதுதவிர, செல்லிடப்பேசிக்கு குறுந்தகவல் அனுப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இணைய தள வர்த்தக வாடிக்கையாளர்கள், பொது மக்கள் இந்த வசதிகளை பயன்படுத்தி கொள்ளலாம் என்றனர் அவர்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com