அரசுப் பள்ளி மாணவர்கள் 50 பேர் பின்லாந்துக்கு கல்விப் பயணம்

பள்ளிக் கல்வித்துறை வரலாற்றில் முதன் முறையாக அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 50 மாணவர்கள் கல்விப் பயணமாக பின்லாந்து நாட்டுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.
பின்லாந்து நாட்டுக்கு கல்விப் பயணம் மேற்கொண்ட அரசுப் பள்ளி மாணவர்களுடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருவளர்ச்செல்வி உள்ளிட்டோர்.
பின்லாந்து நாட்டுக்கு கல்விப் பயணம் மேற்கொண்ட அரசுப் பள்ளி மாணவர்களுடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருவளர்ச்செல்வி உள்ளிட்டோர்.


சென்னை:  பள்ளிக் கல்வித்துறை வரலாற்றில் முதன் முறையாக அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 50 மாணவர்கள் கல்விப் பயணமாக பின்லாந்து நாட்டுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.

அரசு,  அரசு உதவி பெறும் பள்ளிகளிலிருந்து 8-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2  வரை பயிலும் மாணவர்களில் அறிவியல், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கிய 50 மாணவர்கள்,  இரண்டு ஆசிரியர்கள் பின்லாந்து, ஸ்வீடன் ஆகிய நாடுகளுக்கு தமிழக அரசின் சார்பில் கல்விப் பயணம் செல்வதற்குத் தேர்வு செய்யப்பட்டனர்.  இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழக பள்ளிக் கல்வித்துறை- பின்லாந்து நாட்டின் பயோ அகாதெமி இடையே புரிந்துணர்வு மேற்கொள்ளப்பட்டிருந்தது. 

இந்நிலையில், கல்விப் பயணத்துக்குத் தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவிகளை வழியனுப்பும் நிகழ்ச்சி சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  இதில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பயணத் திட்டம் தொடர்பான கையேடுகளை வழங்கினார். 

ஸ்வீடனுக்கு கப்பல் மூலம்... 

இதைத் தொடர்ந்து திங்கள்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு சென்னையிலிருந்து விமானம் மூலம் பின்லாந்தின் தலைநகரம் ஹெல்சிங்கிக்கு பயணம் மேற்கொள்கின்றனர். ஜன.22-ஆம் தேதி முதல் ஜன.30-ஆம் தேதி வரை அந்நாட்டின் பள்ளிகள்,  பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள்,

அறிவியல் ஆராய்ச்சிக் கூடங்கள்,  அருங்காட்சியகங்கள், சுற்றுலாத் தலங்களுக்கு செல்லவுள்ளனர். மேலும் இந்தப் பயண காலத்தில் பின்லாந்தில் இருந்து ஸ்வீடன் நாட்டுக்கு  மாணவர்கள் கப்பல் மூலம் அழைத்துச் செல்லப்படவுள்ளனர். 

கல்விப் பயணம் மேற்கொள்ளும் 50 மாணவர்களுக்கு திருப்பூர் ஜெய்வாபாய் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் கலைவாணி,  மதுரை வண்டியூர் அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் சார்லஸ் இம்மானுவேல் ஆகிய இரண்டு பேரும் வழிகாட்டி ஆசிரியர்களாக செயல்படுவர். 

மிகச் சிறந்த வாய்ப்பு: இது குறித்து திண்டுக்கல் கம்பளியம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கே.சௌந்தரராஜன், கே.கனகவேல், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் எம்.கார்த்திகேயன்,  ஏ.கோல்ட் ஸ்டில்லர் உள்ளிட்ட மாணவ, மாணவிகள் கூறுகையில்,  எங்களது பெற்றோர் விவசாயம்,  தொழிற்சாலை போன்றவற்றில் தினக் கூலித் தொழிலாளர்களாகப் பணியாற்றுகின்றனர்.

இந்த நிலை யில் முதல் முறையாக விமானத்தில் செல்ல வாய்ப்புக் கிடைத்ததை வாழ்வில் என்றுமே மறக்க முடியாது.   

இதற்காக எங்களுக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்கள்,  தமிழக அரசு ஆகியோருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.  இதை நன்கு பயன்படுத்திக் கொண்டு நாங்கள் பெற்ற பயண அனுபவங்களை சக மாணவர்களுக்கும் நிச்சயம் பகிர்வோம்  என்றனர்.  

இந்த நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநர் வாசு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருவளர்ச்செல்வி, பின்லாந்து பேராசிரியர் லிசா தைவொனன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com