சென்னை

அத்திவரதர் பெருவிழா: இனியாவது விழித்துக்கொள்ளுமா நிர்வாகம்?

DIN

காஞ்சிபுரம்: தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் கடந்த ஜூலை 1-ஆம் தேதியில் இருந்து அதிகம் உச்சரிக்கப்படும் பெயர் "காஞ்சிபுரம் அத்திவரதர்' என்பதாகத்தான் இருக்கும். 

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் பெருவிழாவையொட்டி காஞ்சிபுரத்துக்கு வந்து செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தவண்ணம் இருக்கிறது. இந்த அளவுக்கு பக்தர்கள் கூட்டம் திணறடிக்கும் என்பதை மாவட்டம் நிர்வாகம் எதிர்பார்க்கவில்லை என்பதை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் செய்யப்பட்ட அடிப்படை வசதிகள் வெளிச்சம் போடுகின்றன.

காஞ்சிபுரம் அருள்மிகு வரதராஜப் பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்திவரதர் பெருவிழா நடைபெறுகிறது. கடந்த 1979-க்குப் பின் மீண்டும் கடந்த   1-ஆம் தேதி முதல் 48 நாள்களுக்கு அதாவது வரும் ஆக. 17-ஆம் தேதி வரை பக்தர்களுக்கு அத்திவரதர் காட்சி தருகிறார்.  இதற்கான முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் கடந்த 2 மாதங்களாகச் செய்தது. காஞ்சிபுரம் நகரமே இதற்காக விழாக் கோலம் பூண்டுள்ளது.

அத்திவரதர் பெருவிழாவுக்கான தேதி  அறிவித்தவுடன் காஞ்சிபுரம் நகரத்தில் இருந்த அனைத்துத் திருமண மண்டபங்கள், சத்திரங்கள், தங்கும் விடுதிகள் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன. நகரில் மட்டுமில்லாமல் புறநகர்ப் பகுதிகளில் இருந்தவைகளும் முன்பதிவு செய்யப்பட்டன.

தனியார் தங்கும் விடுதிகளில் பல நாள்கள் செல்லச் செல்ல தங்கள் கட்டணத்தைக் கடுமையாக உயர்த்திக் கொண்டன. வேறு வழியில்லாமல்  கேட்ட கட்டணத்தைக் கொடுத்துவிட்டு பக்தர்கள் தங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. இதை மாவட்ட நிர்வாகம் முன்கூட்டியே உணர்ந்து, அதற்கேற்ற நடவடிக்கைகளை முடுக்கிவிட்டிருக்க வேண்டும்.

காஞ்சிபுரம் நகரின் மிகப் பெரிய விழா என்பதால் மாவட்ட ஆட்சியர் தலைமையில் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்வதாக அறிவிக்கப்பட்டன. ஆனால்  இந்த முன்னேற்பாடுகள் எதுவுமே உரிய முறையில் நிறைவேற்றப்படவில்லை என்பதுதான் வருத்தம் தரும் உண்மை. அத்திவரதர் விழாவுக்காகப் பல கோடி செலவிடப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்தாலும் அதைச் செலவிட்டிருந்தாலே தேவையான அடிப்படை வசதிகளைச் செய்திருக்கலாம் என்கின்றனர் பக்தர்களும் தன்னார்வ அமைப்பினரும்.

தற்காலிகப் பேருந்து நிலையங்களில்...: அத்திவரதரைத் தரிசிக்க தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வார்கள் என்பதால், காஞ்சிபுரத்தில் 3 தற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டன. ஆனால் அந்தப் பேருந்து நிலையங்களில் எவ்விதக் குறைந்தபட்ச அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப்படவில்லை. எந்தப் பேருந்து நிலையத்திலும் உணவகம், கழிப்பறை மற்றும் குடிநீர் வசதி செய்யப்படவில்லை.

பேருந்து நிலையங்களில் இருந்து வெளியூர்களுக்குச் செல்லும் சிறப்புப் பேருந்துகளும் மிகக் குறைந்த அளவில்தான் இயக்கப்படுகின்றன. இதனால் ஒவ்வொரு பேருந்திலும் கூட்டம் அலைமோதுகிறது.

தினமும் ஒரு லட்சம் பக்தர்கள் வந்து செல்கின்றனர் என்றால் 20 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே கழிப்பிட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அவற்றிலும் போதுமான தண்ணீர் இல்லை. கோயிலின் மாட வீதிகளில் மிக மிகக் குறைந்த எண்ணிக்கையில்தான் கழிப்பறை வசதி செய்யப்பட்டிருக்கிறது.

சிற்றுந்துகள்:  மூன்று பேருந்து நிலையங்களில் இருந்தும் கோயிலுக்கு 20 சிற்றுந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இவை போதுமானதாக இல்லை. 10 நிமிடங்களுக்கு ஒருமுறை சிற்றுந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அவ்வாறு இயக்கப்படவில்லை. இப்பேருந்துகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. 
மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டிருந்தால் இலவசப் பேருந்துகளை இயக்க பலர் தயாராக  இருந்தனர். ஆனால் அது குறித்து நிர்வாகம் ஏன் யோசிக்கவில்லை அல்லது தயங்கியது என்பது புதிராகவே இருக்கிறது. நிர்வாகத்தின் கவனக்குறைவால் இப்போது தனியார் பேருந்துகள் கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றன.

ஆட்டோக்களில் கட்டணக் கொள்ளை: ஒவ்வொரு இடத்திலிருந்தும் மற்ற இடத்துக்கு இவ்வளவு கட்டணம் என நிர்ணயித்து அதை பொதுமக்களுக்குத் தெரியும் வகையில் அறிவிப்புப் பலகைகள் வைக்கலாம் என்பது தன்னார்வ அமைப்புகள் மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்த யோசனை. ஆனால் இதை மாவட்ட நிர்வாகம் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் ஆட்டோக்களில் தாறுமாறான கட்டணம்.

ரயில் நிலையங்களில் இருந்து... அத்திவரதர் பெருவிழாவுக்காக காஞ்சிபுரத்துக்குப் பல சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஆனால் ரயில் நிலையங்களில் இருந்து கோயில்களுக்கோ அல்லது தற்காலிகப் பேருந்து  நிலையங்களுக்கோ செல்லப் பேருந்து வசதி செய்யப்படவில்லை. 

இதனால் பக்தர்கள் மிகக் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகின்றனர். மொழி தெரியாத பக்தர்களுக்கு மேலும் சோதனைகள்தான்.

முதியோர் படும் பாடு...  நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள் குறிப்பாக முதியோர் படும் பாடு சொல்லி மாளவில்லை. பல இடங்களில் குடிநீர் டிரம்கள் வைத்திருந்தாலும் அவற்றில் தண்ணீர் இல்லை. 5 மணி நேரத்துக்கு மேலாக வரிசையில் காத்திருந்தாலும் அவர்களுக்குத் தண்ணீர் கொடுக்கக் கூட ஆளில்லை. 
உணவுக்கும் அவதி: தினமும் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்லும் ஓரிடத்தில் அவர்களுக்குத் தேவையான உணவைக் கூட மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்ய முடியவில்லை.

அன்னதானம் செய்வதற்குப் பலர் முன்வந்தும் மாவட்ட நிர்வாகத்தின் நிபந்தனைகளுக்கு ஒத்துவராததால் பலர் விலகிக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் பெரும்பாலானவர்கள் உணவு கிடைக்காமல் கடும் அவதிக்குள்ளாகினர். 

பக்தர்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் விதமாக, தரிசன நேரம் 2 மணி நேரத்துக்குக் கூடுதலாக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்தார். ஆனாலும் கூட்டம் குறைந்தபாடில்லை.

இப்போதுகூடக் காலம் கடந்துவிடவில்லை. அத்திவரதர் வரும் ஆகஸ்ட் 17-ஆம் தேதிவரை பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார். தன்னார்வ நிறுவனங்களையும், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க விரும்பும் அமைப்புகளையும், புரவலர்களையும் நிர்வாகம் பயன்படுத்த முற்பட்டால், குடி தண்ணீர் வழங்குதல், உணவு வழங்குதல், காலணிகள் பாதுகாப்பு உள்ளிட்ட பல வசதிகள் விரல் சொடுக்கும் நேரத்தில் ஏற்பாடு செய்துவிட முடியும்.

இறை நம்பிக்கை இல்லாதவர்களின் மேற்பார்வையில், இது போன்ற நிகழ்வுகள் நடக்கக் கூடாது. 

மத நம்பிக்கை சார்ந்த அத்திவரதர் திருவிழாவை அதிகாரிகளை வைத்துக்கொண்டு நடத்த முற்படுவது, நிர்வாகத்துக்குக் கெட்ட பெயரையும், அரசுக்கு பக்தர்களின் அதிருப்தியையும்தான் ஏற்படுத்தும். தாமிரவருணி புஷ்கரத்தில், பகதர்களின் கூட்டம் அலைமோதும் என்பதை எதிர்பார்க்கவில்லையோ, அதேபோல, அத்திவரதர் தரிசனத்திலும் அரசும் மாவட்ட நிர்வாகமும் இந்த அளவுக்குப் பக்தர்கள் பெருந்திரளாகக் கூடுவார்கள் ùன்று எதிர்பார்க்கவில்லை என்பது தெரிகிறது. 

நிர்வாகம் கூட்டத்தை முறைப்படுத்துவதிலும், பக்தர்களின் தரிசனத்தை ஒழுங்குபடுத்துவதிலும் மட்டும் கவனம் செலுத்தி அவர்களுக்கான சேவையைத் தன்னார்வ அமைப்புகளிடம் விட்டுவிட வேண்டும். இல்லையென்றால் கெட்ட பெயரை வாங்கிக் கட்டிக் கொள்ள நேரிடும்!

நாம சங்கீர்த்தனத்துக்கு வாய்ப்பில்லை...

வைஷ்ணவ சம்பிரதாயத்தில் பல மகான்கள் பகவானை கீர்த்தனைகளை இயற்றி பகவானுடைய குணங்களை, அழகை கீர்த்தனங்கள் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளனர். பொதுவாக பெருமாள் கோயில் என்றாலே குழுவாகப் பலர் பஜனை பாடுவதுதான் அனைவரின் நினைவிலும் உடனடியாக வரும்.  ஒவ்வொரு ஊரிலும் பஜனைக் கோயில் தெரு என்ற பெயரில் தெரு நிச்சயமாக இருக்கும். அந்த அளவுக்கு பஜனைக் குழுவினரின் பஜனை பிரபலம்.

ஆனால் இந்த முறை அத்திவரதர் பெருவிழாவின்போது பஜனைக் குழுவினர் பெருமாளின் பாடல்களை கோயில் வளாகத்துக்குள் பாடுவதற்கு அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துவிட்டார். இது அந்தக் குழுவினரிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த 1979-இல் நடந்த அத்திவரதர் பெருவிழாவின்போது பல நாம சங்கீர்த்தனக் குழுவினர் பாடல்களை இசைத்துக்கொண்டே அத்திவரதரை சேவித்ததாக பலர் தெரிவித்துள்ளனர்.

கைநழுவிய சுற்றுலாத் துறை வாய்ப்பு

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காஞ்சிபுரத்தில் அத்திவரதரைக் காணக் கிடைக்கும் வாய்ப்பைத் தமிழக அரசின் சுற்றுலாத் துறையும் பயன்படுத்தத் தவறிவிட்டது.

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பகோணம் மகாமக விழாவுக்கான ஏற்பாடுகள் மிகப் பிரமாண்டமான முறையில் பல மாதங்களுக்கு முன்பிருந்தே செய்யப்படுகின்றன.

ஆனால் காஞ்சிபுரம் அத்திவரதரைத் தரிசிக்க 40 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் முடியும். இதற்கான முன்னேற்பாடுகளை முன்கூட்டியே செய்து தேதியை அறிவித்திருந்தால், சுற்றுலாத் துறை அதற்கான பணிகளைச் செய்திருக்கலாம். இதன் மூலம் வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்களை காஞ்சிபுரத்துக்கு வரவழைத்திருக்க முடியும்.

சுற்றுலாத் துறையினரையும் இணைத்து மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தால் பக்தர்களுக்கான சில அசெளகரியங்களைத் தவிர்த்திருக்கலாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காணாமல்போன கைப்பேசிகள் மீட்டு உரியவா்களிடம் ஒப்படைப்பு

காரைக்காலில் தீவிர வாகனச் சோதனை நடத்த அறிவுறுத்தல்

இரட்டை ரயில் பாதை பணி: நாகா்கோவில் செல்லும் ரயில்கள் ரத்து!

உஜ்ஜைனி காளியம்மன் கோயிலில் இன்று அக்னி கப்பரை வழிபாடு

நாலாட்டின்புதூரில் ரூ. 80 ஆயிரம் பறிமுதல்

SCROLL FOR NEXT