மக்களவைத் தேர்தல்: ரௌடிகள் கைது நடவடிக்கை தீவிரம்

மக்களவைத் தேர்தலையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  ரௌடிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை ராயபுரம் பகுதியில் நடைபெற்ற துணை ராணுவ படையினரின் கொடி அணிவகுப்பு. அவர்களுடன் உள்ளூர் போலீஸாரும் பங்கேற்றனர்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை ராயபுரம் பகுதியில் நடைபெற்ற துணை ராணுவ படையினரின் கொடி அணிவகுப்பு. அவர்களுடன் உள்ளூர் போலீஸாரும் பங்கேற்றனர்.


மக்களவைத் தேர்தலையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  ரௌடிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 18-ஆம் தேதி மக்களவைத் தேர்தலும், 18 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் இடைத்தேர்தலும் நடைபெறுகிறது. தேர்தல் பிரசாரத்தின்போதும், வாக்குப்பதிவின்போது எவ்வித சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருப்பதற்குரிய நடவடிக்கைகளை காவல்துறை எடுத்து வருகிறது.
இதற்காக காவல்துறையின் சார்பில் மாவட்டந்தோறும் காவல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. மேலும் உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருப்பவர்களிடமிருந்து, துப்பாக்கிகளை அந்தந்த காவல் நிலைய போலீஸார் பெற்று வருகின்றனர். கடந்த தேர்தலின்போது பிரச்னை ஏற்பட்ட வாக்குச்சாவடிகள், பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகள் ஆகியவற்றை போலீஸார் கண்டறிந்து வருகின்றனர். அங்கு வாக்குப் பதிவின்போது செய்யப்பட வேண்டிய கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
ரௌடிகள் மீது நடவடிக்கை: வாக்குப்பதிவை அமைதியாக நடத்துவதற்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ரௌடிகளை கணக்கெடுக்கும் பணியில் சில நாள்களுக்கு முன்பு வரை போலீஸார் ஈடுபட்டனர். இந்த ரௌடி பட்டியல் தயாரிக்கும் பணி முழுமை அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் பட்டியலில், மாநிலம் சுமார் 17,500  ரௌடிகள் இருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் பட்டியலின் அடிப்படையில் ரௌடிகள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.  இவர்கள் மீது குற்றவியல் நடைமுறைச் சட்டம் 107,109,110 ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் நடவடிக்கை எடுக்கின்றனர்.
சென்னையில் 750 ரௌடிகள்: சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் 750 ரௌடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதேபோல 1,236 துப்பாக்கிகளை போலீஸார் பெற்றுள்ளனர். இன்னும் 708 துப்பாக்கிகளை பெற வேண்டியுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
  மேலும் தேர்தல் விதிகளை மீறியதாக இதுவரை 14 கட்சிகளின் மீது 72 வழக்குகள் பதிவாகியுள்ளன. சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மொத்தம் உள்ள 7,790 வாக்குச்சாவடிகளில் 450 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன.
இந்த வாக்குச்சாவடிகளில் செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை உயரதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனர்.
ரௌடி பினு கைது: இதற்கிடையே, சென்னை எழும்பூரில் ரௌடி பினுவை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். மலையம்பாக்கத்தில் அரிவாளால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய சம்பவத்தில் கைது செய்யப்பட்டு, சிறையில் இருந்து வந்தார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த பினு, தலைமறைவானார். இதனால் பினுவுக்கு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. 
ரௌடி பினுவுடன் அவரது கூட்டாளி அக்பர், மனோஜ்குமார்ஆகிய இருவரை போலீஸார் கைது செய்தனர். இதேபோல சென்னை முழுவதும் தலைமறைவாக இருக்கும் ரௌடிகளை போலீஸார் தீவிரமாக கைது செய்து வருகின்றனர். இதற்கிடையே தேர்தலுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், சென்னையில் செவ்வாய்க்கிழமை 8 இடங்களில் துணை ராணுவத்தினரும், போலீஸாரும் பங்கேற்ற கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com