நீதிபதி வீட்டில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை முயற்சி

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உயர்நீதிமன்ற நீதிபதியின் வீட்டில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர் துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை முயற்சி மேற்கொண்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி
நீதிபதி வீட்டில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை முயற்சி


சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உயர்நீதிமன்ற நீதிபதியின் வீட்டில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர் துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை முயற்சி மேற்கொண்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
திருநெல்வேலி மாவட்டம் ஆர்.என்.குளம் அருகே உள்ள கருங்கல் நாடார் பட்டியைச் சேர்ந்த தங்கராஜ் மகன் சரவணன் (29). இவர் சென்னை பெருநகர காவல்துறையின் புதுப்பேட்டை ஆயுதப்படையில் காவலராகப் பணிபுரிந்து வருகிறார். 
இவர், ராஜா அண்ணாமலைபுரம் கிரீன்வேஸ் சாலையில் உள்ள மணிப்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதரன் வீட்டு பாதுகாப்பு பணியில் புதன்கிழமை ஈடுபட்டிருந்தார்.
இந்நிலையில், சரவணன் அங்குள்ள காவலர் அறைக்கு மாலை 4.30 மணியளவில் சென்றார். அப்போது அவர் கையில் இருந்த எஸ்.எல்.ஆர். வகை துப்பாக்கியால் தனது தலையில் வைத்து சுட்டார்.  துப்பாக்கிச் சப்தத்தையும், சரவணனின் அலறல் சப்தத்தையும் கேட்டு அங்கிருந்தவர்கள் அந்த அறையை நோக்கி ஓடி வந்தனர்.
அப்போது சரவணன், துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடப்பதை பார்த்து  அதிர்ச்சியடைந்தனர். உடனே சரவணனை மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக சரவணன், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உருக்கமான கடிதம்: இதற்கிடையே, சம்பவ இடத்தை காவல்துறை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மேலும், சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சரவணன் எழுதிய ஒரு கடிதத்தை போலீஸார் கைப்பற்றினர். அதில், எனக்கு வாழப் பிடிக்கவில்லை, அதனால் தற்கொலை செய்கிறேன். 
எனது தற்கொலைக்கு யாரும் காரணமில்லை. அம்மா, அப்பாவை நல்லபடியாக பார்த்துக்கொள்ளுங்கள். நான் இறந்த பின்னர் வரும் இன்சூரன்ஸ் தொகையை எனது பெற்றோரிடம் கொடுத்து விடுங்கள். என்னை புதைத்தாலோ அல்லது எரித்தாலோ எனது காக்கி சீருடையை கழற்ற வேண்டாம். இது எனது கடைசி ஆசை. அம்மா, அப்பா என்னை மன்னித்து விடுங்கள் என குறிப்பிடப்பட்டிருந்தது.
பணிச்சுமை காரணமா ?:   தற்கொலைக்கு முயன்ற சரவணன், சொந்த ஊருக்குச் சென்றுவிட்டு  செவ்வாய்க்கிழமை பணிக்கு திரும்பியுள்ளார். மேலும் இது தொடர்பாக அபிராமபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்ததில் சரவணனுக்கும், அவரது குடும்பத்தைச் சேர்ந்த சிலருக்கும் இடையே பிரச்னை இருந்து வந்ததும், அதன் காரணமாக சரவணன் சோகத்துடன் காணப்பட்டதும் தெரியவந்துள்ளது. 
இதனால் அவர் குடும்பப் பிரச்னை காரணமாக தற்கொலைக்கு முயன்றாரா அல்லது பணிச்சுமையின் காரணமாக தற்கொலைக்கு முயன்றாரா என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com