அரசியல் தெளிவு பெற தலைவர்களுடனான கலந்துரையாடல் மாணவர்களுக்கு அவசியம்: முன்னாள் நீதிபதி சந்துரு

கல்லூரி மாணவர்கள் அரசியலில் தெளிவு பெற  அரசியல் தலைவர்களுடனான கலந்துரையாடல் அவசியம் என உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துரு தெரிவித்தார். 

கல்லூரி மாணவர்கள் அரசியலில் தெளிவு பெற  அரசியல் தலைவர்களுடனான கலந்துரையாடல் அவசியம் என உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துரு தெரிவித்தார். 
 சென்னை எழும்பூரில் உள்ள மெட்ராஸ் ஸ்கூல் ஆப் சோசியல் வொர்க் வளாகத்தில், முன்பருவக் குழந்தைகளின் உரிமைக் கூட்டமைப்பு, தேசியக் கல்வி உரிமைக் கூட்டமைப்பு, குழந்தை உழைப்பு எதிர்ப்புப் பிரச்சாரம் ஆகிய அமைப்புகளின் சார்பில் பிராசாரத் தொடக்க மாநாடு நடைபெற்றது. 
18 வயதுக்குள்பட்ட குழந்தைகளின் உரிமை குறித்த விழிப்புணர்வை அரசியல் கட்சிகளிடம் கொண்டு செல்ல முயற்சிக்கும் வகையில் நடைபெற்ற இந்த மாநாட்டைத் தொடங்கி வைத்து நீதிபதி சந்துரு பேசியது: 
மக்களின் அனைத்து  பிரச்னைகளையும் நீதித்துறையால் தீர்க்க முடியாது. தீர்ப்பதற்கு முயற்சிக்கிறார்களா என்று வேண்டுமானால் பார்க்கலாம். நீதியரசர்கள் முக்கிய பிரச்னைகளில் தலையிடாமல், கொள்கை முடிவு என ஒப்படைத்து விடுகிறோம். சில நாட்களுக்கு முன்பு ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், "நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கல்விக்கு 6 சதவீத நிதி ஒதுக்கப்படும்' என்று ராகுல் காந்தி கூறினார். ஆனால் அவற்றை எவ்வாறு செலவழிப்பார்கள் என நமக்குத் தெரியாது.
 கல்லூரி மாணவர்கள் அரசியலில் தெளிவு பெற வேண்டும் என்றால் ஒரு அரசியல் தலைவரை அழைத்து பேச வைப்பதில் எந்தத் தவறும் இல்லை என்றார். 
தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர், எம்.பி.நிர்மலா பேசியது: 
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் குழந்தைகளுக்கான பணிநேரம் குறித்து கண்காணித்ததில், அந்தக் குழந்தைகள் தங்களின் கனவு தோற்றத்தில் மயங்கி படிப்பை நிறுத்தி விடுவதாக, அதிர்ச்சி தகவல் கிடைத்தது. எனவே, கட்டாயக் கல்வி என்பதைத் தொடர்ந்து வலியுறுத்துவோம் என்றார். 
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் வி.வசந்தி தேவி பேசியது: 
தற்போது வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் கல்வி குறித்த அம்சங்கள் குறைந்த அளவில் மட்டுமே இடம்பெற்றுள்ளது. புரட்சியை விடுத்து இந்தியாவில் சட்டத்தை முறையாக நிறைவேற்ற வேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com