வேட்பாளர் திறமையானவரா என்று பாருங்கள்: மு.க.ஸ்டாலின்

வேட்பாளரை வாரிசு என்று பார்க்காமல் திறமையானவரா என்பதைப் பாருங்கள் என  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
வேட்பாளர் திறமையானவரா என்று பாருங்கள்: மு.க.ஸ்டாலின்

வேட்பாளரை வாரிசு என்று பார்க்காமல் திறமையானவரா என்பதைப் பாருங்கள் என  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.       வடசென்னை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி, பெரம்பூர் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர் ஆகியோரை ஆதரித்து வியாசர்பாடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியது:
திமுகவின் வேட்பாளர்களை வாரிசுகளா என்று ரத்தப் பரிசோதனை செய்யாதீர்கள். வேட்பாளர்கள் திறமையானவர்களா என்று மட்டும் பாருங்கள். சென்னை மாநகராட்சியின் மேயராக நான் இருந்தபோதுதான் 10 மேம்பாலங்கள் கட்டினோம். தனியார் பள்ளிகளைவிட மாநகராட்சிப் பள்ளிகளைச் சிறப்பானதாக மாற்றினோம். மெட்ரோ ரயில் திட்டத்தைக் கொண்டு வந்தோம். அதிமுக ஆட்சியில் ஒரு மேம்பாலம்கூட கட்டப்படவில்லை. மெட்ரோ ரயில் திட்டமே வேண்டாம் என்றும், மோனோ ரயில் திட்டம்தான் தேவை என்றும் ஜெயலலிதா கூறினார். இப்போது மெட்ரோ ரயில்வே திட்டத்தை வரவேற்கின்றனர். இதுதான் அதிமுகவுக்கும், திமுகவுக்கும் உள்ள வித்தியாசம். 
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை: திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுக உறுப்பினர் போஸ் வெற்றி பெற்றது செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்புக் கூறியுள்ளது. மருத்துவமனையில் இருந்தபோது திருப்பரங்குன்றம் வேட்பாளர் படிவத்தில் ஜெயலலிதா வைத்ததாகக் கூறப்படும் கைரேகை சுயநினைவோடு வைத்ததாகத் தெரியவில்லை என்று நீதிமன்றமே கூறியுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு குற்றம் செய்தவர்களுக்குத் தண்டனை வழங்கப்படும்.
அடகு வைக்கப்பட்ட அதிமுக: அதிமுகவை மோடி- அமித் ஷாவிடம்
எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் அடகு வைத்துள்ளனர். கடையில் அடகு வைத்த பொருள்களை மீட்டு வந்து விடலாம். மோடியிடம் அடகு வைத்தால் மீட்க முடியாது. 
ராமதாஸ் மீது விமர்சனம்: மக்களின்  வாழ்வாதாரத்தை அதிமுக ஆட்சி பெருக்கி இருக்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறுகிறார். 5 தலைமுறைக்குப் பிரச்னையே இல்லாமல் அவர்களுடைய பொருளாதாரம்தான் பெருகியுள்ளது. அதைத்தான் ராமதாஸ் கூறுகிறார்.
கடவுளைப் பற்றி ஸ்டாலின் கேவலமாகப் பேசுகிறார் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். கேவலமாக எதுவும் நான் பேசவில்லை. கடவுள் மீது பக்தி உள்ள முதல்வர்களும் இருந்துள்ளனர். பக்தி கொண்ட முதல்வர்களும் இருந்துள்ளனர். ஆனால், நான்தான் கடவுள் என்று சொல்லும் முதல்வராக எடப்பாடி பழனிசாமிதான் உள்ளார். 
பொருளாதாரத்தில் முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்வோம் என்று மோடி கூறினார். ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருவோம், விவசாயிகளின் வருமானத்தை இரு மடங்கு உயர்த்துவோம் என்றெல்லாம் மோடி கூறினார். இவையெல்லாம் நடக்கவே இல்லை. ஊழலே இருக்காது என்றார். ரஃபேல் ஊழல் ஆதாரங்களை ராகுல் வரிசையாக வெளியிட்டு வருகிறார். கருப்புப் பணத்தை எல்லாம் மீட்டு வந்து ஒவ்வொருவரின் வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் போடுவோம் என்றார். ரூ.15 ஆயிரம்கூட கொடுக்கவில்லை.   இதற்கு தண்டனை தர மக்கள் தயாராக வேண்டும் என்றார் மு.க.ஸ்டாலின்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com