பாஜக ஆபத்தான கட்சி என்று ரஜினிக்குத் தெரியும் : திருமாவளவன்

பாஜக ஆபத்தான கட்சி என்று நடிகர் ரஜினிக்குத் தெரியும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
பாஜக ஆபத்தான கட்சி என்று ரஜினிக்குத் தெரியும் : திருமாவளவன்


பாஜக ஆபத்தான கட்சி என்று நடிகர் ரஜினிக்குத் தெரியும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
திருச்சியில் நடைபெறவுள்ள அக்கட்சியின் மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் காஞ்சிபுரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் திருமாவளவன் பங்கேற்றார். அதன் பிறகு, அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
நடிகர் ரஜினிகாந்திடம் சென்னையில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, பத்து பேர் சேர்ந்து ஒருவரை எதிர்த்தால் யார் பலசாலி? என்று அவர் எதிர்கேள்வி எழுப்பினார். 
இதன்மூலம் பாஜகவினர் மற்றும் பிரதமர் மோடி பலமானவர்கள் என்று அவர் கூறுகிறார். 
பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்று பழமொழி கூறுவதுண்டு. அப்படியானால், படையை விட பாம்பு பலமானது என்று பொருளல்ல. 
படையே நடுங்கும் அளவுக்கு பாம்பு கேடானது என்று பொருள்படும். பாஜகவின் கொள்கை, கோட்பாடு, இலக்கு என அனைத்தும் ஆபத்தானது, பயங்கரமானது என்பதை உணர்ந்தே எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து, அக்கட்சியை எதிர்த்து வருகின்றன. 
எனவே, பலமானவர்கள் என்பதற்காக பாஜகவினரை எதிர்க்கட்சிகள் எதிர்க்கவில்லை; பாஜக ஆபத்தானது என்பதற்காகவே எதிர்க்கின்றன. இதை நடிகர் ரஜினிகாந்த் அறியாதவர் அல்ல. அவர் அறிந்தேதான் சொல்கிறார். 
இருப்பினும், பாஜக-வுடனான நட்பை சிதைத்துக் கொள்ளக் கூடாது என்பதற்காக பாஜக பலமான கட்சி என ரஜினிகாந்த் கூறுகிறார். 
சர்கார் படக் குழுவினர் சாதித்துக் கொண்டனர். திரைப்படங்களில் சமூகக் கருத்துகளைத் தெரிவிக்கலாம். ஆனால், அரசியல் கட்சி மற்றும் தலைவர்களை தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதும், சீண்டுவதும் தவறானது.
நாட்டின் தந்தை மகாத்மா காந்திதான். இது அனைவரும் அறிந்ததே. ஆனால், அவரது பெயரையும், புகழையும் மறைக்க வேண்டும் என்ற உள்நோக்கத்திலேயே வல்லபபாய் படேலின் சிலையை குஜராத்தில் பெரும் பொருட்செலவில் பாஜக நிறுவியுள்ளது. 
அண்மையில் நடந்து முடிந்த குரூப்-2 தேர்வில் பெரியாரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், அவரது இனிஷியலை மாற்றியும், ஜாதிப் பெயரை சேர்த்தும் வினாத்தாளில் அச்சிடப்பட்டுள்ளது. 
இது வன்மையான கண்டனத்துக்குரியது. எனவே, இந்த வினாத்தாளைத் தயாரித்தவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு மாட்டிறைச்சிக்குத் தடை விதித்துள்ளது. பொதுமக்கள் இந்த உணவுதான் உண்ண வேண்டும் என அரசு வலியுறுத்துவது கடும் கண்டனத்துக்குரியது. இந்தத் தடையை நீக்க வேண்டும் என்றார் திருமாவளவன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com