கந்த சஷ்டி: முருகப் பெருமானுக்கு திருக்கல்யாண வைபவம்

திருப்போரூர் கந்தசாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவின் நிறைவாக திருகல்யாண உற்சவம் புதன்கிழமை மாலை நடைபெற்றது.
கந்த சஷ்டி: முருகப் பெருமானுக்கு திருக்கல்யாண வைபவம்


திருப்போரூர் கந்தசாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவின் நிறைவாக திருகல்யாண உற்சவம் புதன்கிழமை மாலை நடைபெற்றது.
இக்கோயிலில் கந்தசாமிக்கு லட்சார்ச்சனை விழா கடந்த 8-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 14ஆம் தேதி வரை நாள்தோறும் காலை, உச்சி, மாலை என மூன்று வேளையும் பால், திருநீறு, பஞ்சாமிர்தம் ஆகியவற்றால் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. திருமேனி அலங்காரம், சிறப்பு ஆராதனைகள், திருமுறை உள்ளிட்டவை நடைபெற்று வந்தன. 
விழா நாள்களில் முருகன் தினந்தோறும் மாலை நேரத்தில் கிளி, ஆட்டுக்கிடா, புருஷாமிருகம், பூதம், வெள்ளி அன்னப்பறவை என்று பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா வந்தார். செவ்வாய்க்கிழமை மாலையில் சூரசம்ஹாரம் நடைபெற்றது. அப்போது, முருகப் பெருமான் தங்கவேல் கொண்டு சூரபத்மனின் ஆணவத்தை அழிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஒவ்வொரு சூரனையும் அழித்து கடைசியில் மாமரத்தில் மறைந்திருந்த சூரபத்மனின் ஆணவத்தை அழித்து, அவனை மயிலாகவும் சேவல் கொடியாகவும் தன்னருகிலேயே முருகன் வைத்துக் கொண்ட நிகழ்வு நடைபெற்றது. அன்று இரவு வீதி உலா நடத்தப்பட்டது. அதன் பின், புதன்கிழமையன்று கந்த சஷ்டி விழாவின் நிறைவாக வள்ளி, தெய்வானை உடனுறை கந்தசாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடத்தப்பட்டது. பட்டு வஸ்திரம், பழங்கள், பட்சணங்களுடன் சீர்வரிசை கொண்டு
வந்து திருக்கல்யாணம் நடத்தப்பட்டது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, கந்தசாமியை தரிசனம் செய்தனர்.
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் வெங்கடேசன், தக்கார் மற்றும் உதவி ஆணையர் ரமணி, மேலாளர் வெற்றி, சிவாச்சாரியார்கள், கோயில் பணியாளர்கள், ஸ்ரீபாதம் தாங்கிகள், திருப்போரூர் பொதுமக்கள் ஆகியோர் செய்திருந்தனர்.
செங்கல்பட்டு கோயில்களில்...
செங்கல்பட்டு பகுதிகளில் உள்ள கோயில்களில் கந்த சஷ்டி பெருவிழாவின் நிறைவாக புதன்கிழமை மாலையில் முருகன் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
செங்கல்பட்டு பெரியநத்தம் கைலாசநாதர் கோயில், வ.உ.சி.தெரு ஏகாம்பரேஸ்வரர் கோயில், ஜிஎஸ்டி சாலை சக்தி
விநாயகர் கோயில், அண்ணாநகர் எல்லையம்மன் கோயில், ரத்தின விநாயகர்கோயில், ஆத்தூர் முக்தீஸ்வரர் கோயில், மேட்டுத் தெரு செங்கழுநீர் விநாயகர் கோயில், பெரியநத்தம் கைலாசநாதர் கோயில், காட்டுநாயக்கன் தெரு மலை மீதுள்ள செம்மலை வேல்முருகன்கோயில் , இருங்குன்றம் பள்ளி பாலமுருகன் கோயில், திருக்கழுகுன்றம் திரிபுரசுந்தரி சமேத வேதகிரீஸ்வரர் கோயில், பழவேலி வியாகரபுரீஸ்வரர் கோயில், புலிப்பாக்கம் வேதாந்தீஸ்வரர் கோயில் என்ஜிஜிஓ நகர் வரசித்தி விநாயகர் கோயில் உள்ளிட்ட கோயில்களில் கந்த சஷ்டி பெருவிழாவையொட்டி முருகப் பெருமானுக்கு ஒவ்வொரு நாளும் பல்வேறு உற்சவங்கள் சிறப்பாக நடைபெற்றன. 
விழாவில் மூலவருக்கும் உற்சவ மூர்த்திக்கும் பால், தயிர், தேன், சந்தனம், விபூதி, இளநீர், சொர்ணாபிஷேகம் என சிறப்பு அபிஷேகங்களும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்று வந்தன. ஒவ்வொரு அலங்காரத்திலும் முருகப் பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஆன்மிகச் சொற்பொழிவு, பரதநாட்டியம் ஆகிய நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
விழாவின் 6ஆவது நாளான செவ்வாய்க்கிழமையன்று மாலையில் சூரசம்ஹாரம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சூரபத்மனின் ஆணவத்தை அழிக்கும் நிகழ்ச்சியில் வீரபாகு போர்க்களத்தில் நிற்க, முருகன் தங்கவேல் கொண்டு கஜமுகாசுரன், தாரகாசுரன், சிங்கமுகாசுரன் உள்ளிட்ட ஒவ்வொரு அசுரனையும் அழிக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. கடைசியில் மாமரத்தைப் பிளந்து சூரபத்மனின் ஆணவத்தை அழிக்கும் நிகழ்வு நடைபெற்றது. 
இதையடுத்து போர்புரிந்த முருகனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இந்த உற்சவத்தில் பக்தர்கள் வளையல்கள், மங்கலப் பொருள்களான மாங்கல்யம், குங்குமம், மஞ்சள், பழவகைகள், பலகாரங்கள், பட்டு வஸ்திரம் உள்ளிட்ட சீர்வரிசைகளை திருக்கல்யாணம் நடைபெறும் கோயில்களுக்கு ஊர்வலமாகக் கொண்டு வந்தனர். அவர்கள் இந்த உற்சவத்தில் திரளாகக் கலந்துகொண்டு வள்ளி, தேவசேனா சமேத முருகனின் திருக்கல்யாண உற்சவத்தைக் கண்டு, சுவாமி தரிசனம் செய்தனர். விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் செய்யப்பட்டது. இதையடுத்து, இரவில் அனைத்து கோயில்களிலும் சுவாமி ஊர்வலம் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை அந்தந்த கோயில்களின் விழாக் குழுவினர், பொதுமக்கள் செய்திருந்தனர். 
இதனிடையே, மாமல்லபுரம் மல்லிகேஸ்வரி சமேத மல்லிகேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற திருக்கல்யாண உற்வத்தையொட்டி ஹோம பூஜை, கலச பூஜைகள் நடைபெற்றன. வள்ளி, தேவசேனா சிறப்பு அலங்காரத்தில் வீற்றிருக்க, முருகனின் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், விழாக் குழுவினர், பொதுமக்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com