ஆட்சீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான ரூ.10 கோடி மதிப்பு நிலம் மோசடியாக விற்பனை: 5 பேர் கைது

மதுராந்தகத்தை அடுத்த அச்சிறுப்பாக்கத்தில் அமைந்துள்ள ஆட்சீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ரூ.10 கோடி மதிப்பிலான நிலப்பகுதியை போலி பட்டாக்கள் மூலம் விற்ற மோசடி


மதுராந்தகத்தை அடுத்த அச்சிறுப்பாக்கத்தில் அமைந்துள்ள ஆட்சீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ரூ.10 கோடி மதிப்பிலான நிலப்பகுதியை போலி பட்டாக்கள் மூலம் விற்ற மோசடி கும்பலைச் சேர்ந்த 5 பேரை மாவட்ட நிலப்பறிப்பு தடுப்புப் பிரிவு போலீஸார் வியாழக்கிழமை இரவு கைது செய்தனர். மற்ற 4 பேரைத் தேடி வருகின்றனர். 
அச்சிறுப்பாக்கத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான ஆட்சீஸ்வரர் கோயிலுக்கு நிரந்தர வருவாயை அளிக்கும் வகையில் கடமலைப்புத்தூர், ஆத்தூர், இந்தலூர், பள்ளிப்பேட்டை, அச்சிறுப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நிலங்களும், வணிக வளாகங்களும் நிரந்தர சொத்துகளாக உள்ளன. அவற்றின் மதிப்பு சுமார் ரூ.700 கோடியாகும்.
இக்கோயிலுக்கு சொந்தமான இடங்களில் ஒரு பகுதி, அச்சிறுப்பாக்கம் பழைய காவல் நிலையத்துக்கு அருகில் சுமார் 4 ஏக்கர் மற்றும் 54 சென்ட் உள்ளது. கோயிலில் வேலை செய்பவர்களுக்கு கோயில் மானியமாக உள்ள நிலப்பகுதி இதுவாகும். அவர்கள் கோயில் வேலையை விட்டு நின்று விட்டால் அந்த நிலத்தின் மூலம் எந்த வருவாயையும் எடுக்கக் கூடாது என்பது இந்து சமய அறநிலையத் துறையினர் வகுத்த விதிமுறையாகும். 
எனினும், கோயில் மானியமாகத் திகழும் இந்தப் பகுதியை அச்சிறுப்பாக்கம் வடக்கு காலனியைச் சேர்ந்த முன்னாள் பேரூராட்சி உறுப்பினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முக்கிய பிரமுகருமான விடியல் வேலன் தலைமையிலான குழுவினர் வருவாய்த் துறை, பத்திரப் பதிவுத்துறை ஆகியவற்றின் அதிகாரிகளின் துணை கொண்டு போலி பட்டா, மற்றும் சான்றுகள் மூலம் விற்று பல கோடி ரூபாய் சம்பாதித்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதை அறிந்த அப்பகுதி சமூக ஆர்வலர்கள் மதுராந்தகம் சார் ஆட்சியர், வட்டாட்சியர் உள்ளிட்ட வருவாய் அதிகாரிகளுக்கு புகார் மனு ஒன்றை அளித்தனர்.
அதன்பேரில், வருவாய்த் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, கோயில் நிலத்தை வருவாய்த் துறையினர் மூலம் போலி பட்டா பெற்றும், அச்சிறுப்பாக்கம் பத்திரப் பதிவாளர் அலுவலக அதிகாரிகள் மூலம் சலுகைகள் பெற்றும் விடியல் வேலன் தலைமையிலான கும்பல் பல பேருக்கு விற்று கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்துள்ளது தெரிய வந்தது. இந்த மோசடி தொடர்பாக, அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோயில் செயல் அலுவலர் வி.கே.சரவணன், காஞ்சிபுரம் மாவட்ட நிலப் பறிப்பு தடுப்புப் பிரிவு காவல்துறையில் புகார் மனுவை அளித்தார்.
அந்த மனுவைப் பெற்ற போலீஸார் அச்சிறுப்பாக்கத்துக்கு வியாழக்கிழமை வந்தனர். அச்சிறுப்பாக்கம் போலீஸாரின் உதவியுடன் அவர்கள் தேடுதல் வேட்டையில் இறங்கினர். இந்த மோசடிக் கும்பலுக்கு தலைவராகச் செயல்பட்ட விடியல் வேலன் மற்றும் ஜோதி, அன்பழகன், லட்சுமி, முனியம்மாள்(52), ராதா (56), ருக்மணி (56), முனியம்மா (54), சத்யா (38) ஆகியோரை மாவட்ட நிலப் பறிப்பு தடுப்பு போலீஸார் தேடினர். அதையடுத்து, முனியம்மாள், ராதா, ருக்மணி, முனியம்மா, சத்யா ஆகிய 5 பேரையும் கைது செய்து காஞ்சிபுரம் அழைத்துச் சென்றனர். எனினும், விடியல் வேலன், ஜோதி, அன்பழகன், லட்சுமி ஆகியோர் தலைமறைவாகி விட்டனர். அந்த 4 பேரையும் போலீஸார் தேடி வருகின்றனர். 
இதனிடையே, மோசடிக் கும்பலுக்கு துணைபோன வருவாய்த் துறை, பத்திரப் பதிவுத் துறை அலுவலர்களையும் போலீஸார் கைது செய்ய வேண்டும்; இவ்வாறு பல இடங்களில் போலி பட்டாவின் மூலம் கோயிலுக்குச் சொந்தமான எந்தெந்த நிலங்கள் விற்கப்பட்டுள்ளன என்பதைக் கண்டறிய காவல்துறையும், இந்து சமய அறநிலையத் துறையும் விரைந்து செயல்பட வேண்டும் என்று இப்பகுதி சமூக ஆர்வலர்களும், பக்தர்களும் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com