குளத்தில் குப்பைக் கழிவுகள்: நடவடிக்கை கோரி ஆர்ப்பாட்டம்

கோனேரிக்குப்பம் குளத்தில் குப்பைக்கழிவுகளை கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அப்பகுதியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குளத்தில் குப்பைக் கழிவுகள்: நடவடிக்கை கோரி ஆர்ப்பாட்டம்


கோனேரிக்குப்பம் குளத்தில் குப்பைக்கழிவுகளை கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அப்பகுதியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரத்தை அடுத்த கோனேரிக்குப்பத்தில் ஊராட்சி குளம் உள்ளது. இக்குளத்தில் தனியார் நிறுவனங்களில் இருந்து சேகரிக்கப்படும் குப்பையை மொத்தமாக கொட்டி மாசு ஏற்படுத்துகின்றனர். அதோடு, அக்குப்பைகளை எரிப்பதால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலம் உருவாகி பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி அப்பகுதியினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பெய்து வரும் மழையில் குளங்கள் நிரம்பி வருவதால் கோனேரிக்குப்பம் குளத்தில் குப்பையை கொட்டக் கூடாது என கோஷங்கள் எழுப்பினர். இதுகுறித்து அப்பகுதியினர் கூறியதாவது:
கோனேரிக்குப்பம் குளத்தில் தொடர்ந்து குப்பை கொட்டுவதால் மழை பெய்தும் தண்ணீர் நிற்காமல் வீணாகி வெளியே சென்றுவிடுகிறது. குப்பை கொட்டுவதை நிறுத்தி குளத்தை தூர்வாரி தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தனியார் நிறுவனங்களில் இருந்து கொட்டப்படும் குப்பையைத் தரம் பிரிக்காமல் இரவோடு இரவாக குளத்தில் கொட்டிச் செல்வதால் கால்நடைகள் மிகவும் பாதிக்கப்படுகின்றன. மேலும், அந்த குப்பைக்கழிவுகளை உணவாக உட்கொள்ளும் கால்நடைகளின் உடல்நிலையும் மோசமாகிறது. 
மழைக்காலங்களில், மழைநீருடன் சேர்ந்த கழிவுநீர் குடியிருப்புப் பகுதிக்கு வந்தடைவதால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. இதனால், பொதுமக்களுக்கு தொற்றுநோய் தாக்கும் சூழல் உண்டாகிறது. அண்மையில், இக்குளத்தை 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் கிராமத்தினர் தூர்வாரிப் பராமரித்தோம். ஆனால், தொடர்ந்து இப்பகுதியில் சில விஷமிகள் குப்பைக்கழிவுகளை கொட்டிச் செல்கின்றனர். இதுதொடர்பாக, பல முறை மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com