காஞ்சிபுரம்

நீர் மேலாண்மைத் திட்டங்களுக்கு ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

தினமணி

தமிழகத்தின் நீர்மேலாண்மைத் திட்டங்களுக்கு ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கி செயல்படுத்த வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
 பாமக சார்பில் "கரம் கொடுப்போம், பாலாறு காப்போம்' என்ற பெயரில் பிரசாரம் நடத்திவரும் அக்கட்சியின் இளைஞரணித் தலைவரும், எம்.பி.யுமான அன்புமணி ராமதாஸ் காஞ்சிபுரத்தை அடுத்த வாலாஜாபாத் பாலாற்றுப் பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை வருகை புரிந்தார். அங்கு அவர் பாலாற்றில் திறந்துவிடப்படும் கழிவு நீர் மற்றும் குப்பைக்கழிவுகளால் சூழப்பட்டிருக்கும் பகுதியை பார்வையிட்டார். பாலாற்றை மீண்டும் பழைய நிலைக்கு மீட்டெடுக்க வேண்டும் என அப்பகுதியினருக்கு அறிவுறுத்தினார். இதைத் தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
 பாமக சார்பில் பாலாற்றைப் பாதுகாக்க விழிப்புணர்வுப் பிரசாரம் செய்து வருகிறோம். அதன்படி, சனிக்கிழமை வேலூரிலும், ஞாயிற்றுக்கிழமை காஞ்சிபுரம் மாவட்டம் வழியாகச் செல்லும் பாலாற்றுப் பகுதிகளையும் பார்வையிட்டு ஆய்வு நடத்தி வருகிறோம். பாலாறு கர்நாடக மாநிலம் நந்திதுர்கம் என்ற இடத்தில் தொடங்கி, அந்த மாநிலத்தில் 93 கி.மீ. தூரம் பயணம் செய்கிறது. அங்கு, 17 தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன.
 அதைத் தொடர்ந்து, ஆந்திரத்தில் 23 கி.மீ. தூரம் பயணம் செய்கிறது. அங்கு, 33 தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. இதையடுத்து, தமிழகத்தில் மட்டும் 223 கி.மீ தூரம் பயணித்து கல்பாக்கம் அருகே சதுரங்கப்பட்டினத்தில் வங்கக் கடலில் கலக்கிறது. ஆனால், ஒரே ஒரு தடுப்பணை மட்டும்தான் கட்டப்பட்டுள்ளது. அதுவும் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது. அவர்களுக்குப் பின் 50 ஆண்டு காலம் ஆட்சிபுரிந்த திமுக, அதிமுக அரசுகள் எந்தவொரு இடத்திலும் தடுப்பணை கட்டி நீரைத் தேக்கி வைக்கவில்லை.
 அண்மையில் தமிழக அரசு "தடுப்பணை கட்டுவோம்' என அறிவித்தது. எனினும், அந்த அறிவிப்பு காகித அளவிலேயே உள்ளது. இதுவரை தடுப்பணை கட்டும் பணிகள் தொடங்கப்படவில்லை. பாலாற்றில் மட்டும்தான் இதுவரை அதிகமாக மணல் கொள்ளையும் நடந்துள்ளது. ஆந்திரத்தில் 8 மாத காலமாக, தமிழக ஆட்சியாளர்களுக்குத் தெரியாமலேயே சுமார் 6 அடியிலிருந்து 26 அடியாக உயர்த்தி தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. இதற்கு தமிழக அரசின் அனுமதி அவசியம். ஆனால், அதை மீறி ஆந்திரம் அணைகளைக் கட்டியுள்ளது. இந்த விஷயத்தில் தமிழக அரசு மெத்தனமாக இருந்துள்ளது.
 பாலாற்றில் ஒவ்வொரு 5 கி.மீ. தூரத்திலும் ஒரு தடுப்பணையைக் கட்ட வேண்டும். அந்த அணைகள் இருந்திருந்தால், கடந்த 2015-இல் ஏற்பட்ட பெரு வெள்ளத்தின்போது, 31 டிஎம்சி நீர் வீணாகியிருக்காது. மேலும், நிலத்தடி நீரும் உயர்ந்திருக்கும். பாலாற்றில் இருந்த 600 ஊற்றுகள் தற்போது மறைந்து விட்டன.
 அந்தக் காலத்தில், பாலாறு மூலம் 3 ஆயிரம் ஏரிகளுக்கு நீர் சென்றது. அதோடு, செழுமையான நெற்களஞ்சியமாக இப்பகுதி விளங்கியது. தற்போது வறண்டுபோய் பரிதாப நிலையில் உள்ளது. எனவே, பழைய பாலாற்றை மீட்டுக் கொண்டுவர வேண்டும். பாலாற்று பிரசாரம் போல், தாமிரபரணி, காவிரி, வைகை, அத்திக்கடவு அவினாசி, அட்டப்பாடி திட்டம், கொள்ளிடம் தடுப்பணை உள்ளிட்ட நீர்நிலைகள் பாதுகாப்பு, நீர் மேலாண்மைத் திட்டம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வுப் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
 அடுத்த 4 ஆண்டு காலத்தில் 20 நீர்த் திட்டங்களை செயல்படுத்த, சுமார் ரூ.1 லட்சம் கோடியை ஒதுக்க வேண்டும். அதன்மூலம், ஆண்டுக்கு ரூ.25 ஆயிரம் கோடி செலவு செய்து, தாமிரபரணி, அத்திக்கடவு அவினாசி, 58 கால்வாய்த் திட்டம், தோனிமடு திட்டம், நல்லாறு, பாண்டியாறு, தென்பெண்ணை, பாலாறு இணைப்புத் திட்டம், காவிரி குண்டாறு திட்டம் உள்ளிட்ட அனைத்துத் திட்டங்களையும் செயல்படுத்த வேண்டும் என்றார் அவர்.
 அப்போது, பாமக தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
 செங்கல்பட்டில்....
 இதனிடையே, செங்கல்பட்டில் பாமக சார்பில் பிரசாரப் பயண பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு அன்புமணி ராமதாஸ் பேசுகையில் "தமிழ்நாட்டில் பாலாறு 223 கி.மீ. தூரம் பாய்கிறது. மாநிலத்தில் வாலாஜா அருகே உள்ள ஒரே ஒரு இடத்தில்தான் அதன் நீர் தேக்கிவைக்கப்படுகிறது.
 அதன் மூலம் 14 ஆயிரம் ஏக்கர் பயிர் செய்யப்படுகிறது. கடந்த 50 ஆண்டுகளாக இந்த ஆற்றில் ஒரு தடுப்பணையும் கட்டப்படவில்லை. பாலாற்றில் 3 அடி, 5 அடி, 10 அடி என இடத்திற்கு தகுந்தாற்போல் 5 கி.மீ. தூரத்துக்கு ஒரு தடுப்பணை கட்டப்படவேண்டும். இந்த நடவடிக்கை மூலம் மணல் கொள்ளையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் வேலூர் மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாக உள்ளது பாலாறு. இதில், அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைவரும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும்' என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதி நிறுவன உரிமையாளா் வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனை

புனித வியாழன்: தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி

சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் ஒருவா் பலி; 13 போ் காயம்

அரசு பள்ளியில் நூற்றாண்டு விழா

சேலம் நீதிமன்றத்தில் சட்டக் கல்லூரி மாணவா்கள் தூய்மைப் பணி

SCROLL FOR NEXT