காஞ்சிபுரம்

மயானத்துக்கு பாதை இல்லாததால் அவதி: தற்காலிகப் பாதை அமைத்து கிராம மக்கள் போராட்டம்

தினமணி

மாமல்லபுரம் அருகே குழிப்பாந்தண்டலம் பகுதியில் மயானத்துக்கு பாதை இல்லாததால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் மண்வெட்டி, கடப்பாரையுடன் திரண்டு சென்று தற்காலிகப் பாதை அமைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டை அடுத்த மாமல்லபுரம் அருகில் உள்ள குழிப்பாந்தண்டலம் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 1500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
 இந்த கிராமத்தில் வசிக்கும் மக்கள் தங்கள் குடும்பத்தில் இறந்தவர்களை அடக்கம் செய்ய ஊர்வலமாகக் கொண்டு செல்வதற்கு மயானப் பாதையை கடந்த 300 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்தனர்.
 இதனிடையே, சுடுகாட்டிற்குச் செல்லும் சாலையில் தனியார் ஒருவர் அண்மையில் இடம் வாங்கி விட்டார். அவர் அங்கு சாலையை உழுதுவிட்டு அவ்வழியாக பிணங்களை எடுத்துச் செல்ல எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. எனவே, தங்கள் கிராமத்தில் இறந்தவர்களை மயானத்திற்கு எடுத்துச் செல்ல பாதை அடைக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளிடம் நிவாரணம் கோரி மனு அளித்தனர்.
 அதில், இறந்தவர்களை சுமந்து மயானத்திற்கு எடுத்துச் செல்ல நில எடுப்புப் பிரிவின் கீழ் 10 அடி அகலத்தில் 3 சென்ட் நிலத்தை தங்களுக்காக கையகப்படுத்தி மயானத்திற்கு செல்ல பாதை ஏற்படுத்தித் தர வேண்டும் எனக் கோரியிருந்தனர். பல முறை அவ்வாறு கோரிக்கை விடுத்து வந்துள்ளதாக கிராம மக்கள் கூறுகின்றனர். எனினும், அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளாததால் சடலங்களை அவ்வழியில் கொண்டு செல்ல முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வந்தனர்.
 இந்நிலையில், இந்த கிராம மக்கள், அனைத்துக் கட்சியினர் மற்றும் பெண்கள் உள்ளிட்டோர் கடப்பாரை, மண்வெட்டியுடன் ஞாயிற்றுக்கிழமை வயல்வெளிப் பகுதிக்குச் சென்றனர். அங்கு தற்காலிகமாக பாதை அமைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். பாமக நிர்வாகி பத்மநாபன் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் "மயானத்திற்கு செல்ல பாதை அமைத்துத் தர வேண்டும்' என்று கோஷமிட்டனர். மயானப் பகுதியில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தால் குழிப்பாந்தண்டலம் கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
 இந்தப் போராட்டத்தில் அதிமுக கிளைச் செயலாளர் மோகன், மகளிர் அணி ஜோதி மற்றும் 200-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்துகொண்டனர். இது தொடர்பாக அவர்கள் கூறுகையில் "நில எடுப்புப் பிரிவின் கீழ் தனியாரிடம் இருந்து 3 சென்ட் நிலம் வாங்கி மயானத்திற்கு செல்ல சாலை அமைத்துத் தர வேண்டும். இல்லாவிட்டால் அடுத்தகட்டமாக கிராம மக்கள் கூட்டாக இணைந்து சாலை மறியலில் ஈடுபடுவோம். எங்கள் ரேஷன் கார்டுகளை ஒப்படைக்கும் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபடுவோம். எங்கள் கோரிக்கை தொடர்பாக தமிழக முதல்வர், மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோருக்கும் மனு அனுப்பியுள்ளோம்' என்று தெரிவித்தனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

5 பன்னீர்செல்வங்களின் வேட்புமனுக்களும் ஏற்பு: போட்டி உறுதி!

தமிழக காவல் துறையில் இளநிலை செய்தியாளர் வேலை வேண்டுமா?

SCROLL FOR NEXT