காஞ்சிபுரம்

புராதனச் சின்னங்களை சேதப்படுத்தினால் நடவடிக்கை: தொல்லியல் துறை எச்சரிக்கை

DIN


மாமல்லபுரத்தில் உள்ள புராதனச் சின்னங்கள் மற்றும் தொல்லியல் துறை சார்ந்த இடங்களை தடை செய்யப்பட்ட  பகுதிகளாக அறிவித்து, இந்திய தொல்லியல் துறையினர் புதன்கிழமை அறிவிப்பு பலகைகளை வைத்துள்ளனர். 
 இந்திய தொல்லியல் ஆய்வுத்துறை உத்தரவின்படி வைக்கப்பட்டுள்ளஅறிவிப்பு பலகையில் கூறப்பட்டுள்ளதாவது:   புராதனச் சின்னங்கள் மற்றும் தொல்லியல் இடங்கள் பாதுகாப்பு சட்டம் 1958 மற்றும் விதிகள் 1950-இன் படி பின்வரும் செயல்கள் தடைசெய்யப்பட்டுள்ளது.  நினைவுச் சின்னத்துக்கு சேதம் ஏற்படும் வகையில்  அதன் மீது ஏறுவதோ, இறங்குவதோ அல்லது கிறுக்குவதோ கூடாது. எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களை எடுத்துச் செல்லக்கூடாது. 
அனுமதிக்கப்பட்ட இடங்களைத் தவிர்த்து மற்ற இடங்களில் சமைப்பதோ, சாப்பிடுவதோ கூடாது. எத்தகைய  பொருள்களையும் விற்பனை செய்யக் கூடாது. விளம்பரப் பதாகைகளை வைக்கக்கூடாது. பார்வையாளர்களை நினைவுச் சின்னத்தில் சுற்றிக் காண்பித்தல், பணத்துக்காக புகைப்படம் எடுத்தல் கூடாது. நினைவுச் சின்னத்தின் அருகில் பிச்சை எடுக்கக்கூடாது. நினைவுச் சின்னங்களில் கடைப்பிடிக்கப்படும் எந்த நடைமுறையையும் பண்பாட்டையும் மீறிச் செயல்படக்கூடாது. பராமரிப்பு பொருள்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் தவிர, மற்ற வாகனங்கள் செல்ல அனுமதியில்லை. 
 நினைவுச் சின்னங்கள் உள்ள பகுதிகளில் விலங்குகளை அழைத்துச் செல்ல அனுமதி கிடையாது. இப்பகுதிகளில் முன் அனுமதி பெறாமல் கூட்டம் நடத்துவதோ,  வரவேற்பு நிகழ்ச்சிகள், மாநாடு மற்றும் பொழுது போக்கு நிகழ்ச்சிகள் நடத்துவதோ கூடாது. மேலும் இந்தப் பகுதி பிளாஸ்டிக் இல்லா மண்டலமாக பாதுகாக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.   
இதுகுறித்து மாமல்லபுரம் தொல்லியல் துறை அலுவலர் பரணிதரன் கூறியது: சுற்றுலாப் பயணிகள் சிலர் புராதனச் சின்னங்களை சிதைக்கும் வகையில் ஆயுதங்களால் கிறுக்குவது, செதுக்குவது போன்ற காரியங்களில் ஈடுபட்டு வருகின்றனர். காதலர்கள் தங்கள் பெயர்களை எழுதி வைக்கின்றனர். மேலும், சமூக விரோதிகள் சிற்பங்களை சேதப்படுத்துகின்றனர். அதனால் புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பதற்காக, மாமல்லபுரம் கடற்கரைக் கோயில், ஐந்துரதம், வெண்ணை உருண்டைப் பாறை , மகிஷாசுரமர்த்தினி கோயில், லைட்ஹவுஸ் ஆகிய இடங்கள் தடை செய்யப்பட்ட  பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. 
இப்பகுதிகளில் விதிகளை மீறுவது தண்டனைக்குரிய குற்றமாகும். விதிமுறைகளை மீறுவோருக்கு ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படும். 
மேலும், நினைவுச் சின்னங்களை சிதைப்பவர், அகற்றுபவர், மாற்றி அமைப்பவர்,  தோற்றப்பொலிவைக் குலைப்பவர்கள் எவராயினும் அவர்கள், 2010-ஆம் ஆண்டு பழங்கால நினைவுச் சின்னங்கள், தொல்பொருள் ஆய்வு இடங்கள் மற்றும் எஞ்சிய பகுதிகள் பாதுகாப்பு சட்டத்தின்படி இரண்டாண்டுகள் சிறைத் தண்டனை (அ) ரூபாய் ஒரு லட்சம் வரை அபராதம் (அ) இவ்விரு தண்டனையும் சேர்ந்து விதிக்கப்பட்டு தண்டிக்கப்படத் தக்கவர் ஆவார். இதற்கான அறிவிப்புப் பலகைகள்  தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வைக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்தில் முதியவா் உயிரிழப்பு

திருவள்ளூா்: 14 வேட்புமனுக்கள் ஏற்பு, 19 நிராகரிப்பு

தேமுதிக வேட்பாளா் அறிமுக கூட்டம்

உடலில் அலகு குத்தி அம்மன் வீதியுலா சென்ற பக்தா்கள்

முருகன் கோயில் உண்டியல் வசூல் ரூ. 1.05 கோடி

SCROLL FOR NEXT