கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டக் குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி

ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்தில்,  ஓ.எம்.மங்கலம், கப்பாங்கோட்டூர் உள்ளிட்ட 8 கிராமங்களைச் சேர்ந்த கிராம ஊராட்சி
கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டக் குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி


ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்தில்,  ஓ.எம்.மங்கலம், கப்பாங்கோட்டூர் உள்ளிட்ட 8 கிராமங்களைச் சேர்ந்த கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் கிராம ஊராட்சிகளில், 2019-20-ஆம் நிதியாண்டுக்கான கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டம்  தயாரிக்கவும், கிராம ஊராட்சிகளின் வருவாயைப் பெருக்கவும், ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டக் குழு தொடங்கப்பட்டுள்ளது.  இக்குழுவில், ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்பு பிரதிநிதிகள் இருவர், கிராம வறுமை ஒழிப்பு சங்கப் பிரதிநிதிகள் இருவர், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் ஊக்குநர் ஒருவர், ஊராட்சி செயலர் என மொத்தம் 6 பேர் உள்ளனர்.
இக்குழுவினர் அந்த கிராமங்களில் வரும் 2019-20 ஆம் நிதியாண்டில்  செயல்படுத்தப்படவுள்ள பணிகளைத் தேர்வு செய்தல், கிராமங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், ஊராட்சிக்கு தேவையான வருவாயைப் பெருக்குதல், வரி வசூல் செய்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இந்நிலையில், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் உள்ள 58 ஊராட்சிகளில் நியமிக்கப்பட்டுள்ள கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டக் குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம் பிப். 18 முதல் 28-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது.
இதில் முதல்கட்டமாக ஒன்றியத்துக்கு உள்பட்ட எடையார்பாக்கம், ஓ.எம்.மங்கலம், கப்பாங்கோட்டூர், செல்லம்பட்டிடை, கோட்டூர், பிச்சிவாக்கம், துளசாபுரம், சிவபுரம் ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்த கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டக் குழுவினர்களுக்கான பயிற்சி முகாம் ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. உதவித் திட்ட அலுவலர் முரளி தலைமை வகித்தார்.
மாநில ஊரக வளர்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனத்தின் மாவட்ட பயிற்றுநர்கள் கண்மணி, சித்ரா ஆகியோர் கிராமங்களுக்கு தேவையான வருவாயை எவ்வாறு அதிகரிப்பது,  ஊராட்சிப் பகுதிகளில் அடிப்படை வசதிகளை எவ்வாறு மேம்படுத்துவது, ஊராட்சிகளில் செயல்படுத்த வேண்டிய வளர்ச்சிப் பணிகளை எவ்வாறு தேர்வு செய்வது என கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டக் குழுவினர்களுக்கு பயிற்சி வழங்கினர்.  இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீதா. சீனிவாசன், வசுமதி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பானுமதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com