பேருந்துகளை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டம்

செரப்பனஞ்சேரியில் அரசுப் பேருந்துகள் நிற்காமல் செல்வதைக் கண்டித்து அப்பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை பேருந்துகளை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 
பேருந்துகளை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டம்


செரப்பனஞ்சேரியில் அரசுப் பேருந்துகள் நிற்காமல் செல்வதைக் கண்டித்து அப்பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை பேருந்துகளை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட செரப்பனஞ்சேரி பகுதியில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். 
செரப்பனஞ்சேரி சுற்று வட்டாரத்தில் 5-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதி மக்கள், தாம்பரம், காஞ்சிபுரம்,  ஸ்ரீபெரும்புதூர்  உள்ளிட்ட இடங்களுக்குச் செல்ல செரப்பனஞ்சேரிக்கு வந்துதான் பேருந்து ஏற வேண்டும். 
இந்நிலையில், தாம்பரம்- காஞ்சிபுரம் வழித்தடத்தில் செல்லும் அரசுப் பேருந்து தடம் எண்- 79 கடந்த சில மாதங்களாக செரப்பனஞ்சேரி பேருந்து நிறுத்தத்தில் நின்று செல்வதில்லை என்று கூறப்படுகிறது. 
இதனால் இப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர். இது தொடர்பாக, காஞ்சிபுரம் மண்டல போக்குவரத்து அலுவலகத்திலும், மாவட்ட ஆட்சியரிடமும் புகார் மனு  அளித்தனர். இதையடுத்து, செரப்பனஞ்சேரி பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகள் நின்றுசெல்லும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். பேருந்து ஓட்டுநர்களுக்கும் உத்தரவு பிறப்பித்தனர். ஆனால், செரப்பனஞ்சேரி பேருந்து நிறுத்தத்தில் தடம் எண்- 79 பேருந்துகள் நிற்காமல் சென்றதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், சிஐடியு விவசாய சங்க மாவட்டச் செயலர் நேரு தலைமையில், மாதர் சங்கத்தினர் உள்ளிட்டோருடன் இணைந்து  தடம் எண்: 79 பேருந்துகளை வெள்ளிக்கிழமை சிறை பிடித்தனர். அத்துடன், வண்டலூர்-வாலாஜாபாத் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். 
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போக்குவரத்துத் துறை அதிகாரிகள் மற்றும் போலீஸார் ஆகியோர், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இனிமேல் செரப்பனஞ்சேரி பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகள்  நின்று செல்லும் என அதிகாரிகள் உத்தரவாதம் வழங்கியதையடுத்து, மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com